.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாப்பு வளையமாக குறிப்பிடப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் வளத்தை சிதைத்து, தென் தமிழகத்தையே பாலைவனமாக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் செயல்பட, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இடைக்காலத் தடை வாங்கியிருந்தார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. அந்தத் தடை அமலில் இருக்கும் போதே நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லாச் சான்று வழங்கி, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

vaiko

இதை எதிர்த்தும் நியூட்ரினோ திட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடைபயணத்தை ஏற்பாடு செய்தது ம.தி.மு.க. இந்த நடைபயணத்தைத் துவக்கி வைக்க, கடந்த 31-ஆம் தேதி மதுரை வந்தார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். துவக்க விழா மேடையில் திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா, கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கூடங்குளம் சுப.உதயகுமார் ஆகியோர் அமர்ந்திருக்க, ஸ்டாலின் வந்ததும் கட்டிப்பிடித்து வரவேற்றார் வைகோ.

Advertisment

முதலில் பேச்சை ஆரம்பித்த வைகோ, ""நாசகார மோடி அரசு தமிழகத்திற்கு கேடுவிளைவிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்து என் மக்களை சாம்பலாக்கப் பார்க்கிறது. இந்த நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சக்தி வாய்ந்த வெடி மருந்துகளைப் பயன்படுத்தி ஆறு லட்சம் பாறைகளைத் தகர்ப்பார்கள். இந்தத் திட்டம் வந்தால் தமிழகம் மட்டுமல்ல கேரளாவும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனிடம் விளக்கினேன். இந்த விழிப்புணர்வு நடைபயணத்திற்கு அவரும் வருவதாகச் சொல்லியிருந்தார், எனக்கு வயதாகிவிட்டது. எனவே எனது தலைவரின் தனயன் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருக்க முடிவு செய்துவிட்டேன். வடநாட்டு தீயசக்திகள் நம் தமிழகத்திற்குள் வர பல சூழ்ச்சிகளைப் பின்னத் தொடங்கிவிட்டன. இதை முறியடிக்க நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்'' என உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார் வைகோ.

அடுத்து பேசிய ஸ்டாலின், ""மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், இப்போது நியூட்ரினோ என மோடி அரசு தமிழகத்தை சோதனைக்களமாக்கி வருகிறது. அண்ணன் வைகோவுக்கு துணை நிற்போம்'' என்றார் உறுதியுடன்.

Advertisment

தலைவர்கள் அனைவரும் பேசி முடித்த பின், இப்போது தமிழகத்தின் புதிய கொடி அசைத்து நடைபயணம் துவக்கி வைக்கப்படுகிறது என்றவாறு மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மீன், வில், அம்பு, புலி(தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களின் இலச்சினை) பொறிக்கப்பட்ட தமிழ்க் கொடியை வைகோவும் ஸ்டாலினும் சேர்ந்து அசைத்து விழிப்புணர்வுப் பயணத்தைத் துவக்கி வைத்தனர்.

நடைபயணம் புறப்படத் தயாரான போது, சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் ரவி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சியில் இறங்கி, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வைகோவை கலங்க வைத்துவிட்டது. தொண்டனைப் பற்ற வைத்த தீயின் காயம் தணிந்து, மத்திய அரசின் ஆணவப் போக்கின் மீது கிளர்ச்சித் தீ பரவ, எழுச்சியுடன் நடை போட்டார் வைகோ.