"தனித்தொகுதியை பொதுத்தொகுதியாக்கு' என குறிப்பிட்ட சாதி சங்கம் வெளிப்படையாக போராட்டம் நடத்த... "எங்கள் உரிமைகளை பறிக்காதே!' என ஒடுக்கப்பட்ட சமூக அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. இருதரப்புப் பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கோபம் தி.மு.க. மீது கடுமையாகத் திரும்பியுள்ளது.

dmk

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தனித்தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழ்நாடு அகமுடைமுதலியார் சங்கம் தங்களது மாவட்ட சங்க கூட்டத்தில் முன்வைத்ததுடன், குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதுபற்றி செங்குந்த மகாஜன சங்கத்தின் வேலூர் மேற்கு மாவட்ட தலைவரான தட்சணாமூர்த்தியிடம் கேட்டபோது, ""10 ஆண்டுகளுக்குமுன் தொகுதி மறுவரையறை செய்தபோது பேரணாம்பட்டு தனித்தொகுதி கலைக்கப்பட்டது. அதன்பகுதிகள் குடியாத்தத்தோடு இணைக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர்தான் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட இருந்தது. ஆனால், சில அரசியல் கட்சிகள் அதனை தடுத்து ஆம்பூரை பொதுத்தொகுதியாக்கி, குடியாத்தம் தொகுதியை தனித்தொகுதியாக அறிவிக்க வைத்துவிட்டன. அருகிலேயே உள்ள கே.வி.குப்பம் தொகுதியும் தனித்தொகுதி. இதனால் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு இதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான... நான் சார்ந்த சாதி மட்டுமல்லாமல் பிறசாதி மக்கள் அரசியல் ரீதியாக பதவிக்கு வரமுடியாமல் தடுக்கப்படுகிறார்கள். அதனால்தான் குடியாத்தம் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றுங்கள் என போராட்டம் நடத்தி, தேர்தல் ஆணையத்திலும் மனு தந்துள்ளோம். இது எல்லா சாதிக்கும் சேர்த்துதான். இதில் கட்சி விவகாரமோ, தனிப்பட்ட சாதி ஆசையோ கிடையாது'' என்றார்.

Advertisment

dmk

ரிசர்வ் தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகளுள் ஒருவரும், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்தவருமான செல்லப்பாண்டியன் தலைமையில் தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டம், போராட்டம் என அடுத்தடுத்து நடத்திவருகின்றன. ""குடியாத்தம் மட்டுமல்ல எல்லா ரிசர்வ் தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நிற்கிறார்கள், வெல்கிறார்கள். ஆனால் செயல்படுவது என்னவோ ஆதிக்கசாதியினர்தான். கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வின் பணிகளை பார்த்துக்கொள்வதே அ.தி.மு.க.வில் உள்ள ஆதிக்க சாதியினர்தான். அப்படியிருந்தும் இது ரிசர்வ் தொகுதியாகவே இருக்க வேண்டும் என போராடுவது எங்களின் விடுதலைக்கான குறியீட்டுக்காகத்தான். உண்மையில் அதிகாரம் வேண்டுமானால் அங்கு இடஒதுக்கீடு வேண்டும் என போராட வேண்டும். திராவிட இயக்கமே அதற்காகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கு நேர்எதிராகச் செயல்படுகிறது'' என்றார்.

dmkஇந்த விவகாரத்தில் தலித் அமைப்புகளின் கோபம் தி.மு.க. மீது திரும்பியுள்ளது. அதற்கு காரணம் பொதுத்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பியுள்ள அமைப்பின் மாவட்ட தலைவராக உள்ள தட்சணாமூர்த்தி, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணியின் துணை அமைப்பாளராகவும் உள்ளார். இது தி.மு.க.வில் உள்ள ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை அதிருப்தியடைய வைத்துள்ளதோடு, பிற தலித் அமைப்பினரையும் கொதிக்கவைத்துள்ளது. இந்த விவகாரத்துக்குப் பின்னால் மாவட்ட தி.மு.க.வில் உள்ள பெரும்புள்ளிகள் உள்ளார்களோ என்கிற சந்தேகமும் கிளம்புகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரிசர்வ் தொகுதிகளான கே.வி.குப்பம், அரக்கோணம் ஆகியவற்றின் தி.மு.க. வேட்பாளர்கள் தலித்தாக இருந்தாலும், அவர்களது வாழ்க்கைத் துணை வேறு சாதியாக இருந்தார்கள். "திட்டமிட்டு இது நடந்ததா? இதை நடத்தியவர்கள்தான் பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைக்குப் பின்னால் உள்ளார்களா?' என இப்போது சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது'' என்றார்கள்.

Advertisment

பொதுத் தொகுதியாக்கக் கோரும் சாதி சங்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களும் இருந்தாலும், தி.மு.க.தான் எதிர்ப்பை சம்பாதிக்கிறது.

-து.ராஜா