மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வெளியான முதல் அறிக்கையே "காவிரி பிரச்சினையில் நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்கக்கூடாது' என்பதே. அதேபோல் அவர் மாநிலச் செயலாளராக கலந்துகொண்ட முதல் ஆர்ப்பாட்டம், "தூத்துக்குடியில் செந்தொண்டர் படையை தாக்கிய ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம் மீது நடவடிக்கை எடு' என மாநில அரசை விமர்சிக்கும் ஆர்ப்பாட்டம்தான். சிதம்பரம் பத்மினி வழக்கு, வாச்சாத்தி மக்கள் மீதான மனித உரிமை தாக்குதல், பிரேமானந்தா மோசடி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி என சி.பி.எம்.மின் முத்திரை பதித்த விவகாரங்களில் எல்லாம் பாலகிருஷ்ணனின் பங்கு மிக அதிகம். விவசாயிகள் சங்க தலைவர், களப்போராளி என போராட்டக் களங்களில் மிளிர்ந்தவரின் கையில் மாநில செயலாளர் என்கிற பதவி வந்து சேர்ந்திருக்கிறது.
ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாய் கொல்லப்படுவதை கண்டித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாயிருந்த நேரத்தில் அவரை சந்தித்தோம். அவர் முன்னெடுத்த அனைத்து போராட்டங்களிலும் நக்கீரன் உயிர்த்துடிப்புடன் இணைந்திருந்ததை நினைவுகூரியபடி பேசினார்.
தற்போதை அரசியல் சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?
கே.பாலகிருஷ்ணன்: ஜெ. மறைவினால் நிலை தடுமாறி நிற்கக்கூடிய அ.தி.மு.க., அதன் அரசாங்கம் குஞ்சு பொரிச்ச கோழி எப்படி தனது இரையைத் தேடுவதைவிட குஞ்சுகளை பாதுகாப்பதை பிரதான வேலையாக செய்யுமோ... அதுபோல எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து ஆட்சிக்கு ஆபத்து வராமல் செயல்படுவதுதான் அ.தி.மு.க. அரசின் பிரதான பணியாக இருக்கிறது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பெரிதாக மாநில அரசு கவலைப்படவில்லை. அரசு ஊழியர்கள் நீதிமன்ற தீர்ப்பு மூலம் வழங்கப்பட்ட சலுகைகளை அமல்படுத்த கோரி போராடுகிறார்கள். கரும்பு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தாங்க முடியாத பேருந்துக் கட்டண உயர்வு, வேலையில்லாத வாலிபர்கள், மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். திருப்பூரில் பின்னலாடை தொழிலே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. "முத்தலாக்' சட்டத்தை சுப்ரீம் கோர்ட் சொன்னது என்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யும் மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கத் தயாராக இல்லை. தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சிக்குழுக்களும் சென்று கேட்டுக் கொண்டால்தான் நடவடிக்கை எடுப்போம் என்ற மத்திய அரசின் நிலையே அதன் அக்கறையின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. மக்கள் விரோத மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து போராடி அவர்களை வீழ்த்த வியூகம் அமைக்கத்தான் நாங்கள் மாநாடுகளை கூட்டி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
மத்திய -மாநில அரசுகளை எப்படி வீழ்த்தப் போகிறீர்கள்?
கே.பாலகிருஷ்ணன்: பலவீனமான அ.தி.மு.க. அரசை பா.ஜ.க. ஆட்டி வைக்கிறது. அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதை எதிர்த்து மற்ற கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்துகிறோம் அந்தப் போராட்டத்தின் மூலம்தான் வீழ்த்தப்போகிறோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க.வின் தொடர்ச்சியான வெற்றிக்கு காரணமாக அமைந்ததே அதைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?
கே.பாலகிருஷ்ணன்: அன்றைக்கிருந்த சூழலில் நாங்கள் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தோம். இப்பவும் நாங்கள் நினைப்பது அப்போது அமைந்தது போன்ற சூழல்கள் மறுபடியும் அமையுமானால் மக்கள் நலக் கூட்டணியை அமைக்க முயல்வோம். அது சூழலை பொறுத்தது. தேர்தல் காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை அந்த காலகட்டத்தில் நிலவும் சூழலைப் பொறுத்து முடிவு செய்யலாம் என்பதைத்தான் எங்களது மாநில மாநாட்டில் விவாதித்து முடிவு செய்துள்ளோம். அரசியல் கட்சிகள் எப்படி இருக்கும் என்பதை யூகம் செய்து பேசமுடியாது.
தமிழகத்து அரசியல் சூழல் என்பது உடனடியாக சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் வருகிற மாதிரிதான் இருக்கிறது அல்லவா?
கே.பாலகிருஷ்ணன்: எந்த தேர்தல் வந்தாலும் பா.ஜ.க.வையும் அ.தி.மு.க.வையும் வீழ்த்துவது என்பது எங்களது முக்கிய நோக்கம். அந்த நோக்கத்திற்கு எந்த கட்சிகள் பயன்படுமோ அந்தக் கட்சிகளோடு இணைவோம். அது எந்த கட்சியுடன் என்பது இப்போது என்னால் சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது என்ன செய்வது என அகில இந்திய தலைமையோடு சேர்ந்து முடிவெடுப்போம். அத்துடன் தற்பொழுது தமிழக மாநில மாநாடு முடிவடைந்துள்ளது. ஹைதராபாத்தில் அகில இந்திய மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டில் ஒட்டுமொத்த இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த என்ன நிலை எடுக்க வேண்டும் என விவாதித்து தீர்மானிக்க உள்ளோம். அதையொட்டி தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய யுத்திகளை குறித்து முடிவெடுப்போம்.
சமீபத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் பா.ஜ.க., காங். அல்லாத இடது முன்னணியை அமைக்க வேண்டும் என பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
கே.பாலகிருஷ்ணன்: பெருமுதலாளிகள், நிலபிரபுக்கள் தலைமையில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக இடதுசாரி கட்சிகளை இணைத்து ஒரு முன்னணியை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. அந்த கனவு கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் சாத்தியமாகியுள்ளது. அது எல்லா மாநிலத்திலும் உடனடியாக சாத்தியப்படாது. தமிழகத்தில் கூட சி.பி.ஐ., சி.பி.ஐ. எம்.எல். (லிபரேசன்), எஸ்.யு.சி.ஐ. ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். அதேநேரம் இடது முன்னணி அமைக்க முடியாத மாநிலங்களில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் எங்கள் கூட்டணியால் புறவாசல் வழியாக பா.ஜ.க. வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க.வை தோற்கடிப்பதற்கு ஏற்ற வியூகங்களை வகுப்போம்.
-சந்திப்பு: தாமோதரன் பிரகாஷ்
படம்: குமரேஷ்