ஸ்டெர்லைட் விவகாரம் ஓயாத நிலையில், தூத்துக்குடியை மையமாக வைத்து இன்னொரு பிரச்சினை அனல் வீசுகிறது. தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை மதுரை, நெல்லை தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஸமார்ட் சிட்டியாக, அப்சரசாக உருவெடுக்கும் என்று அண்மையில் தான் மத்திய அரசு அறிவித்தது.
திட்டத்தை நிறைவேற்றும் வகையில், முதன்முதலாக தென்கோடியின் தூத்துக்குடி பகுதியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் பொருட்டு மத்திய அரசு 186 கோடியை கடந்த ஜனவரியில் ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், தூத்துக்குடி நகரத்திற்கு மட்டுமல்லாமல், மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேம்பாட்டுப் பணிகளான, பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைப்பது, ஏரியாவின் உட்புறச் சாலைகள், பெருவழிச்சாலைகள் செப்பனிடவும் வழிவகை செய்து அதற்கான நிதி ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தது.
சாலைகள் அமைப்பின் பொறுப்புகளை வழக்கம்போல் பெருவழித்துறையிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது ஸ்மார்ட் சிட்டி திட்டம். தவிர்த்து சிறப்புச் சலுகையாக, தூத்துக்குடிக்கு 10 கோடியும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 18 கோடி என்றும் ஒதுக்கப்பட்டவற்றில் சொல்லப்பட்டவையாம். இந்த நிதிகளைக் கொண்டு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளின் சில அத்தியாவசியப் பணிகளை நகரங்களின் வளர்ச்சிக்கேற்ப மேற்கொள்ளவேண்டும் என்பது கண்டிஷன்.
இவை தவிர்த்து தூத்துக்குடியை மெருகூட்டும் வகையில் மாதா கோவிலின் பக்கமுள்ள மாநகராட்சியின் புல் தோட்டத்தை மாற்றி, அதை மாடர்ன் கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் க்ரீன் பார்க்காக மாற்றுவதற்காக ஒரு கோடியே 16 லட்சத்து முப்பத்தேழாயிரம் நிதியும், பீச் ரோட்டில் பெரிய கழிவுநீர் தேக்கத் தொட்டியும் அமைத்து நகரின் பாதாளச்சாக்கடை மூலம் கொண்டு வரப்படுகிற கழிவுநீரைச் சேமித்து அதனைச் சுத்திகரித்து கழிவுநீரை கடலுக்குள் அனுப்பிவிட்டு, தேங்குகிற திடக் கழிவுகளை மாற்றுக் காரணிகளுக்காகப் பயன்படுகிற வகையில், திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காக ஒரு கோடியே 63 லட்ச ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியிலிருந்து செலவிடப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஒப்பந்தத்தின் பின்னால் நடந்த பல ட்விஸ்ட்களை விவரிக்கிறார்கள், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட ஒப்பந்தக்காரர்கள் சிலர்.
""வெளிப்படையான பொது டெண்டர் மூலம் பணிகள் நடத்தப்பட வேண்டும் என்ற தலைவிதியை மாற்றிய மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவும், அ.தி.மு.க மா.செ. சி.த.செல்லப்பாண்டியனும் பணிகள், நிதி ஒதுக்கீடு பற்றி பகிரங்கப்படுத்தாமல் தங்களுக்கு வேண்டப்பட்ட காண்ட்ராக்டர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியிலிருக்கிறார்கள்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கான கமிஷன்களும் பேசி முடிக்கப்பட்டுவிட்டன.
அதேசமயம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரியும் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தராஜும் டி.டி.வி. அணி சார்ந்தவர்கள். தற்போது எம்.எல்.ஏ. தகுதிநீக்கப் பட்டியலில் இருப்பதால் அவர்களுக்குப் போக வேண்டிய கமிஷன் திசை திருப்பப்பட்டு, அமைச்சருக்கும் மா.செ.வுக்கும் என முடிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து இந்த டெண்டர் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விஷயங்கள் மாவட்டத்தின் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களான திருச்செந்தூர் அனிதாராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கீதாஜீவன் இருவரின் காதுவரை போய்விட்டால் விவகாரமாகிவிடலாம் என்பதற்காக அவர்களுக்கும் ஓர் அளவுகோல் வைத்து வளைக்கிற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால்தான் அண்மையில் தூத்துக்குடி தொகுதியில் நடந்த அரசு மற்றும் அமைச்சர் கடம்பூர்ராஜு கலந்து கொள்கிற விழாக்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கும் அழைப்பு போகிறது. அமைச்சர் பங்கேற்கிற மேடையில் கீதாஜீவன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்படி ஏற்பாடுகள் அனைத்தும் கன கச்சிதமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் காண்ட்ராக்ட் புண்ணியவான் ஒருவரின் பினாமி, அந்தப் பணிகளில் ஒன்றிற்கான டெண்டரைப் போட்டு விட, மொத்த வேலைகளுக்கானதையும் ஓப்பன் டெண்டர் விடுகிற சிக்கலான நிலைமை ஏற்பட்டு திட்டமே ப்ளாக் ஆகியிருக்கிறது. இந்தச் சிக்கலையறிந்த மா.செ. சி.த.செல்லப்பாண்டியன், அதைத் தீர்ப்பதற்காக சென்னைக்குப் பறந்து அமைச்சர் கடம்பூர்ராஜுவுடன் ஆலோசித்து விட்டுத் திரும்பியிருக்கிறார்.
அதன்படி, தடைக்கல்லாய் நிற்கும் அந்தக் காண்ட்ராக்டரை, எப்பாடுபட்டாவது சமாதானப்படுத்தி போட்ட டெண்டரை வாபஸ் வாங்கும்படி, மா.செ. தரப்பு பேச, அவரோ டெண்டர் வேண்டும். இல்லை, அதற்குப் பதிலாகப் பெரிய தொகை ஒன்றிற்கான டிமாண்ட்டையும் வைத்திருக்கிறார். பேரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன என்பதே இறுதிக் கட்ட நிலவரம்'' என்ற உண்மையைப் போட்டுடைத்தார்கள் காண்ட்ராக்டர்கள் சைடிலிருந்து.
தொடர்ந்து இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சி.த.செல்லப்பாண்டியனிடம் பேசியதில்...
""மத்திய அரசின் அந்தத் திட்டம், நேரிடையாக வருவதில்லை. அரசிடமிருந்து மாவட்டக் கலெக்டர் மூலமாக வரக்கூடியது. அதுபற்றி எனக்குத் தெரியாது. டெண்டர் போட்ட புள்ளியும் தெரியவில்லை, திட்டம் தொடர்பாகவும், அதற்கான கமிஷன் பற்றியும் நான் யாரிடமும் பேசவில்லை. இந்தப் பணிகள் எங்களைக் கேட்காமலேயே நடக்கிற வேலைகள். நான் சாதாரணக் கட்சிக்காரன் சார்'' என்று மறுத்தார் படபடப்பாக.
அமைச்சர், எம்.எல்.ஏ., மா.செ., முத்தரப்புக் கமிஷன் கொள்ளையால் ஒரு முன்னேற்றத் திட்டம் முடங்கிக் கிடக்க, சவலைப்பிள்ளையாய் ஏங்கித்தவிக்கிறது தூத்துக்குடி.