புதுச்சேரியின் மிகப் பெரிய மருத்துவக் கல்வி நிறுவனமான ஜிப்மர் மருத்துவப் படிப்பு மாண வர்கள் சேர்க்கையில் மண்ணின் மைந்தர்களான புதுச்சேரி மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுகின்றன.
1964 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஜவஹர்லால் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) தொடங்கப்பட்டது. போலிச்சான்றுகளை அளித்து வெளிமாநில மாணவர்கள் முறைகேடாகச் சேர்வதும், புதுச்சேரி மக்கள் போராடுவதும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகி வருகிறது.
இதைத்தடுக்க கோரிக்கை வலுப்பெற்றதையடுத்து 2015 ஆம் ஆண்டு அரசு ஆணை ஒன்று வெளியிட்டது. அதன்படி புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளும், மத்திய அரசு ஊழியர்கள் மூன்றாண்டுகளும் பணிசெய்திருக்க வேண்டும். மேலும் அவர்களின் பிள்ளைகள் புதுச்சேரி மாநிலத்திலுள்ள ஏதேனுமொரு பள்ளியில் 11, 12-ஆம் வகுப்புகள் படித்திருக்க வேண்டும் என்று. அதன்பின்னர் ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி அரசால் விதிக்கப்பட்ட அரசாணைப்படியே மாணவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள் என்று அறிவித்தது.
இந்நிலையில் 2019-20-ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஜிப்மர் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் புதுச்சேரியில் வசிக்காத பலர் போலியான முகவரிகளைக் கொடுத்து தேர்வாகியிருந்தது தெரிந்தது. இதனால் கலந்தாய்வின்போது அங்குசென்ற பெற்றோர் மாணவர் சங்கத்தினரும், புதுச்சேரி மாணவர்களும் சான்றிதழ்களை முழுமையாக ஆய்வுசெய்யவேண்டுமென வலியுறுத்தினர். அதனால் 20-க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் ஓட்டம் பிடித்தனர். இறுதியாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களிலும் சில வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருக்க லாமென புகார்கள் எழுகின்றன.
இதுகுறித்து புதுச்சேரி பெற்றோர் சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா, ""புதுச்சேரி பொறியியல்கல்லூரியில் பணியாற்றும் குமார் என்பவர் காலாப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி யிடம்இங்கு வசிப்பதுபோல்சான்றிதழ் பெற்று அவரது மகள் கிருத்திகா என்பவர் நுழைவுத்தேர்வு எழுதி ஜிப்மர் தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆனால்அந்தமாணவி நீட்தேர்வினை எழுதும்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில்குடியிருப்பதாகத் தெரிவித்து சென்னை குன்றத்தூர் மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இதேபோல் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவர் மாஹே முகவரியிலும், அரபு நாட்டில் பயின்ற மாணவர் கடைசி 2 ஆண்டுகள் புதுச்சேரியில் கல்வி பயின்றதை ஆதாரமாகக் கொண்டும் விண்ணப்பித்து, நுழைவுத்தேர்வு எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.
இதேபோல் பல தவறுகள் நடந்திருப்பதால் அனைத்து மாணவர்களின் சான்றிதழ் களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
புதுச்சேரி செண்டாக் பெற்றோர் மாணவர் சங்க தலைவர் நாராயணசாமி நம்மிடம், “""புதுச்சேரி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி சி.தர்ஷினி. இவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதேபோல் அந்த பட்டியலில் இருந்த 72 பேரில் 29 பேர் வட மாநிலத்தவர்கள். 54 பேரில் 30 பேர் அளவுக்கு வெளிமாநிலத்தவர் என்றால் இது மண்ணின் மைந்தர்களுக்கானதுதானா? இந்த குளறு படிகள் ஜிப்மர் அதிகாரிகள் துணையுடன் நடக்கிறதா? அல்லது போலியாகச் சான்றிதழ் அளிக்கும் புதுச்சேரி வருவாய்த்துறையினரின் முறைகேடான செயல்களா? என முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இப்படி மண்ணின் மைந்தர்களின் ஒதுக்கீட்டை மற்ற மாநிலத்தவர் அபகரிப்பதற்கு காரணம் ஜிப்மரிலுள்ள அதி காரிகள் வடமாநிலத்தவர்களாக இருப்பதுதான். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும்போது ஆய்வு, நடவடிக்கை, வழக்கு என தீர்வுகள் கிடைக் காமலேயே போகிறது. எனவே மாநில அரசு தலையிட்டு சட்டத் திருத்தம் செய்யவேண்டும்'' என்றார்.
இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி யிடம் கேட்டோம். ""புதுச்சேரி இட ஒதுக்கீட் டில் வெளிமாநில மாணவர்கள் சேர்க்கப்பட்டி ருந்தால் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அது போல் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு பள்ளிக்கல்வி முழுவதும் மாநிலத்திலேயே படித்திருக்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து சட்டமன்றத்தில் விவா திக்கப்பட்டு முடிவெடுக் கப்படும்'' என்றார்.
-சுந்தரபாண்டியன்