""சபரிமாலா என்கிற நான் ஒரு ஆசிரியர். இந்த பொள்ளாச்சி சம்பவத்தில்; பெண்களுக்கு எற்படுத்தப் பட்ட பாலியல் துன்புறுத்தல் நிகழ்வால் இன்னமும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு...
அரசு வேலையை உதறிவிட்டு, பொள்ளாச்சியில் சுயேட்சையாக நின்று ஜெயராமனுக்கு எதிராக களமாட விரும்பினேன். அதனால் பொள்ளாச்சி முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது... எல்லாப் பெண்களும் எனக்காக காத்திருந்து பிரச்சாரத்தை கேட்டார்கள். ஆனால் என் தேர்தல் விருப்பமனுவை நிராகரித்து விட்டார்கள்.
நான் கலங்காமல் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் இறங்கிவிட்டேன். முழுக்க முழுக்க பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்தே எனது பேச்சு அமைந்திருந்தது. பெண்கள் கண்ணீர் கசிய என் பேச்சைக் கேட்டார்கள். கடந்த 28-ஆம் தேதி இரவு பொள்ளாச்சியில் உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்துக்குள் நான் போனபோது 300-க்கும் மேற்பட்ட பெண்கள் எனது பேச்சைக் கேட்க நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களிடையே பேசிக்கொண்டிருந்த வேளையில், பொள்ளாச்சி ஜெயராமனின் பி.ஏ.க்களான வீராசாமி, தம்பு, எக்ஸ் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர்கள் உச்சபோதையில் என்னைக் கொலைசெய்ய வந்தார்கள்.
"ஏண்டி... எங்கிருந்தோ வந்து எங்க தலைவருக்கும், அவரது பையனுக்கும் எதிரா பேசிட்டு இந்த பொள்ளாச்சியைத் தாண்டி போயிருவியா?' என ஒருமையில் கெட்ட வார்த்தைகளை உதிர்த்தார்கள். அங்குள்ள பெண்கள்தான் லோக்கல் தி.மு.க.வினருக்கு தகவல் சொல்லியதோடு.... என்னை என் காருக்குள் பத்திரமாய் ஏற்றிவிட்டார்கள்.
ஒக்கிலிபாளையத்தின் முன்னாள் தலைவரான கிரி என்பவர் எனது காரின்மேல் எச்சில் துப்பினார். மரத்துண்டு கொண்டு கண்ணாடி மீது அடித்துக்கொண்டேயிருந்தார். போர்க்களம் போல ஆகிவிட்டது அந்த இடம். ஏன் என்றால் தி.மு.க.வினர் அங்கே வந்துவிட்டபோது... வழிவிட மறுத்து ஏகப்பட்ட அலப்பறை செய்தனர் அ.தி.மு.க.வினர். பின்னர் போலீஸ் பாதுகாப்போடு நான் அனுப்பி வைக்கப்பட்டாலும் 3 எஸ்கார்டு வாகனங்கள் என் வாகனத்திற்கு பின்னால் வரும்படி ஏற்பாடு செய்திருந்தனர் தி.மு.க.வினர்.
அடுத்தநாள் என் மீது எப்.ஐ.ஆர். 3 பிரிவுகளில் போடப்பட்டிருந்தது. ஒக்கிலி பாளையம் தி.மு.க. பிரசிடெண்ட்டாய் இருந்த பார்த்தசாரதி மூலம் "இப்படி ஒரு பெண்ணின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் கள்மேல் வழக்குப் போடவேண்டும்' என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்து கொலைசெய்ய முயற்சி செய்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் ஜெயராமன் மீதும், அவரது மகன் பிரவீன் உள்ளிட்ட சிலர்மீதும் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் நான் பிரச்சாரம் செய்ததற்கே... நான் கொலை மிரட்டலுக்கு உள்ளாகிறேன் என்றால் இந்த பாலியல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்கள் எப்படியெல்லாம் மிரட்டப் பட்டிருப்பார்கள்? ஆனால் எந்த மிரட்டலுக்கும் நான் அடி பணியப் போவதில்லை. பொள்ளாச்சி பெண்களுக்காக என் தலை கொய்யப்பட்டாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள் வேன்'' என்கிறார் உண்மையாய்.
தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன் நம்மிடம், ""பொள்ளாச்சி ஆளுந் தரப்பு பிரமுகர், தன் மகனை நல்லவராக காட்டவேண்டும் என்று இப்போது பிரச்சாரப் பயணத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறார். பாலியல் குற்றவாளிகள் சம்பந்தமாய் பேசப்படும் போது தன்னையும் மறந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்.
அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்து விட்டால் தனது செல்ல மகனை "செல்' லில் அடைத்து விடுவார்களோ? என்கிற பயமே ஜெயராமனை தூக்கம் வரவிடாமல் செய்திருக்கிறது.. ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் தந்து ஜெயிக்க திட்டமிட்டு இருக்கிறார்'' என்றார் சிரித்தபடி
______________
களத்தில் வைரலாகும் நக்கீரன் வீடியோ!
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரன் வெளிக்கொண்டு வந்த பிறகே அது அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கொடூரத்தின் தன்மையை உணர்ந்து பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நக்கீரன் ஆசிரியரின் வீடியோ தமிழ்நாடு முழுவதும் பரவியது. அதனால் அரசும் காவல்துறையும் நக்கீரன் மீது குறிவைத்து, விசாரணை வளையத்திற்குட்படுத்தியது. எனினும், உண்மைகளை மறைக்க முடியவில்லை. சி.பி.ஐ. பிடியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிக்கி, சிறைக்கு சென்றுள்ள நிலையில்... பொள்ளாச்சி தேர்தல் களத்தில் நக்கீரன் அப்போது வெளியிட்ட காணொலிகள் வாக்காளர்களிடம் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றன.