ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் எடப்பாடி அரசுக்கு முக்கியம் என்ற நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் தனி மேடையில் ஏறியது எல்லோரையும் உற்றுப் பார்க்க வைத்தது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மூன்றாம் ஆண்டுத் துவக்க விழாவை, சமூக நீதிப் பொதுக்கூட்டமாக, 28-02-18 அன்று இரவு 7:10 மணிக்கு நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடத்தினார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமீமுன் அன்சாரி.
""காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அன்சாரியுடன் மேடையில் அமர்ந்திருந்த மற்ற இரு எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், ஆகியோருக்கு டி.டி.வி.தினகரன் அணியினர் சால்வைகள் அணிவித்து மூவருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் எடப்பாடி அணியின் நாகை ஒ.செ.யும், ஓ.எஸ்.மணியனால் ஓரங்கட்டப்பட்டவருமான குணசேகரன் மேடையில் ஏறி, மூவருக்கும் சால்வையணிவித்து கூட்டத்தில் இருந்த அனைவரையும் வியப்போடு நிமிர்ந்து பார்க்க வைத்தார்.
கூட்டம் தொடங்கியது.
தனியரசு எம்.எல்.ஏ.: இளமையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த நடிகர்கள் வயதான பிறகு, அதுவும் ஜெயலலிதா மறைந்த பிறகு உடல்நலமற்று, கலைஞர் செயல்படாதிருக்கின்ற நிலையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, தமிழக முதல்வராகத் துடிக்கிறார்கள். தமிழகத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளில் கருத்தேதும் சொல்லாத இவர்களின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
கருணாஸ் எம்.எல்.ஏ.: மற்ற கூட்டணிகள் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ... எங்கள் கூட்டணி பற்றி பேசுகின்ற நிலை உருவாகிவிட்டது. என்னைச் சாதிவெறியன் என்கிறார்கள். அது உண்மை இல்லை. ஆனால் நான் சமுதாயம் சார்ந்து இருந்ததால்தான் எனக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைத்தது. இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை. சாதி ஒன்றுதான் தமிழர்களை ஒருங்கிணைக்கத் தடையாக இருக்கிறதெனச் சொன்னால், சாதியை உடைக்க நான் தயார்.
தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ.: நாங்கள் மூவரும் மூன்று கட்சிகளாக இருந்தாலும், எங்கள் மூவருக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் எப்போதும் இணைந்து நின்று குரல் கொடுப்போம். பெரியார், அண்ணா வாழ்ந்த இம்மண்ணில், டெல்லி தன் கலாச்சாரத்தை புகுத்த அனுமதிக்க மாட்டோம். முக்கியமான ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன். சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனால் எடப்பாடி அரசுக்கு ஏதாகினும் நெருக்கடி ஏற்படுமாயின் அந்தச் சந்தர்ப்பத்தில் எடப்பாடி அரசுக்கு உறுதுணையாக இருப்போம்.
திரண்டிருந்த கூட்டம் கலையாமல் இரவு 11:30 மணிவரை பேச்சைக் கேட்டதில் தெரிந்தது தமீமுன் அன்சாரியின் உழைப்பும் அதற்கான பலனும்.
-க.செல்வகுமார்