ளம்பெண்களை சீரழித்த குற்றவாளிகளைப் பாதுகாக்கும் எடப்பாடி அரசுக்கு எதிராக ஜனவரி 10-ந் தேதி தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டம்' என மு.க.ஸ்டாலின் அறிவித்ததுமே, "அனுமதிக்கக் கூடாது' என்பதுதான் கோவை போலீசுக்கு பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் உத்தரவு.

pollachi protest

போலீஸ் படை குவிக்கப்பட, கனிமொழியின் கார் முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகே வரும்போது தடுத்து நிறுத்தினர். "அனுமதிக்காவிட்டால் இங்கேயே போராட்டம் நடத்துவேன்' எனச் சொன்னபடி, அவருடன் வந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இந்தத் தகவலறிந்த ஸ்டாலின், ""தி.மு.க. சார்பில் நடைபெறும் போராட்டத்தை போலீஸ் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினரின் போராட்டம் நடக்கும்...'' என எச்சரிக்கை விடுத்தார். வேறு வழியின்றி போலீசார், கனிமொழி பொள்ளாச்சிக்கு போக வழிவிட்டனர்.

Advertisment

அனுமதியளிக்கப்பட்டாலும் அது பெரியளவில் செய்தியாகிவிடக்கூடாது என பொள்ளாச்சி வி.ஐ.பி., லோக்கலில் உள்ள மீடியா ஆட்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டாராம். அவரது குட்புக்கில் உள்ள பலரும் "அப்படியே ஆகட்டும்' எனச் சொல்லியுள்ளனர்.

இதில், எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகையைச் சேர்ந்த லோக்கல் ஆட்களும் உண்டாம். அத்துடன், பொள்ளாச்சி விவகாரம் இந்த தேர்தல் களத்திலும் பதம் பார்த்துவிடக் கூடாது என நினைக்கும் எடப்பாடி அரசும் மிகுந்த அக்கறை காட்டியது. கனிமொழி ஆர்ப்பாட்டத்தைவிட... அதேநாளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ரஜினியின் விருப்பத்திற்கு மாறாக நடந்த ரஜினி ரசிகர்களின் கூட்டமே செய்திகளில் முன்னிலைப் படுத்தப்பட்டது.

தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 3,000-த்திற்கும் மேற் பட்டோர் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சாலையை நிறைத்திருந்தனர்.

Advertisment

சி.பி.எம். பாலபாரதி, ""பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தைப் போல, பீஹாரைப் போல தமிழ்நாட்டை ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். கனிமொழி உள்ளே வர அனுமதி இல்லை என எப்படி சொல்ல முடியும்?'' எனக் கேட்டார் சவுக்கடியாய்.

கனிமொழி பேசும்போது, ""அண்ணா அடிக்காதீங்கண்ணா... உன்னை நம்பித்தானே வந்தேன்... என அந்த பெண்கள் கதறிய குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் காமக்கும்பலால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்தே பணம் பறித்திருக்கிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. மேலும் சிலரை காப்பாற்றுவதற்காகவே ஆளும் பிரமுகர்கள் அருளானந்தத்தை காப்பாற்ற முயல்கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் ஒரு இளம் பெண்ணைத் தூக்கிக்கொண்டு போன இளைஞர்கள், கோவிலுக்குள் வைத்து அந்தப் பெண்ணை நாசம் செய்துவிட்டனர். "கோவில் கூடாது என்பதல்ல, கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என "பராசக்தி' படத்தில் சொன்னார் கலைஞர்.

"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டம் தோறும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்' என தளபதி ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் குற்றவாளிகளை பாதுகாத்தவர்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்'' என வெளுத்து வாங்கினார் கனிமொழி.

-அ. அருள்குமார்