பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே சிறைக்குச் சென்ற சசிகலா, மறைந்த தன் கணவர் நடராஜனுக்காக ஒரு வாரம் மௌன விரதமிருக்க முடிவு செய்ததை தவிர்க்க வலியுறுத்தியிருக்கிறார் இளவரசி. ஆனாலும் அதனை ஏற்காமல் மௌனவிரதமிருந்துள்ளார் சசிகலா.
பரோல் காலத்தில் தஞ்சையில் இருந்த சசிகலா, அங்கிருந்து சிறைக்குச் செல்ல கிளம்புவதற்கு முதல்நாள், அ.ம.மு.கழகத்தின் மாவட்ட செயலாளர்களுடன் 3 மணி நேரம் கலந்தாலோசித்தார்.
ஆலோசனையில் கலந்துகொண்ட மா.செ.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""சிறையிலேயே என் காலம் முடிந்துவிடும்னு என்னால் வளர்க்கப்பட்டவர்கள் (எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம்) நினைக்கின்றனர். அவர்களுடைய நினைப்பை பொய்யாக்குவேன்.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும், "சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுங்கள். அவரது தலைமையில் ஆட்சி நடக்கட்டும். பழனிச்சாமி போன்ற நல்ல மனிதர் கிடைக்கமாட்டார்' என சொல்வதற்கு தயாரானேன். அப்போது, "முதலில் எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கிவிடுங்கள். அதன்பிறகு யாரைத் தேர்ந்தெடுப்பதுங்கிறதை சொல்லுங்கள்' என என்னிடம் எடப்பாடி சொன்னார். "ஏன், இப்படி சொல்கிறார்னு அப்போது எனக்குப் புரியவில்லை. சரியான யோசனைதானேன்னு நினைத்து, அதன்படியே எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன் பிறகுதான் "எடப்பாடியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்' என சொன்னேன். அதில் பலருக்கும் உடன்பாடில்லைங்கிறது தெரிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps_8.jpg)
எடப்பாடியை முதல்வராக தேர்ந்தெடுப்பதில் முக்குலத்தோர், வன்னியர்கள், நாயுடுகள், தலித்துகள் உள்பட மற்ற சமூகத்தினருக்கு விருப்பமில்லை. கையெழுத்து வாங்கிவிட்டதால் எனது முடிவை எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கவில்லை. தனக்கு எதிர்ப்புகள்வரும் என தெரிந்துதான் முன்கூட்டியே கையெழுத்து வாங்க வலியுறுத்தியிருக்கிறார் எடப்பாடி. அவரது நயவஞ்சகம் அப்போது எனக்கு தெரியாமல் போய்விட்டது. கொஞ்ச நாளைக்குப் பிறகுதான் அதை உணர்ந்தேன். பன்னீர் சதிகாரர்னா, எடப்பாடி நயவஞ்சகர். அப்படிப்பட்ட அவர்களை மன்னிக்கவேமாட்டேன்' என மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினார்.
அதைக்கேட்ட மா.செ.க்கள் பலர், "இப்போது இப்படி நீங்கள் சொல்றீங்கம்மா. ஆட்சி அதிகாரம் போனதும், எங்களை மன்னிச்சிடுங்கன்னு ஓடோடி வந்து உங்க காலில் அவங்க விழும்போது நீங்களும் அவங்களை மன்னிச்சிடுவீங்க. அப்போ, நாங்களெல்லாம் ஓரங்கட்டப்படுவோம்' எனச் சொல்ல... ‘ "அந்த தப்பை மீண்டும் நான் பண்ணமாட்டேன். என்னுடைய கஷ்டகாலத்துல உறுதுணையா நிற்கும் உங்களை புறந்தள்ளமாட்டேன்'’என நா தழுதழுக்கச் சொன்னார் சசிகலா. அதில் நெக்குருகிப்போனார்கள் மா.செ.க்கள். "சிறையில் நான் இருந்தாலும் சூழல்களுக்கேற்ப எப்படிப்பட்ட அரசியல் முடிவுகளை எடுப்பதுன்னு அப்பப்போ சொல்லியனுப்புவேன்' என தெளிவுபடுத்தினார் சசிகலா''’என விவரிக்கின்றனர்.
தஞ்சையில் சசிகலா தங்கியிருந்தபோது அவருடைய நடவடிக்கைகளை உளவுத்துறை மூலம் உன்னிப்பாக கவனித்தே வந்தார் முதல்வர் எடப்பாடி. சிறைக்குச் செல்லும் கடைசி நாளில் மா.செ.க்களிடம் சசிகலா வெளிப்படுத்திய உணர்வுகள்வரை அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனையறிந்து தமது உணர்வுகளை சீனியர் அமைச்சர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி!
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் பரவலாக எதிரொலிக்கும் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ""நயவஞ்சகரென்றும் துரோகியென்றும் என்னை விமர்சித்திருக்கிறார் சின்னம்மா. ஆனா, இன்றைக்கு அவங்க சிறையில் இருக்க யார் காரணம்? தினகரன்தானே? சொத்துக்குவிப்பு வழக்கில் லண்டன் வழக்கையும் இணையுங்கள் என ஜெயலலிதாவிடம் வக்கீல் ஜோதி சொன்னார். லண்டன் வழக்கையும் இணைத்துவிட்டால் சொத்துக்குவிப்பு வழக்கு அவ்வளவு எளிதில் முடியாது என்பதாலேயே அவ்வாறு சொன்னார் ஜோதி. இதை தெரிந்துகொண்ட தினகரனின் வழக்கறிஞர், "சொத்துக்குவிப்பு வழக்கில் லண்டன் வழக்கை இணைத்தால் நீங்களும் மாட்டிக்குவீங்க. உங்களையும் ஜெயிலில் தள்ள ஒரு சதி நடக்குது' என சொல்ல, ஜோதியை மிரட்டி லண்டன் வழக்கை இணைக்காமல் பார்த்துக்கொண்டார் தினகரன். அரசுத் தரப்பும் இதில் கவனமாக இருந்தது. லண்டன் வழக்கு இதில் சேராததால், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்தும் தமிழகத்திலேயே இருந்ததால், தீர்ப்பு சொல்லவேண்டிய நிலை உருவானது. லண்டன் கேசையும் இணைத்திருந்தால் இப்போது வரைக்கும் தீர்ப்பு வந்திருக்காது. ஆக, அவர் சிறைக்குச் செல்ல காரணமே தினகரன்தான். அவர் நல்லவர்; நாமெல்லாம் துரோகிகளா?
அம்மா (ஜெயலலிதா) அப்பல்லோவில் அட்மிட்டாகியிருந்த நிலையில், என்னிடம் நிலுவையிலிருந்த 780 கோடி ரூபாய்க்கான கணக்கு வழக்குகளை சின்னம்மாவிடம் ஒப்படைத்தேன். சிறைக்குப் போனபோது தினகரனை கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்துவிட்டு 780 கோடியும் அவரிடம்தானே கொடுத்துவிட்டுப்போனார். அதுக்கு கணக்கு வழக்கு உண்டா? ஆர்.கே.நகர் தேர்தலுக்காக 780-ல் சில கோடிகளை மட்டும் விஜயபாஸ்கரிடம் கொடுத்தார் தினகரன். இந்த 780 கோடி விவகாரத்தை டெல்லிக்கு போட்டுக்கொடுத்தார் ஓ.பி.எஸ். அதை கைப்பற்றத்தான் ரெய்டு நடத்தினார்கள். 780-ம் கிடைக்கவில்லை. மாறாக, டைரி சிக்க, நான் உட்பட அமைச்சர்கள் எல்லோரும் அதில் சிக்கினோம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் நின்றதால்தானே இவ்வளவு சிக்கலும். இத்தகைய சிக்கல்கள் இல்லாமல் இருந்திருந்தால் டெல்லி நமக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்திருக்குமா? அந்த நெருக்கடியால்தானே, ஓ.பி.எஸ்.ஸை மீண்டும் சேர்க்கவேண்டியிருந்தது. அவர்களை (சசிகலா தரப்பினரை) ஒதுக்க வேண்டிய சூழலும் வந்தது. தினகரன் எப்படிப்பட்டவர்னு காலம் அவருக்கு உணர்த்தும். அன்றைக்கு நாம் நல்லவர்களாகத் தெரிவோம் என மனம்விட்டு பேசியிருக்கிறார் எடப்பாடி''‘என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04-10/sasi-eps.jpg)