"உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள்'' என்று கலைஞர் மறைந்து ஒரே வாரத்தில் அவருடைய நினைவிடத்தில் அழகிரி கூறினார். அதிர்வேட்டுகளால் தி.மு.க.வை அழகிரி பிளக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது.
கலைஞர் மறைந்த துக்கத்திலிருந்து சாதாரணத் தொண்டன்கூட மீளாத நிலையில், கட்சிக்கு சேதம்விளைவிக்கும் கருத்தை அழகிரி கூறியதை ஸ்டாலினும், தி.மு.க. நிர்வாகிகளும் கண்டுகொள்ளாமல் தவிர்த்தனர்.
இந்நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி ஒரு லட்சம் ஆதரவாளர்களுடன் கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அழகிரி கூறினார். அவருடைய ஒவ்வொரு பேட்டியும் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது. என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அதேசமயம், அழகிரி நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கக்கூட மதுரை தி.மு.க.வினர் ஆர்வம் காட்டவில்லை. ரஜினி மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் அழகிரி தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளிவந்தவுடன், அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள்கூட அதை ஏற்க மறுத்தனர். ""தி.மு.க.வில் இணைவதைத் தவிர, சேதம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கமாட்டோம்'' என்று அவர்கள் அழகிரியிடம் கூறிவிட்டனர், வெளியிலும் தெரிவித்தனர்.
இருந்தாலும், சவாலை நிறைவேற்ற வேண்டுமே என்று பேரணிக்கு ஆள்திரட்டும் வேலையிலும் அழகிரி கவனம் செலுத்தினார். போதுமான ஆதரவு இல்லாத நிலையில், தன்னையும் ஆதரவாளர்களையும் கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் என்றுகூட சொல்லிப் பார்த்தார். ஆனால், அழகிரியை கட்சியில் சேர்த்தால், மீண்டும் மதுரை தி.மு.க.வில் குழப்பம் ஏற்படும் என்று ஸ்டாலின் நினைத்தார்.
அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த தென் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் 90% பேர் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். இந்நிலையில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தங்களை அவர் பழிவாங்குவார் என்று அவர்கள் பயந்தார்கள். அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்குக்கூட பயந்து நடுங்கிய பழைய நினைப்பு அவர்களை வாட்டியது. இதையெல்லாம் தி.மு.க. தலைமையிடம் எடுத்துக் கூறினார்கள். அழகிரியின் நடவடிக்கைகளால், மதுரை மக்களிடம் தி.மு.க. மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மறைந்திருக்கிற நிலையில் மீண்டும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தலைமை முடிவெடுத்துவிட்டது.
எனவேதான், தி.மு.க.விலிருந்து ஒதுங்கியிருந்த கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் உள்ளிட்டோரை தி.மு.க.வில் மீண்டும் இணைத்தார் ஸ்டாலின். இதுபோன்ற அதிருப்தியாளர்களை நம்பித்தான் அழகிரி சவால் விடுத்திருந்தார். அதுவும் கைவிட்டுப் போன நிலையில்... கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகளை அழகிரி தரப்பு தொடர்புகொண்டு ஆட்களைச் சேர்த்தது.
செப்டம்பர் 5-ஆம் தேதி காலையில் சென்னை-திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் அழகிரியின் ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினர். பேரணி தொடங்க வேண்டிய காலை 10:00 மணிக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே கூடியிருந்தனர். பேரணிக்காக சென்னை -கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருந்த முதல்வர்+துணைமுதல்வர் பங்கேற்கும் அரசு விழாவின் நேரத்தைக்கூட மாற்றி வைத்தார்கள். ஆனால், பேரணிக்கு அனுமதி பெற்றிருந்த வாலாஜா சாலையில்கூட வழக்கம்போல போக்குவரத்து இருந்தது.
11:30 மணிவரை அழகிரி தரப்பு காத்திருந்தும் 10 ஆயிரம்பேரை தொட பெரும்பாடானது.. இது அழகிரிக்கும் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்தப் பேரணியில் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் மன்னன், கோபிநாதன், இசக்கிமுத்து, முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தார்கள். கட்சியில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களோ, மதுரையில் பிரபலமான கட்சிப் பிரமுகர்களோ இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பகுதியினர் கட்சி உறுப்பினர்களும் இல்லை. ஆனால், பல மாவட்ட நிர்வாகிகள் அழகிரிக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும், தனிக்கட்சி தொடங்கினால் அதில் இணைவதாக அவர்கள் உறுதியளித்திருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.
தனக்குப் பின்னால் ஒன்றரை லட்சம் தி.மு.க.வினர் குவிந்திருப்பதாக அழகிரி சொன்னாலும், அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் இருக்கலாம் என்றே உளவுத்துறையினர் தெரிவித்தனர். ஆளும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆதரவோடு நடத்திய இந்த பேரணி தி.மு.க.வை அதிரவைக்கும் அணுகுண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனிவெடியின் தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை. அழகிரியும் மீடியாக்களிடம் நன்றி மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அழகிரியின் பேரணிக்காக, கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், சேகர்பாபு டீம் சற்று ஒதுங்கி நின்றது.
""அவர்கள் விரும்புகிறபடி வந்து அஞ்சலி செலுத்தட்டும்'' என ஸ்டாலின் சொல்லியிருந்தாராம். பூ அலங்காரம் உள்ளிட்டவற்றை அழகிரி ஆட்கள் செய்தனர்.
அழகிரியின் பேரணி குறித்து கருத்துக் கேட்டபோது பொருளாளர் துரைமுருகனும் “"நோ கமெண்ட்ஸ்'’என்று தவிர்த்துவிட்டார். அதாவது போணி ஆகாத அழகிரியை கண்டுகொள்ளாமல் தி.மு.க. தவிர்க்கிறது என்கிறார்கள்.
-ஆதனூர் சோழன், அருண்பாண்டியன்