6-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு வரும் முதல் பொங்கல் திருவிழா இது. அதனால், தமிழ்நாடு அரசு சார்பில் இந்தாண்டு பெரிய அளவில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்தார்கள் குடும்பத் தலைவிகள். பொங்கலுக்கு 10 தினங்களுக்கு முன்பே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
இந்த பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இல்லை. 21 பொருட்களான பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, ரவை 1 கிலோ, பாசிப்பருப்பு 500, உளுத்தம்பருப்பு 500 கிராம், உப்பு 500 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், புளி 200 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், நெய் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், மிளகு 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், துணிப்பை, கரும்பு என 21 பொருட்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப் படுகிறது என அறிவிக்கப்பட்டது. "அ.தி.மு.க சார்பில், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 2500 ரூபாய் கொடுத்தோம். தி.மு.க அரசு மக்களை ஏமாற்றிவிட்டது' எனக் குற்றம் சாட்டப்பட்டு, அது வைரலாக்கப் பட்டது. உண்மையில், தேர்தலை மனதில் வைத்து கடந்த பொங்க லுக்கு அவ்வளவு தொகையை வழங்கியது எடப்பாடி அரசு. அதற்கு முன்பு, ஊரக உள்ளாட்சித் தேர்தலை கணக்கிட்டுத் தரப்பட் டது. ஜெயலலிதா ஆட்சியில் 100 ரூபாய்தான் கொடுத்தார். அதற்கு காரணம், பொங்கல் பரிசுப் பை என்பதைத் தொடங்கி வைத்தவரே, தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என அரசாணை வெளியிட்ட கலைஞர்தான். தை முதல்நாள் புத்தாண்டு என்பதை மாற்றிய ஜெயலலிதா, அதனை ஈடுகட்ட 100 ரூபாய் கொடுத்தார்.
10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க., பணம் தராதது ஒரு வகையில் ஏமாற்றம் தான். அதேநேரத்தில், கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் வழங்கியிருந்ததை மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. தரப்பில் அனைவரும் நினைவூட்டி, "முழுக்கரும்பு மற்றும் ஆவின் நெய்யுடன் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன' என்றனர். அ.தி.மு.க. தரப்பிலோ "பொங்கல் பரிசுப் பையில் உள்ள பொருட்கள் தரமானதாக இல்லை. வெல்லம் உருகி வழிகிறது' எனக் குற்றம்சாட்டப்பட்டது.
உண்மை நிலவரம் என்ன என்று களமிறங்கினோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை தம்மனூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார், "போன வருஷத்தைவிட, இந்த வருஷம் அதிக மான பொங்கல் வைப்பதற்கான பொருட்களை தந்துயிருக்காங்க. எங்க வீட்டின் சார்பா நான்தான் போய் பரிசுப்பொருளை வாங்கி வந்தேன். 21 பொருளும் இருந்தது. போன வருஷம் 2500 ரூபாய் தந்தாங்க, இந்த வருஷம் தரலயேன்னு லைன்ல நின்னுக்கிட்டிருந்த பெண்களிடம் ஒரு ஏக்கமிருந்தது. "ஆயிரம் ரூபாயாவது தந்திருக்க லாமே, ஏன் தரல?'ன்னு பேசிக்கிட்டாங்க, எனக்கும் அந்த ஆதங்கம் இருக்கு. ஆனா பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் சூப்பர் மார்க்கெட்ல பர்ச்சஸ் செய்தால் எப்படியிருக்குமோ, அந்தளவுக்கு தரமாயிருந்தது. ரேஷன் கடையில தர்ற பொருட்கள் மட்டமாதான் இருக்கும், இப்பவும் அப்படி மட்டமாயிருக்கும்மோன்னு நினைச்சது, ஆனா தரமான பொருளாதான் இருந்தது... அந்தவரைக்கும் சந்தோஷம்'' என்றார்.
திருப்பத்தூர் நகரை சேர்ந்த ரமேஷ், "பணம் தரலயேன்னு எல்லாரையும் போல எனக்கும் வருத்தம்தான். ஆனா போன வருஷத்தை விட அதிகமான பொருள் அந்தப் பையில் இருந்தது, இந்தப் பக்கம்மெல்லாம் தரமான பொருட்களை தான் தந்திருக்காங்க'' என்றார்.
சில இடங்களில் "வெல்லம் உருகி யிருக்கிறது, மஞ்சள் பை வழங்கவில்லை, 18 பொருள்தான் இருந்தது, தரமற்ற பொருட் கள்...' என குற்றச்சாட்டுகள் எழுந்தது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், "நாங்கள் தரமான பொருட்களை தந்தோம், தி.மு.க. ஆட்சியில் தரமற்ற பொருட்கள் வழங்குகிறார்கள்' என புகார் கூறினார்கள். இது முதலமைச்சர் கவனத்துக்கு சென்றதும், உடனடியாக மாவட்ட ஆட்சியர்களை ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு செய்தபோது, 2.5 டன் உருகிய வெல்லம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத் தியது. "இதனை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது' என உத்தரவிட்டார். உடனடியாக மாற்று வெல்லம் வரவைழைக்கப்பட்டு, வழங்கப்பட்டது. இப்படி தமிழ்நாட்டில் ஓரு சில மாவட்டங்களில் மட்டும் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டது.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்' என டோல்ஃப்ரீ எண்ணை வெளியிட்டவர், "பொய்யான புகார்களை அரசு மீது உருவாக்குவது அ.தி.மு.க.வினர்தான். கூட்டுறவு சங்கத்தில் அவர்கள் இருப்பதால் தரமான பொருட் களை தரமற்றது என்கிறார்கள்'' என்றார்.
இது குறித்து தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, "வெல்லத்தில் நல்ல வெல்லம், தரமற்ற வெல்லம் என்று எதுவும் கிடையாது. ஒரே வெல்லம்தான். இந்த வெல்லம் உருகியதற்கு காரணம், கரும்பு ஆட்டி சாறெடுத்து வெல்லத்துக்கான பாகுவாக காய்ச்சும்போது சரியான பதத்தில் அதை காய்ச்சி, இறக்கி, அச்சு வார்க்கலன்னா இப்படி உருகும். குறுகிய காலத்தில் பேக்கிங் செய் வதற்காக வெல்லம் காய்ச்சுவதில் ஏற்பட்ட குளறுபடி, உலர்த்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் உருகியிருக்கே தவிர மற்றபடி அது நல்ல வெல்லம் தான். அதிகாரிகள் கொள்முதல் செய்யும்போது அதன் தயாரிப்பு முறையைப் பார்த்து வாங்கியிருக்க வேண்டும்'' என்றார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 34,774 நியாயவிலைக் கடைகளும், 2.15 கோடி குடும்ப அட்டைகளும் உள்ளன. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க 1,297 கோடி ரூபாய் தமிழக அரசின் உணவுத்துறை செலவு செய்துள்ளது.
"இவ்வளவு செலவு செய்தும் இப்படி ஏன்?' என அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது...
"கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டதிலும் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் பெரி தாகாமல் போனதுக்கு காரணம் 2500 ரூபாய் பணம் தந்தது. இந்தமுறை பணம் வழங்க வில்லை, ஆனால் பையோடு சேர்த்து 21 பொருட்கள் வழங்கப்பட்டது. எங்கோ ஒரு இடத்தில் உருகிய வெல்லம், மஞ்சள் பை தராததை பெருசாக்கினார்கள். பொங்கல் பொருட்கள் தருவது குறித்து நவம்பர் மாதமே அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கம்பெனி களிடம், சில பொருட்கள் மொத்தமாகவும் டெண்டர் தரப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தங்களிடம் போதிய ஸ்டாக் இல்லாதபோது சின்னச் சின்ன கம்பெனிகளி டம் இருந்து உப்பு, கடுகு, நெய், பருப்பு என வாங்கி மொத்தமாக ஒப்படைப்பார்கள். சில இடங்களில் மொத்தமாக தந்துவிட்டார்கள், பண்டகசாலையில் பாக்கெட் போட்டார்கள். அப்படி வாங்கும்போது வெளி மாநிலத்துக்கு அனுப்ப வைத்திருந்த சரக்குகளும் இங்கு வந்தன. அதேபோல் வட மாநிலத்தில் விளையக்கூடிய கோதுமை போன்ற சில பொருட்கள் பர்சேஸ் செய்து தந்திருந்தார்கள். அப்படி வந்த கவர்களில் இந்தி எழுத்துக்கள் இருந்ததை எதிர்க்கட்சித் தரப்பு சர்ச்சையாக்கியது. அதேபோல் மஞ்சள் கைப்பை 2.25 கோடி தைத்து வருவதிலும் மழையால் சிக்கல் ஏற்பட்டது'' என்றார்கள்.
பொங்கல் பரிசுப் பையில் இருந்த புளியில் பல்லி இருந்ததாக புகார் தெரிவித்த திருத்தணி அ.தி.மு.க பிரமுகர் வீட்டுக்கே சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்யச் சென்றபோது, அவர்கள் பரிசுப்பையை காட்ட மறுத்தார்கள். அதனால் வதந்தி கிளப்பியதாக அவர் மீது வழக்குப் போடப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க பிரமுகரின் மகன் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.