மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையிலும் தி.மு.க.வுக்கு சட்ட நெருக்கடிகளிலிருந்து நிம்மதி தருகிற காலமாக இது இருக்கிறது.
ஏர்செல் மேக்சிஸ், 2ஜி அதைத் தொடர்ந்து தற்பொழுது சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு என தொடர்ந்து மூன்று வழக்குகளில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் "ஹாட்ரிக்' விடுதலை பெற்றுள்ளனர். குறிப்பாக தயாநிதி மாறன் இரண்டு வழக்குகளில் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். லேட்டஸ்ட்டாக தீர்ப்பளிக்கப்பட்ட சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் மோசடி வழக்கிலும் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் டி.வி. அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கெதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. இந்தச்சூழலில் தயாநிதி மாறனை சந்தித்தோம்...
சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ராஜேஷ், "வரைபடம் உட்பட ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன' என விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே கோர்ட்டில் தெரிவித்திருந்தாரே?
தயாநிதிமாறன்: எனது கோபாலபுரம் வீட்டிலிருந்தும் கலாநிதிமாறனின் அடையாறு வீட்டிலிருந்தும் கேபிள் அமைத்து அதை சன் டி.வி.யுடன் இணைத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தினோம் என்பதுதான் வழக்கு. அதை நிரூபிக்க, பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேபிள் அமைத்ததாக ஒரு வரைபடத்தையும் கொண்டுவந்தார்கள். அந்த வரைபடத்தில் சன் டி.வி. அலுவலகம் இடம் பெறவே இல்லை. அதைத்தான் வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன் கேள்வியாக எழுப்பினார். ""நீங்கள் காட்டும் வரைபடத்தில் சன் டி.வி. வரவேயில்லை. அப்புறம் எப்படி சன் டி.வி.க்காக பி.எஸ்.என்.எல். கேபிளை பயன்படுத்தியிருக்க முடியும்? வைஃபை மற்றும் வயர்லெஸ் முறையில் சன் டி.வி.யுடன் இணைத்து சன் டி.வி. ஒளிபரப்புகளை டெலிகாஸ்ட் செய்தார்களா?'' என்ற கேள்விக்கு சி.பி.ஐ. பதில் சொல்லவில்லை. பி.எஸ்.என்.எல். இணைப்புகள் மூலமாக சன் டி.வி. ஒளிபரப்புகளை செய்திருக்கலாம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இப்படிப்பட்ட யூகங்கள் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் குற்றப் பத்திரிகையில் யூகங்களுக்கு இடமில்லை. 764 தொலைபேசி இணைப்புகள் மூலம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தினார்கள் என்று எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் யூகங்களாகவே குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டது. அதனால்தான் அந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என சி.பி.ஐ. நீதிமன்றம் எங்களை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது.
இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு. உங்கள் வீடுகளில் சோதனைகள் நடைபெற்றன. நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். இன்று வழக்கில் முகாந்திரமே இல்லை என சொல்வதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தது?
தயாநிதி மாறன்: இந்த வழக்கினால் நானும் எனது சகோதரர் கலாநிதி மாறனும் சொல்லொணா மன உளைச்சலுக்கு ஆளானோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில்தான், சி.பி.ஐ. விசாரணைக்கு போனோம். அன்றுமுதல் இன்றுவரை நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என திரும்பத் திரும்பச் சொன்னோம். ஒரு எம்.பி.யாக, தொலைத்தொடர்பு அமைச்சராக எனக்கு தொலைபேசி வசதிகள் அளிக்கப்படுகிறது.
அதை சட்டப்படிதான் நான் பயன்படுத்தினேன். வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள். நான் தீவிரவாத இயக்கங்களிடம் பேசினேனா? என்பதைப் பற்றி விசாரித்தார்கள்.
"நான் ஒரேயொரு தீவிரவாதியிடம்தான் பேசினேன். அது ஆடிட்டர் குருமூர்த்தி' என பதில் சொன்னேன். நான் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளேன் என நிரூபித்தால் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவரின் சகோதரர் நடத்தும் சன் டி.வி.யை முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டத்துடன் புனையப்பட்ட வழக்கு இது. தி.மு.க. அரசியல்வாதியான என்னையும் தி.மு.க.வையும் ஒழிப்பது, இன்னொருபுறம் தொழிலதிபரான கலாநிதி மாறனை ஒழிப்பது என திட்டமிட்டு செலுத்தப்பட்ட ஆயுதம்தான் இந்த வழக்கு. இந்த வழக்கின் விசாரணைக்கு நடுவில் "சன் டி.வி.யை விற்றுவிடுங்கள். உங்களை நாங்கள் கைது செய்யமாட்டோம்' என்கிற பேரமும் நடந்தது. இத்தனை தடைகளை தாண்டித்தான் நாங்கள் இன்று குற்றமற்றவர்கள் என வெளிவந்திருக்கிறோம்.
இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் தொலைத்தொடர்புகள் அனைத்தையும் பதிவு செய்ய "நேஷனல் கேட்வே' என்கிற அமைப்பு இருக்கிறது. அதிலிருந்து சி.பி.ஐ. இந்த வழக்கிற்கு தேவையான பதிவுகளை எடுத்திருக்கலாம் என புதிதாக விளக்கங்கள் வருகிறதே?
தயாநிதிமாறன்: அப்படி எந்த பதிவையும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அமைச்சராக நான் இருந்தபோது உபயோகித்த தரைவழி தொடர்புகளுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்றார்கள். அது ஒரு சிவில் விஷயம். அதற்காக ஏன் கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்கிற கேள்வி சுப்ரீம் கோர்ட்டிலேயே கேட்கப்பட்டது. செல்போன் வந்த பிறகு பேஜர் காணாமல் போய்விட்டது. அதேபோல்தான் சி.பி.ஐ. குறிப்பிடும் அதிக வசதிகள் கொண்ட தரைவழி தொடர்புகள் உள்ளிட்ட எல்லாமும் காலாவதியான தொழில்நுட்பங்கள். என் வீட்டில் 360 தொலைபேசி இணைப்புகள் இயங்கியதாக சொல்கிறார்கள். அதுவும் ஒரே எண்ணில் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த எண் சன் டி.வி. என்கிற ஒளிபரப்பு நிறுவனத்திற்காக பயன்பட்டதாகச் சொல்கிறார்கள். இன்றும் அதே எண் என் வீட்டில் உள்ளது. அதில் 360 தொலைபேசிகள் இயங்கியது என நிரூபிக்க முடியுமா? இதை சவாலாகவே சொல்கிறேன்.
உங்கள் மீது இந்த மோசடி வழக்கை சுப்ரீம்கோர்ட்வரை கொண்டுசென்றவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
தயாநிதிமாறன்: இந்த வழக்கின் சாராம்சமே குருமூர்த்தி சொன்ன பொய்யை உண்மையாக்க அவர் எடுத்த முயற்சிகள்தான். யார் அவர்? அவரது நோக்கம் தி.மு.க.வை அழிப்பது. 2011, 2014 தேர்தல்களில் இந்த வழக்கையும் 2ஜி வழக்கையும் சேர்த்து தி.மு.க. ஊழல் கட்சி என பிரச்சாரம் செய்தார்கள். அதனால் தி.மு.க. தேர்தல் களத்தில் பழிவாங்கப்பட்டது. இப்பொழுது உண்மை வெளியே வந்துவிட்டது. குருமூர்த்தி தோல்வி அடைந்துவிட்டார். குருமூர்த்தியின் குற்றச்சாட்டுகள் ஒரு தெருநாய் குரைப்பது போன்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. மீதான பழி துடைக்கப்பட்டு விட்டது. எனக்கு அது போதும்.
சந்திப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படம்: அசோக்