பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து சமூக ஊடகங்கள், தி.மு.க. சார்பாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள்... என தீவிரமாக இயங்கிக்கொண்டு வந்தவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன். அவரை போலீசில் மாட்டிவிட வேண்டும் என பொள்ளாச்சி வி.ஐ.பி. டீம் வெகுநாட்களாய் போட்ட திட்டத்தை அண்மையில் நிறைவேற்றியுள்ளனர்.

pp

இதுபற்றி நம்மிடம் பேசிய பொள்ளாச்சி தி.மு.க.வினர், “""நவநீதகிருஷ்ணன் பேஸ்புக்கில் அமைச்சர் வேலுமணியின் படங்களை பார்வேர்டு பண்ணியிருக்கிறார். வேலுமணி பற்றி விமர்சித்தாலே சிறைதான் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அதன்படி, பொள்ளாச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினரான செல்வராஜை வைத்து மேற்கு காவல்நிலையத்தில் நவநீதகிருஷ்ணன் மீது புகார் ஒன்றைக் கொடுக்க வைத்திருக்கின்றனர்.

அதில், பொள்ளாச்சி வெங்காய மார்க்கெட் பின்புறம் உள்ள பழைய மோட்டார் சாமான்கள் விற்கும் கடை அருகே இரவு 9 மணியளவில் நானும், எனது நண்பர்கள் முருகேசனும், முபாரக்கும் நின்றிருந்தபோது, அங்கே இருந்த நவநீதகிருஷ்ணனிடம், "எதுக்கு எங்க அமைச்சர் பத்தி இப்படி எழுதுறேன்'னு கேட்டேன். "அப்படித்தான் எழுதுவேன்'னு ஒருமையில் பேசி, என் கன்னத்துல ஓங்கி அறைஞ்சுட்டாரு. தடுக்க வந்த என் நண்பர்கள் மூணுபேரையும் தீ வச்சுக் கொளுத்திருவேன்னு மிரட்டிட்டு போனார். நைட்டுங்கறதால ஸ்டேசனுக்கு வந்து புகார் கொடுக்கலை. அடுத்தநாளு நாங்க மூணுபேரும் கலந்துபேசி நவநீதகிருஷ்ணன் மேல புகார் கொடுத்து இருக்கிறோம்னு என அந்தப் புகார் கட்டமைக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆளுந்தரப்பு புகார் என்றதுமே இன்ஸ்பெக்டர் வைரம் உடனடியாக நவநீதகிருஷ்ணன் மீது, கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு கொண்டுசெல்ல ஆயத்தமானார்.

இதை அறிந்த நாங்கள் ஸ்டேசனை முற்றுகையிட்டு, "பொய் வழக்குப் போடாதே...' எனப் பெரும் போராட்டம் நடத்தினோம். பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு, நவநீதகிருஷ்ணனை நள்ளிரவில் விடுவித்தார்கள். இதில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவரும் அ.தி.மு.க.வின் பொய்ப் புகாருக்குத் துணைபோனார் என்பதுதான் வேதனை'' என்கிறார்கள் கோபமாய்.

புகார் பற்றி நவநீதகிருஷ்ணனிடம் கேட்டோம். ""அந்த நாளில் நான் பொள்ளாச்சியிலேயே இல்லை. அன்னூரில் எனது உறவினர் வீட்டில் இருந்தேன். ஆட்சியாளர்கள் பழி வாங்க முயன்றார்கள். அதை உடைத் திருக்கிறோம்'' என்கிறார். புகார் கொடுத்த அ.தி.மு.க. செல்வராஜிடம், ""அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார்களே?'' எனக் கேட்டோம். ""அப்படியா? அது தெரியவில்லை. நான் லாயர் வீட்ல தான் இருக்கறேன். அவரு கிட்ட பேசிட்டு கூப்புடறேன்'' என லைனை கட் செய்து விட்டார்.

Advertisment

pollachi-issueஇந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்னொரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருப்பது இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஒரு பெண் அளித்த புகார்தான் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் கைதாக காரணமானது. அதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. யிடம் 3 பெண்கள் அளித்த வாக்குமூலம், அ.தி.மு.க. மாணவரணி செயலாளராய் இருந்த அருளானந்தம், பாபு, ஹெரோன் ஆகிய 3 பேரை உள்ளே வைத்தது.

தற்போது கோவை மகளிர் கூடுதல் கோர்ட்டில் பெண் நீதிபதி திலகேஸ்வரி( பொறுப்பு) முன்பு மேலும் ஓர் இளம் பெண் ரகசிய வாக்கு மூலம் அளித்திருக்கிறார். அதில் ""என்னை பாலியல் பலாத்காரம் செய்ததில் அருளானந்தம் உள்ளிட்ட மற்ற இரண்டு பேரும் முக்கியமானவர்கள். மேலும் சிலரும் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்கள். அவர்களின் பெயர்கள் சரியாகத் தெரியவில்லை. தெரிந்து கொண்டு சி.பி.ஐ அதிகாரிகளிடம் சொல்கிறேன்...'' என கண்ணீர் கசிய கூறிவிட்டு வந்திருக்கிறார். இதனால் ஆளுந்தரப்பு அலற ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி-ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த எடப்பாடி... ""பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். தவறே நடக்காத பொள்ளாச்சியில் தவறு நடந்தது என ஸ்டாலினும், கனிமொழியும் பொய் பேசிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது பொய் என சீக்கிரம் நிரூபணம் ஆகும்'' என சீரியசாய் பேச... எடப்பாடி "நல்லா கப்சா அடிக்கிறார்' என மக்களிடம் கோபம் வெளிப்பட்டது.

முதல்வர் பரப்புரை செய்த நிலையில், 27-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ததாக, ஹரிஸ்குமார், பிரவீன்குமார், சபரி நாதன் என்கிற சூர்யா என்கிற 3 பேரும் ஆனைமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.