அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டே தமிழக உரிமைகளை காவுகொடுக்கிறார்கள் என்று எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. மறுபக்கம், "ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தமிழகத்தின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும்' என்ற குரலும் ஒலிக்கிறது.
"ஜெயலலிதா காப்பாற்றிய உரிமைகளை எடப்பாடி அரசு அடகு வைத்துவிட்டது' என்று சொல்கிறார்களே, அப்படி அடகுவைத்த உரிமைகள் எவை?
ஜி.எஸ்.டி. - உதய் மின்திட்டம்!
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மாநில வரிவருவாய் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஜெயலலிதா எதிர்த்தார். ஜெயலலிதா இறந்தபிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி அரசு, 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி ஜி.எஸ்.டி. மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. "ஜெயலலிதா எதிர்த்த வரிவிதிப்பை ஆதரிக்கிறீர்களே' என்று கேட்டபோது, ஜெயலலிதா வலியுறுத்திய திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறி சமாளித்தார்கள்.
"உதய் மின்திட்டம்' என்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, "அந்தத் திட்டத்தால் தமிழகத்துக்கு ஒரு நன்மையும் இல்லை' என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். அந்த திட்டத்தின்படி, ‘2015 செப்டம்பர் வரை மாநில மின்வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கவேண்டும், மின்கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழக அரசு அமல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இதை ஜெயலலிதா ஏற்கவில்லை. ஆனால், ஜெ. இறந்த ஒரே மாதத்தில் 2017 ஜனவரி 9 ஆம் தேதி மின்துறை அமைச்சர் தங்கமணி இந்தத் திட்டத்தையும் ஏற்று கையெழுத்திட்டார். அதன்விளைவாக தமிழக மின்துறை பல ஆயிரம்கோடி கடன்சுமையால் தவிக்கிறது. உதய் மின்திட்டத்தை செயல்படுத்துவதால், தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்பதை பட்ஜெட் தாக்கலின்போது துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேரவையிலேயே குறிப்பிட்டார்.
ரேஷன் கடைகளுக்கு வேட்டு!
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்தச் சட்டத்தை ஏற்க மறுத்து மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார். இந்தச் சட்டத்தை ஏற்றால் தமிழக அரசின் பொதுவினியோகத் திட்டத்தில், விலையில்லா 20 கிலோ அரிசி உள்பட பல திட்டங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறினார். மோடி ஆட்சியிலும் இதை எதிர்த்தே வந்தார். ஆனால், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2016 அக்டோபர் மாதம் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை மாநில அரசு அமல்படுத்தும் என்று அப்போதைய தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ் அறிவித்தார்.
இதையடுத்து "வருமான வரி, தொழில் வரி செலுத்தும் ஒருவரை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள் தொடங்கி, நான்கு சக்கர வாகனம், குளிர் சாதனம், மூன்று அல்லது நான்கு அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகளைக் கொண்டவர்கள் என்று பலதரப்பினருக்கு இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காது' என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து, ரேஷன் மண்ணெண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, சர்க்கரை அளவை மத்திய அரசு கடுமையாக குறைத்துள்ளது. "உளுத்தம்பருப்பு இனி வழங்கப்படமாட்டாது' என அமைச்சரே அறிவித்துவிட்டார். மற்றவை, அறிவிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் ரேஷன் கடை முன் காத்து நிற்கும் மக்கள்.
நீட் கொடூரம்!
தமிழக மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட +2 மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு முறையை விட்டுக்கொடுத்து, நீட் தேர்வுக்கு அனுமதி என்ற பேரில் உரிமையைக் காவு கொடுத்தது எடப்பாடி அரசு. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்தது. நீட் தேர்வுக்கு கலைஞர், ஜெ. என தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அதற்கான சட்ட பாதுகாப்புக்கும் முயற்சி செய்தனர். ஜெ. இறந்த நிலையில், முதல்வரான ஓ.பி.எஸ். ஆட்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டிய மத்திய அரசு, அந்த ஃபைல் எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை என்று கைவிரித்துவிட்டது. மத்திய அரசின் வஞ்சகமும், எடப்பாடி அரசின் குட்டக்குட்டக் குனியும் போக்கும் நீட் எனும் கொடூரக் கரத்திற்கு அனிதா என்ற மாணவியின் உயிரைப் பலியாக்கிவிட்டது.
ஆளுநர் முதல் ஆர்.எஸ்.எஸ்.வரை!
ஜெயா மறைவுக்குப் பிறகு, சென்னையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து மதச்சார்பின்மைக்கு முதல்வெடியை வைத்த எடப்பாடி அரசு, அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ராமர் ரத யாத்திரைக்கும் அனுமதி கொடுத்து பா.ஜ.க.வின் மறைமுக திட்டங்களுக்கு துணை நிற்கிறது.
"பா.ஜ.க.வுடன் உறவு இல்லை' என்று எடப்பாடி சொல்கிறார். ஆனால், மாவட்டவாரியாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மேற்கொள்ளும் ஆய்வுகளைக் கண்டிக்கக்கூட துணிச்சல் இல்லாதவராக இருக்கிறார்.
ஜெ. இருந்தபோதே...…
ஜெயலலிதா இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இத்தகைய துணிச்சல் இருந்திருக்காது என்கிறார்கள் பலரும். ஆனால், ஜெயா உயிரோடு இருந்த சமயத்தில்தான், நத்தம் விசுவநாதன் வீட்டிலும், கரூர் அன்புநாதன் வீட்டிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாயுடன் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஜெ.வின் நம்பிக்கைக்குரிய கவர்னராக இருந்த ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்புத்தர விரும்பாத மத்திய பா.ஜ.க. அரசு, அவருக்குப் பதில் தமிழகத்தின் இடைக்கால கவர்னராக, மகாராஷ்ட்ர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியது. தமிழ்நாடு என்ற பெரிய மாநிலத்திற்கு, தனி கவர்னரை நியமிக்காமல், கூடுதல் பொறுப்பு கொண்ட கவர்னரை நியமித்து, அவரை ஜெ., வரவேற்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளியது பா.ஜ.க. அரசு. கடைசிக்கட்டங்களில், சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட சட்டப் பிரச்சினைகளிலும் ஜெ.வை சீண்டியது மத்திய அரசு.
எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காணாமல், திசைதிருப்பும் போக்கை கடைப்பிடிப்பது ஜெயலலிதாவின் அரசியல் பாலிசி. அந்த வழியில்தான், தமிழக நலன் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் எடப்பாடி அரசும் செல்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மரியாதை இழந்த முதல்வர்!
எடப்பாடி அரசின் இந்த ஓர் ஆண்டுகால நடவடிக்கை பற்றி தன்னாட்சித் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனிடம் கேட்டோம். ""மாநில அரசுக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையைக்கூட எடப்பாடி அரசு இழந்துவிட்டது. இதுவரை தமிழக வரலாற்றில் இவ்வளவு மோசமான, முதுகெலும்பு இல்லாத முதல்வரை பார்த்தது இல்லை. முதல்வர் பதவிக்கு இருக்கக்கூடிய அதிகாரம்கூட தெரியாதவராக இருக்கிறார். எந்தவிதமான அதிகாரமும் இல்லாத மத்திய அரசின் விருப்பப்படி செயல்படக்கூடிய நிர்வாகம் மட்டுமே என்பதை நிரூபிக்க, எடப்பாடி அரசு விரும்புகிறது''’என்கிறார்.
தி.மு.க. செய்தித்தொடர்புச் செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். “""அரசு இங்கு செயல்படவில்லை. தகுதியானவர்களை தகுதியான இடத்தில் அமரவைக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் "காவிரி மேலாண்மை வாரியம்' என்று இல்லை. "ஸ்கீம்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் என்கிறது மத்திய அரசு. இதைக் குறிப்பிட்டு, தீர்ப்பு தெளிவில்லாமல் இருப்பதாக மாநில அரசு கூறியிருக்க வேண்டும். தீர்ப்பு வந்த மறுதினமே உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசென்றி ருக்கலாம். ஓமந்தூரார் தொடங்கி கலைஞர்வரை எப்பேர்ப்பட்டவர்கள் அமர்ந்த நாற்காலியில் எடப்பாடியும் அமர்ந்திருக்கிறார்''’என்றார்.
அரசு விழாக்களில் மேடைக்கு மேடை "இது அம்மாவின் அரசு' என்று முதல்வர் தொடங்கி அமைச்சர்கள்வரை வெறும் வாயால் மட்டுமே சொல்லி வருகிறார்கள். ஆனால், ஜெ. காலில் விழுந்தது போலவே மத்திய அரசின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜெ. எதிர்த்த அனைத்துக்கும் அனுமதி அளித்து வருகிறது எடப்பாடி அரசு. இனியும் எதையெல்லாம் இழக்கப் போகிறதோ என்கிற பதைபதைப்புடன் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.