காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, 24.03.18 சனியன்று, திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்திருந்தது.

""நூறு பேர் போராட வருவாங்க. வந்தவுடன் கைது பண்ணி, மண்டபத்தில வச்சிருந்து விட்டுடுங்க'' என்று கூறிவிட்டு விடுமுறையில் சென்று விட்டார் மஞ்சுவிரட்டு புகழ் டி.சி.மயில்வாகனன்.

makkal-adikaram

காலை 8 மணியில் இருந்து அஞ்சலகம் முன்பு 20 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், குழந்தைகள், மாணவர்கள், பெரியோரென குடும்பம் குடும்பமாக "மக்கள் அதிகாரம்' போராட்டக்காரர்கள் திரள ஆரம்பித்தனர். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, கரூர் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் குடும்பம் குடும்பமாக போராட்டத்திற்கு வந்து கொண்டிருப்பதாக உளவுத்துறை தகவல்களும் வந்துகொண்டிருந்தன.

Advertisment

இதற்குள் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, மா.செ. சரவணன், மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். மக்கள் பாடகர் கோவன்-லதா குழுவினரின் ""இங்கே கறுப்பு கலருக்கு இடமிருக்கு, சிவப்பு கலருக்கு இடமிருக்கு, காவிக்கலருக்கு இடம் இல்லை'' போன்ற பாடல்களால் கூட்டத்திற்கு உணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தார்கள்.

இதை எதிர்பாராத காவல்துறை, திருச்சி மாநகர ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் என அனைவரையும் வரவழைத்தது.

நண்பகல் 1.:30-க்கு பேரணி எழுச்சியான முழக்கங்களுடன் புறப்பட்டது.

Advertisment

போலீஸ் எச்சரித்ததால், கூட்டமோ அப்படியே சாலையில் அமர்ந்து விட்டது.

""இது மக்களின் தன்னெழுச்சிக் கூட்டம். நாங்கள் கைதாக மாட்டோம். வேண்டுமானால் காவிரி உரிமைக்காக உயிர் கொடுப்போம்'' ஆவேசமாகப் பேசினார் மக்கள் அதிகாரம் ராஜு.

நான்கு மணி நேரத்திற்கு மேலாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் முடக்கப்பட்ட நிலையில், கடுப்பான சட்டம்-ஒழுங்கு ஆணையர் சக்திகணேஷ், அமர்ந்திருந்த போராட்டக்காரர்களை தூக்க முயன்றபோது, கலவரச் சூழல் உருவானது. திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் போராட்டக்காரர்களோடு பேசினார். அதன்பிறகும், வலுக்கட்டாயமாகவே கைது செய்ய வேண்டியிருந்தது.

ஒருவழியாக சுமார் 1200 பேரை 24 பேருந்துகளில் ஏற்றிச் சென்று, ஆறு மண்டபங்களில் வைத்து, பெயர், ஊர், மச்சம், முகவரி என திரட்ட முயன்றது போலீஸ். ""நாங்கள் எதையும் கூற மாட்டோம், மிரட்டினால் இங்கேயும் போராடுவோம்'' என்றார்கள். போராட்டக்காரர்களை ஏழரை மணிக்கு திறந்து விட்டது போலீஸ்.

-ஜெ.டி.ஆர்.