கட்சியில் சாதாரண நிகழ்ச்சிகள் என்றால்கூட கோஷ்டி மோதல்களுக்கு காங்கிரசில் பஞ்சமிருக்காது. கட்சித் தேர்தல் என்றால் அதுவும் புதுச்சேரியில் கட்சித் தேர்தல் என்றால் சொல்லவும் வேண்டுமா?
போன மாதம் மாணவர் காங்கிரஸ் தேர்தல் நடந்தது. அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்கிரமாதித்தனும், முதலமைச்சர் நாராயணசாமியின் உறவினரான கல்யாணசுந்தரமும் போட்டியிட்டனர். விக்கிரமாதித்தன் பெற்ற வாக்குகளில் 56ஐ செல்லாதவையாக்கி, கல்யாணசுந்தரம் வென்றதாக அறிவித்தார்கள்.
அப்போதே, ஆத்திரமடைந்த தலைவர் நமச்சிவாயம், ""இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் நாராயணசாமி யாரை நிறுத்தினாலும் தோற்கடிப்போம்'' என்று முடிவெடுத்தார்.
""வாக்குச்சீட்டு முறை இருப்பதால் தானே செல்லாது என்று நாடகமாடுகிறீர்கள்? இளைஞர் காங்கிரஸ் தேர்தலை ஆன்லைன் மூலம்தான் நடத்த வேண்டும்'' என்று நமச்சிவாயம் தரப்பு இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். தலைமையும் ஏற்றுக் கொண்டது.
ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் என அறிவிக்கப்பட்டது. கலைஞர் மறைவைத் தொடர்ந்து 18 மற்றும் 19ஆம் தேதி என்று மாற்றப்பட்டது.
""இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேட்பாளராக தனது மகன் சோமு என்னும் சோமசுந்தரத்தை களமிறக்க நினைத்தார் முதல்வர் நாராயணசாமி. ஆனால் முதல்வரின் ஆதரவாளர்கள்கூட வாய்திறந்து வரவேற்கவில்லை. மகன் என்ட்ரியை தள்ளிவைத்துவிட்டு மகன் சிபாரிசு செய்த லட்சுமிகாந்தனை தனது நிழலாகக் களமிறக்கினார் முதல்வர் நாராயணசாமி. நமச்சிவாயத்தின் வேட்பாளராக வில்லியனூர் ரமேஷ் களமிறக்கப்பட்டார். இவர்களோடு இன்னும் 25 பேர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
""நானும் லட்சுமிகாந்தனும் ஓருயிரும் ஈருடலுமாக செயல்படுகிறோம். லட்சுமிகாந்தன் தோற்றால் அது எனது தோல்வி'' என்று முதலமைச்சர் நாராயணசாமியின் மகன் சோமசுந்தரம் உழைத்தார். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இளைஞர் காங்கிரஸை குளிப்பாட்டியது என்று கூடச் சொல்லலாம்.
பொதுத்தேர்தலைப் போல, முப்பது தொகுதிகளிலும், இளைஞர்களும் இளம்பெண்களும் வரிசையில் நின்று தங்கள் ஆன்லைன் வாக்குகளைப் பதிவு செய்தனர். 20.08.18 அன்று கம்பன் கலையரங்கில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
மொத்த வாக்குகள் 22 ஆயிரத்து இரண்டு. பதிவானவை 14 ஆயிரத்து 73. முதல்வர் நாராயணசாமியின் ஆதரவாளரான லட்சுமிகாந்தன் 4 ஆயிரத்து 67 வாக்குகள் பெற்றுத் தோற்றார். நமச்சிவாயத்தின் ஆதரவாளரான வில்லியனூர் ரமேஷ் 6 ஆயிரத்து 709 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
தலைவர் மட்டுமல்ல. இளைஞர் காங்கிரஸ் தொகுதித் தலைவர்கள் 30 பேரில் 20 பேர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களே வென்றிருக்கிறார்கள். புதுச்சேரியைப் பொறுத்தவரை முதலமைச்சர் நாராயணசாமியின் கையைவிட நமச்சிவாயத்தின் கையே ஓங்கியுள்ளது.
-சுந்தரபாண்டியன் & சிவரஞ்சனி