பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் கொடு...
தகவல் தருபவர்களை காட்டிக்கொடு..
வெளியிடாத வீடியோக்களை எங்களிடம் கொடு...
ஆதாரங்களை பத்திரிக்கையில் வெளியிட்டதேன்?
பார் நாகராஜன் - பிரவீன் வீடியோ எங்கே?
வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதாக ஏமாற்றிய அரசு!
இனி எதையும் வெளியிடாதே -சி.பி.சி.ஐ.டி. மிரட்டல்!
குற்றவாளிகளை காப்பாற்ற நக்கீரனை குறிவைக்கும் அரசு!
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியையும் உலுக்கிய பொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வன்கொடூர வழக்கில் அதிர வைக்கும் உண்மைகளை வீடியோ ஆடியோ ஆதாரங் களுடன் வெளியிட்டது நக்கீரன். அதுவரை பொள்ளாச்சி மக்களின் குரலாக மட்டுமே ஒலித்து வந்த இந்தக் கொடூரம், தமிழ்நாட்டின் அரசியல் தளத்திலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுததியது.
7ஆண்டுகளாக ஆளுந்தரப்பின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தரப்பட்ட புகார்களை காவல்துறை அலட்சியப்படுத்தியது.. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். மர்ம மரணங்களும் தொடர்ந்தன. இவை எல்லாவற்றையும் தோண்டித் துருவி வெளியே கொண்டு வந்தது நக்கீரன் என்பதால், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய அ.தி.மு.க. அரசும் காவல்துறையும் நக்கீரனின் குரல்வளையை நெரிப்பதற்கு சட்டமும் ஜனநாயகமும் வழங்கியுள்ள கருத்துரிமைப் பாதுகாப்பை காலில் போட்டு மிதித்து விட்டு, அரச பயங்கரவாதத்தைக் கையில் எடுத்துள்ளன.
சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றிவிட்டதாக அரசாணை வெளியிட்ட அரசு, அது வெறும் ஏமாற்று வேலை என்பதுபோல, சி.பி.சி.ஐ.டி கையிலேயே விசாரணையை ஒப்படைத் திருக்கிறது. மாநில அரசின் விசாரணை அமைப்பான சி.பி.சி.ஐ.டி., அரசியல் பின்புலம் மிக்க உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையிலும் நக்கீரனில் இனி எந்த ஒரு புலனாய்வுச் செய்தியும் ஆதாரங்களுடன் வெளியாகிவிடக்கூடாது என்று அச்சுறுத்தும் முறையிலும் மிகப் பெரிய ஜனநாயக விரோத தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
பொள்ளாச்சி விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி தரப்பில் இருமுறை நக்கீரனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் முறையிட்டது. உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும், அச்சுறுத்தலோ துன்புறுத்தலோ கூடாது என்பதையும் உயர்நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், அதற்கு நேர்மாறான முறையில், ஏப்ரல் 1ந் தேதி சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கும் அதிகமான அளவில் விசாரணை நடத்தப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது எந்தவிதமான துன்புறுத்தலோ, அச்சுறுத்தலோ கொடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சாட்சி விசாரணைக்காக நமது நக்கீரன் ஆசிரியர் மதியம் 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி அலு வலகத்தில் ஆஜரானார். நம்மை அமர வைத்து விசாரணை மேற்கொண்ட அறையோ இரண்டு தனிச்சிறைகள் கொண்ட கொடிய விசாரணைக் கைதிகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்ட அறை போல் இருந்தது. பொள்ளாச்சி வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி.யின் எஸ்.பி. நிஷா பார்த்திபன் விசாரணையை மேற்கொண்டார். அவருடன் இந்த வழக்கிற்கு சம்மந்தமே இல் லாத சி.பி.சி.ஐ.டி.யின் மற்றொரு எஸ்.பி.யான ராஜேஸ்வரியும் உடன் இருந்து பல மிரட்ட லான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ராஜேஸ்வரி யார் தெரியுமா? கவர்னர் புகழ் நிர்மலாதேவியிடம் வாக்குமூலம் வாங்கும் போது ராஜேஸ்வரி நடந்து கொண்ட விதம் குறித்து நக்கீரனில் பலமுறை அம்பலப்படுத்தி யிருந்தோம். மேலும் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகையின் தூண்டுத லின் பேரில் நக்கீரன் ஆசிரியர் மற்றும் 35 ஊழியர்கள் மீது புகார் கொடுத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான மேற்படி எஸ்.பி. ராஜேஸ்வரி அங்கே அமர்ந்திருந்தது பலத்த சந்தேகத்தை கிளப்பியது.
நக்கீரன் ஆசிரியர் இந்த வழக்கில் சாட்சி தான். ஆனால், அவரையே இந்த வழக்கில் குற்றவாளியாக்கும் உள்நோக்கத்துடன் கேள்விகளும் விசாரணை முறையும் இருந்தன. நக்கீரனுடைய செய்திக் கட்டுரைகளிலும், வீடியோக்களிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோ முகமோ அவர்களின் எதிர்கால நலன் கருதி வெளியிடப்படவில்லை. சட்ட ரீதியாக பத்திரிகைகள் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. அதனடிப்படையில், நக்கீரன் வெளியிட்டிருந்த செய்திகளில் இடம்பெற்றிருந்த பெண்களின் பெயர்களை வெளிப்படுத்தும்படி சி.பி.சி.ஐ.டி.யின் விசா ரணை அதிகாரி மிரட்டல் தொனியில் வலி யுறுத்தினார். சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சிவனப் பாண்டியனோ ""நாங்க கேட்குற ஆதாரத்தை கொடுத்திருங்க. உங்க நியூஸ் சோர்ஸ் யாருன்னு சொல்லுங்க. இதெல்லாம் தப்புன்னு தெரியாதா?'' என அடிக்கடி இ.பி.கோ செக்ஷன் ஒன்றைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். ""இந்த மாதிரி செய்தி கிடைச்சா போலீஸ்கிட்ட சொல்லணும்னு உங்களுக்கு தெரியாதா?'' என வரிசையாக கடும் மிரட்டல் விட்டார்.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு செய்தியிலும் இடம்பெற்றுள்ள தகவல்கள், நபர்களின் பெயர்கள், பெண்களைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் தரவேண்டும் என்றும், பொள் ளாச்சி விவகாரம் தொடர்பாக இனிமேல் எந்த செய்தி வெளியிட்டாலும் உங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்ற எச்சரிக்கை 3 சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளின் விசாரணையில் மிரட்டலாக வலியுறுத்தப்பட்டது. இது பத்திரிகை சுதந்திரத்திற்கும், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்து சுதந்திரத்திற்கும் நேர் எதிரான செயலாகும். அதுவும், பாலியல் கொடூரம் போன்ற மிக முக்கியமான வழக்கின் சாட்சியிடம் நடத்தப்படும் விசாரணை பற்றி ஊடகங்களுக்கு தகவல் தெரிவிப்பதும், விசாரணைக்கு வரும் சாட்சியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட பலரது விவரங்களைக் கேட்பதும், செய்தி தரும் சோர்ஸ்களை வெளிப்படுத்த வேண்டும் என மிரட்டுவதும் சட்டவிரோதமானது என்பதை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு வழக்கின் புலன் விசாரணையில் அந்த வழக்கில் சாட்சிகள் யார் யார் என விசாரணையின் போது பொது வெளியில் தெரிவிப்பது ஆபத்தானது. புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம் புரிந்தவர்கள் யார், எத்தனை பேர் அவர்களது பின்புலம் அதனால் அவர்கள் பெற்ற ஆதாயம் எதுவும் முடிவாக தெரியாது. இந்தச் சூழலில் ஆரம்ப கட்ட விசாரணையிலே சாட்சிகளை ஊரறிய உலகறிய விளம்பரப்படுத்துவது என்பது சாட்சிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிகை பொள்ளாச்சி விவகாரத்தின் கொடூரத்தையும் தீவிரத்தையும் உணர்ந்ததால்தான் சி.பி.சி.ஐ.டி. அளித்த சம்மனுக்கு ஆஜராகி ஆதாரங்களை புலன் விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சியாக சமர்ப்பிக்கிறது. ஆனால் அந்த சாட்சியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுவதால் இது குற்றத் தடுப்புக்கான விசாரணையல்ல. முழுக்க முழுக்க குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு தரும் விசாரணையாக இது இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பல்வேறு பிரபலமான வழக்குகளில் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து இது போன்று சாட்சிக்கு மரியாதையோ, பாதுகாப்போ இல்லாத புலன் விசாரணை நடைமுறையை நமது காவல்துறை கையாள்வது அப்பட்டமாகத் தெரிகிறது. இதற்கு நக்கீரன் ஆசிரியரிடம் நடத்தப்பட்ட விசாரணையே சான்று என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
4 மணி நேரக் கடுமையான விசா ரணைக்குப் பின் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத் திலிருந்து வெளியே வந்த நமது நக்கீரன் ஆசிரியர் செய்தியாளர்களை சந்தித்தார்.
""உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும் என்ற நோக் கத்தில் விசாரணை நடைபெறவில்லை. உண்மைகளை அம்பலப்படுத்திய நக்கீரனை எப்படியாவது குற்றவாளியாக்கி, கைது செய்து சிறையில் அடைத்துவிடவேண்டும் என்கிற அரசாங்கத்தின் பழிவாங்கும் வெறிதான் வெளிப்பட்டது. பத்திரிகையில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, கூடுதல் ஆதாரங்களைத் திரட்டி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதுதான் காவல்துறையின் வேலை. ஆனால், குற்றவாளிகளை அம்பலப்படுத்தவே கூடாது என்பதுபோல நக்கீரன் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்ற பெயரில் தாக்குதல் தொடுக்கிறது. 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டால், அவர்கள் யார் யார் என்று கேட்கிறது. 1100 வீடியோக்கள் வரை எடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை சொன்னால் அந்த வீடியோக்களைக் கொடு என்கிறது. பாலியல் கொடூரம் செய்தவர்கள் யார் யார் என்று சொல்லச் சொல்கிறது. இவையெல்லாமே காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை'' என்றார் விரிவாகவே.
நான்கு மணி நேர விசாரணையில், திரும்பத் திரும்ப நக்கீரனில் வெளியான செய்திக் கட்டுரைகளிலிருந்த ஒவ்வொரு வரியிலிருந்தும் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 'டஹண்க் ஏஹய்ஞ்' என்பது பற்றி படத்துடன் நக்கீரன் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் படம் எப்படி கிடைத்தது, அதில் சம்பந்தப்பட்டிருந்த ஹரீஷ் பற்றி எப்படி எழுதினீர்கள். ஹரீஷுக்கும் இன்னொரு இளைஞனுக்கும் நடந்த காரசாரமான உரையாடலை வெளியிட்டுள்ளீர்களே, அதில் கோகுல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இளைஞனின் உண்மைப் பெயர் என்ன? ஆடியோ ஆதாரங்கள் எல்லாவற்றையும் ஒப்படையுங்கள்.
பெண்களை பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய கெரோன் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றியிருப்பதாக ஒரு பெண் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளீர்களே, அதற்கான ஆதாரத்தைக் கொடுங்கள். அந்தப் பெண் யார் என்று சொல்லுங்கள்.
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் படத்தை எந்த அடிப்படையில் வெளியிட்டீர்கள்? அவரைப் பற்றிய வீடியோ இருக்கிறதா? பார் நாகராஜன் பற்றிய வீடியோ இருக்கிறதா? ஜெயராமனின் மகன்கள் கடலோரம் தலைமறைவு என பெட்டிச் செய்தி வெளியிட்டுள்ளீர்களே, அதில் அவர்களைப் பாதுகாப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் யார் என்று சொல்லுங்கள்' எனக் குற்ற வாளிகள் அம்பலப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், தற்போது பிடிபட்டுள்ள 4 பேருடன் விசாரணையை முடித்து விடவேண்டும் என்ற வகையிலும்தான் கேள்வி கள் இருந்தன.
போலீசிடம் சிக்கி குண்டர் சட்டத்தில் அடை பட்டுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்டதாக அண்மையில் ஒரு பெண் ணின் ஆடியோ வெளி யானது. இதையடுத்து, பண்ணை வீட்டின் மர்மங் கள் குறித்து நக்கீரனில் செய்திக் கட்டுரை வெளியானது. அது பற்றியும் நக்கீரன் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பிய சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. நிஷாவும் எஸ்.பி. ராஜேஸ்வரியும் மிரட்டல் தொனியை கடுமையாக்கினார்கள். பண்ணை வீட்டை ஆராய்ந்தீர்கள் என்றால், தரையைத் தோண்டிப் பார்த்தீர்களா? பொக்லைன் எந்திரம் கொண்டு போனீர்களா?'‘ என்று மேதாவித்தனமாகக் கேட்டார் எஸ்.பி.நிஷா. களத்தில் உரிய ஆய்வு செய்து புலனாய்வுச் செய்திகளை வெளியிட்ட நக்கீரன் நிருபர்களின் போன் நம்பர்களையும் சி.பி.சி.ஐ.டி. கோரியது. விசாரணை முழுவதுமே, இனி நக்கீரனில் எந்த செய்தியும் வெளியாகக் கூடாது என்ற மிரட்டல் பாணியிலேயே இருந்தது. முடக்கிவிட்டால், அதைக் காட்டி மற்ற ஊடகங்களிலும் செய்திகளை முடக்கிவிடலாம் என்பதுதான் அரசாங்கத்தின் திட்டம்.
பொள்ளாச்சி வழக்கை தமிழக காவல்துறை விசாரிப்பதை நம்பாத தமிழக அரசு அதையும் தாண்டி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த உத்தரவில் நடைபெற்ற குளறுபடிகளால், சி.பி.சி.ஐ.டி விசாரணையிலேயே முடித்துவிடவேண்டும் என்ற வேகத்தில் செயல்படுகிறது. அடுத்த கட்ட விசாரணைக்குச் சென்றால், ஆட்சியாளர்களை விசாரணைக்குட்படுத்த வேண்டி யிருக்கும். இந்நிலையில், உயர்நீதிமன்றம் தலையிட்டு, சி.பி.ஐ.க்கு மாற்றும் வகையில் புதிய உத்தரவை போடும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய தால் புதிய ஆணை, வடிவம் பெற்று வரும் நிலையில், சி.பி.சி.ஐ.டி. அவசர அவசரமாக தொடர்ந்து விசாரணை நடத்துவது பல சந்தேகங்களை கிளப்புகிறது.
அதிலும் நக்கீரனுக்கு தகவல் தரும் நபர்களின் விலாசம், போன் நம்பர் ஆகியவற்றை கேட்பது உச்சகட்ட அத்துமீறல் ஆகும். நக்கீரன் வெளியிட்ட வீடியோ, ஆடியோ மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்துவிட்ட நிலையில் மீண்டும் அங்கேயே கையில் ஒரு சம்மனைக் கொடுத்து பின்வரும் தகவல்களை கேட்டுள் ளது சி.பி.சி.ஐ.டி.
இன்று 01.04.2019-ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு தாங்கள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். அதில் தாங்கள் 03.04.2019 தேதிக்கு முன்பாக கொடுப்பதாக சொன்ன ஆதாரங்கள் பின்வருமாறு:
1. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்த பெண்ணின் Account Number
2. Vol 31 issue 99 2019 நக்கீரன் இதழில், 20 பெண்கள் மாயமானவர்கள் மற்றும் தற்கொலைக்கு முயன்ற பெண்களின் பெயர் மற்றும் விலாசம் (ரகசியமாக வைக்கப்படும்)
3. இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்கிறாள் என்பவர் பற்றி பெயர் மற்றும் விலாசம்
4. Vol 31 issue 96 2019 நக்கீரன் இதழில் ஆபாச வீடியோ கும்பலில் சிக்கிய ஒரு இளம்பெண்ணின் சகோதரி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பற்றிய தகவல்
5. Vol 31 issue 97 2019 மார்ச் 16-19 நக்கீரன் இதழில் பிரவீன் காவல்துறையினரை தாக்கியதாகவும், அவர்களை கைது செய்ய போகும் போது அவர்கள் தப்பித்துவிட்டதாகவும் கூறியதாக கூறியிருக்கிறீர்கள். அவர்களைப் பற்றிய விவரம்
6. Vol 31 issue 97 2019 மார்ச் 16 19 நக்கீரன் இதழில் பெயர் மாற்றப்பட்டுள்ள ருசியின் பெயர் மற்றும் விலாசம்
7. மேற்படி இதழில் மாவட்ட தி.முக. இளைஞர் அணியை சேர்ந்த நவநீதகிருஷ்ண னின் கைப்பேசி மற்றும் விலாசம்
8. Vol 31 issue 99 2019 மார்ச் 23 26 நக்கீரன் இதழில் பெயர் மாற்றப்பட்டுள்ள கோகுலின் உண்மையான பெயர் மற்றும் விலாசம்
9. மேற்படி இதழில் ஹரீசுடன் தொலைபேசியில் பேசிய இளைஞர் பற்றிய விவரம் மற்றும் அவர் பேசிய உரையாடலின் பதிவு
10. மேற்படி அதே இதழில் திருநாவுக் கரசு ஊரில் இரண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விவரம்
11. ஊட்டியில் ஒரு விருந்தினர் மாளிகையில் சில இளைஞர்கள் தங்கி சீரழித்ததாக கூறிய பெண் சமூக சேவகியின் பெயர் மற்றும் விலாசம்
12. நெகமம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருநாவுக் கரசால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், வீடியோவை இணையதளத்தில் பதிவிட்ட வீடியோ கிராபர் தற்கொலை செய்து கொண்ட தாகவும் சொல்லப்பட்ட ஊர் பற்றிய விவரம்
13. கெரோனை பற்றி கூறிய கேரளாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விலாசம்
இத்தனை விவரங்களையும் நக்கீரன் தர சம்மதித்ததாக தயாரிக்கப்பட்ட படிவத்தை ஏற்க மறுத்த நக்கீரன் ஆசிரியர், எதையும் தருவதாக சொல்லவில்லை எனத் தெரிவித்து, கையெழுத்திட்டார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதாக ஊரை ஏமாற்றும் எடப்பாடி அரசு, தன் கையில் உள்ள சி.பி.சி.ஐ.டி.யை வைத்து நக்கீரனை முடக்க நினைக்கிறது. இந்த மிரட்டலுக்கு நக்கீரன் ஒருபோதும் பணியாது. இதனை சட்டரீதியாக நக்கீரன் எதிர்கொள்ளும். நீதிமன்றத்தின் துணையை நாடி, அங்கு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்ப துடன், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமை, ஆட்டோ சங்கர் வழக்கு மூலம் நக்கீரன் பெற்றுள்ள பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழங்கியுள்ள வெளிப்படைத்தன்மை இவற்றை முன்வைத்து தனது போராட்டத்தை உறுதியுடன் தொடரும்.
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக்
_____________
நக்கீரனிசம்!
நக்கீரன் மேற்கொள்கிற புலனாய்வு இதழியல் என்பது வெளிப்படைத்தன்மை வாய்ந்தது. சந்தன கடத்தல் வீரப்பன் யார் என்று அவனை பேட்டி எடுத்து புகைப்படத்துடன் நக்கீரன் வெளியிட்டபோதே, அவனது இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி நக்கீரனுக்கு உருவாக்கப் பட்டது. அது இருமாநில அதிரடிப்படையின் வேலை என்பதை நக்கீரன் தெளிவாக உணர்த்தியது. வீரப்பன் தொடர்பான நக்கீரன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டு, வெற்றியைப் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு மேல்முறையீட்டுத் தீர்ப்பில், நக்கீரன் வெளியிட்ட புகைப் படங்களே குற்றவாளிகளுக்கு எதிரான, வலுவான சாட்சியமாக இருந்தன என்பதை நீதிபதிகளே குறிப்பிட்டுள்ளனர். பொள்ளாச்சி விவகாரத்திலும் நக்கீரன் சட்டரீதியாக தன் பங்களிப்பைச் செய்யும். அரச பயங்கரவாதத்திற்கும் ஒடுக்கு முறைகளுக்கும் பயப்படாது. நிர்மலாதேவி விவகாரத்தை அம்பலப்படுத்தியதற்காக கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில் 124வது பிரிவின்படி நக்கீரன் மீது நடத்தப்பட்ட சட்டப்பாய்ச்சலையும் நீதியின் துணையுடன் உறுதியாக எதிர்கொண்டது. இத்தகைய உறுதியான புலனாய்வுத் தன்மையைத்தான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், ‘நக்கீரனிசம்’ எனக் குறிப்பிட்டார்.