ஆளுநருக்கும் முதல்வருக்கும் புதுச்சேரியில் நடக்கும் அதிகாரப் போட்டிக்கிடையே, "கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட பா.ஜ.க.வின் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி செல்லும்' என கடந்த 22-ஆம் தேதி உயர்நீதிமன்றம் அறிவித்தது. உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால், நியமன எம்.எல்.ஏ.க்களான சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மூவரையும் சபாநாயகர் சபைக்குள் அனுமதித்தே ஆகவேண்டும்’ என பா.ஜ.கவினர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், சபாநாயகர் வைத்திலிங்கமோ, "தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகுதான் முடிவெடுக்க முடியும்' என்று குறிப்பிட்டு சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் மூலம் கடிதம் அனுப்பிவிட்டார். கடிதங்களை வாங்க மறுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் தடையை மீறி சட்டசபைக்கு வந்தபோது காவலர்கள் தடுத்தனர். நுழைவாயில் முன்பாக போராட்டம் நடத்தினர் பா.ஜ.க.வினர். நியமன எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சங்கர் வெயிலின் தாகக்த்தால் மயக்கமடைய... பதற்றம் பற்றிக்கொண்டது.
இந்த களேபரங்களால் மூன்று நாட்கள் நடக்க வேண்டிய சட்டசபை கூட்டத்தொடர் மூன்று மணி நேரத்தில் முடிந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் காலவரையின்றி கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
தனது உரையை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஆளுநர், ""நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கி உள்ளது. பேரவைக்குள் பா.ஜ.க.வைச் சேர்ந்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்காதது குறித்து அரசு நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்''’என்றார். அதன்படியே இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு புகாரும் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவரும், நியமன எம்.எல்.ஏ.க்களுள் ஒருவருமான சுவாமிநாதனிடம் கேட்டோம், ""அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காதது, அரசியல் சட்டத்தை அவமதிப்பது போன்றது. நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பில்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் செல்லுபடியாகாது. 19-ஆம் தேதியே வாதிட்டோம். நீதிமன்ற உத்தரவையும் உதாசீனப்படுத்தியுள்ளனர். அதனால் 27-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தொடர்ந்துள்ளோம். இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்''’’ என்றார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. லஷ்மி நாராயணனோ... இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி மத்திய அரசுக்கு எதிராக அணி திரட்டுவதால், நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதுபோல, நாயுடுவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும், கிரண்பேடி ஆளுநராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைய உள்ளதாலும் ஆந்திராவுக்கு ஆளுநராக செல்வார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் புதுச்சேரியை விட்டு அவ்வளவு சீக்கிரம் கிரண்பேடி கிளம்பமாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாராயணசாமிக்கு தலைவலிதான்!