அண்ணா... பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா...
உன்ன நம்பித்தான வந்தேன்...
என்ன பார்த்தா எப்படி தெரியுது...''
எளிதில் மறக்கமுடியாத குரல் அது. நட்பு, காதல் என்ற முகமூடியுடன் பழகிய கொடூர மிருகத்தை நம்பிப் போன பெண், அதன் உண்மை முகம் கண்ட அதிர்ச்சியில், வலியில் அரற்றிய அந்தக் குரல் தமிழகத்தில் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கியது, ஆள்பவர்களை தவிர.
ஸ்டைலான தோற்றம், உயர் ரக ஃபோன்கள், கார் - பைக்... என தங்களை தயார் செய்துகொள்ளும் பணம் படைத்த பொறுக்கிகள் சிலர் காதல் என்ற பொய்யுடன், பள்ளி, கல்லூரி மாணவிகளை அணுகி, பேசிப் பேசி மயக்கி தங்களை நம்ப வைத்து, தங்கள் இடத்துக்கு அழைத்துச் சென்று, தனிமையில் இருக்கும்போது புகைப்படங்கள், வீடியோ எடுப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில வெறியர்களு டன் சேர்ந்து அந்த அப்பாவி இளம் பெண்களை அடித்துத் துன்புறுத்தும் கொடுமை ஒரு தொடர் குற்றமாக நடந்து வந்தது. பொள்ளாச்சியில் அதிகாரம் படைத்தவர்களின் துணையுடன் சில மிருகங்கள் செய்த இந்தக் கொடுஞ்செயல் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. அது தொடர்பான வீடியோக்கள் மக்களை அதிர வைத்தன. வெளிவந்த வீடியோக்கள் சில, வெளிவராதவை ஆயிரக் கணக்கில். இந்தக் கொடுமை வெளிவந்ததில் நக்கீரனின் பங்கு முக்கிய மானது. நக்கீரன் ஆசிரியர், இந்தக் கொடுமைகளை தோலுரிக்கும் வண்ணம் பேசிய வீடியோ கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு மக்களை கொதித்து எழச்செய்தது. இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து நக்கீரன் ஆசிரியர் சொன்ன கருத்து மக்களால் ஆமோதிக்கப்பட்டது.
இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட திருநாவுக்கரசு, ரிஸ்வந்த் ஆகியோரும் அவர்களுடைய கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போல தோற்றமளித்தாலும் பின்னர் மெல்ல மெல்ல உண்மை வெளிவந்தது. முக்கிய புள்ளிகளின் தொடர்பும் ஆதரவும் இருப்பதால் குற்றவாளிகளை விட உண்மையை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் மீது கடுமை காட்டியது போலீஸ். இது குறித்து புகார் செய்தவர்கள், செய்தி வெளியிட்டவர்களை குற்றவாளிகள் போல நடத்தியது. சில மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அந்த மிருகங்களின் பின் எவ்வளவு பலம் இருக்கிறது என்பது மெல்ல மெல்ல வெளியே வந்தது. சிறையில் அனைத்து வசதிகளுடன், எந்தக் குற்ற உணர்வுகளும் இல்லாமல் இருக்கின்றனர். இந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கின்றனர். பொள்ளாச்சி மக்களின் கோபம் ஆழ்மனதில் அப்படியே இருக்கின்றது. இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத அலட்சியம் நாகர்கோவில் காசி வழக்கு வரை தொடர்ந்தது, இன்னும் தொடர்கிறது. இந்த இரு வழக்குகளிலும் நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் புழுங்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் 'ஏதும் செய்ய முடியவில்லையே' என்ற ஆதங்கத்தில் இருக்கும் மக்களுக்கும் ஆறுதல் சொல்லும் வகையில் ஒரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. நிஜத்தில் நடந்ததைப் போன்றே காதல் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டு, தனிமையில் அழைத்து செல்லப்பட்டு, இன்னும் சில மிருகங்களுடன் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள் ஒரு இளம் பெண். இப்படி ஒரு துரோகத்துக்கும் சற்றும் எதிர்பாராத அளவிலான தீங்குக்கும் ஆளாக்கப்பட்ட அவள் கடவுள் முருகனை துணையாய் கொள்கிறாள். அதிர்ச்சியிலும் துயரிலுமிருந்து மீளாத அவளை மீண்டும் இன்னொரு வனுக்கு இரையாக்க அழைக்கிறான் அந்த கொடூரன். மறுக்கும் இவளை 'உன் நிர்வாண வீடியோவை உலகமே பார்க்கும்' என்று மிரட்டுகிறான். அந்தப் பெண் என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் 'சூரசம்ஹாரம்' குறும்படத்தின் கதை.
'ஒன்னு, அவன் சொல்ற எல்லார் கூடயும் ஒத்துழைக்கணும், இல்லை அவனையும் கூட இருக்கவங்களையும் கொன்னுட்டு நிம்மதியா இருக்கணும்' என்று அவள் முன் இரண்டு சாய்ஸ் இருக்க, இரண்டாவதை தேர்ந்தெடுத்து அவள் செயல்படுத்தும் விதம் குறும்படம் என்ற எல்லையை மீறி நம்மை விசிலடித்து ரசிக்க வைக்கிறது. 'கெஞ்சுனால்லாம் விட மாட்டாங்க...' என்னும் வசனம் இத்தகைய பொறுக்கிகள் இன்று எந்த மனநிலையில் உள்ளார்கள் என்பதை சொல்கிறது. 'உன் நிர்வாண உடலை உலகம் பார்க்கும்' என்ற ஒற்றை மிரட்டலுக்கு எத்தனை எத்தனை பெண்களின் வாழ்க்கை நாசமாகியிருக்கும்? இச்சையை தீர்த்துக்கொள்வதோடு பணம் எடுக்கும் ஆபங போலவும் அப்பெண்களை பயன்படுத்தியுள்ளனர் காசி போன்ற கயவர்கள். 'உன்னால என்னடா பண்ண முடியும்?' என்று பெண்கள் எடுக்கும் தைரியமான முடிவுதான் அவர்களுக்கு செருப்படியாக விழும். அரசு கொடுக்க மறந்த தண்டனையை... மக்கள் கொடுக்க விரும்பும் தண்டனையை... அந்த நாயகி கொடுக்கிறாள். கற்பனையாக இருந்தாலும் நம்மை நிம்மதி கொள்ளச் செய்கிறது அந்த முடிவு. காரணம்... அத்தனை நேர்த்தியாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
""2019-ல பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோக்களை பார்த்ததிலிருந்து என் மனசுல ஒரு பாரம். அந்தப் பொண்ணோட அழுகை, கெஞ்சல், என் மனசுல உறுத்திக்கிட்டே இருந்தது. என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி அழுதேன். இதுக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. அதே நேரம், என் கனவான சினிமாவை நோக்கி நான் பயணப்பட தொடங்குனேன். பட வாய்ப்புகளுக்காக ஒரு குறும்படம் எடுக்கணும்னு முடிவு பண்ணப்போ, இதையே எடுக்கலாம்னு இறங்குனேன். படத்தை முடிச்சுட்டு இதை வெளியிட சரியான தளம் நக்கீரன்தான் என்று அணுகினேன். பிற ஊடகங்கள் தரத் தயங்கும் ஆதரவை நக்கீரன் தந்தது. நக்கீரனுக்கு நன்றி. இன்னைக்கு எக்கச்சக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும் வருகின்றன. ஒரு திரைப்படத்துக்கும் சிறப்பான ஸ்க்ரிப்டாக ரெடி பண்ணி வச்சுருக்கேன். நயன்தாரா மாதிரி ஒரு ஆளுமை உள்ள பெண்ணுக்கு ஏற்ற பாத்திரம். வாய்ப்புக்காக முயற்சி செய்கிறேன்"" என்று நெகிழ்ந்தார் இயக்குனர் கார்த்திக் தனபாக்கியம். படத்தில் நடித்துள்ள உத்ரா நம் வீட்டுப் பெண்ணை பிரதிபலிக்கிறார். இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள் என அத்தனையும் சிறப்பாகப் பங்களித் திருக்கின்றன.
நேர்த்தியாகப் படமாக்கப்பட்டு விறுவிறுப்பாகக் கதை சொல்லப்பட்டு, இறுதியில் நம் ஒட்டுமொத்த மனசாட்சியும் எதிர்பார்த்த முடிவை கொடுத்ததில் வென்றிருக்கிறது இந்தப் படம். நிஜத்திலும் சூரசம்ஹாரம் தேவை.
-வீபீகே