வெளிப்படையாக செயல்பட சென்னையை விட புதுச்சேரியே சிறந்த இடம் என்பதை பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் அறிந்தே இருக்கிறது.
பாண்டிச்சேரியில் பிரதமர் மோடியை மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணன் சந்தித்திருக்கிறார். ஒரு தனியார் டி.வி. நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்படுவதை பற்றி பேசி சர்ச்சைக்குள்ளானவர்தான் இந்த சரவணன். சசிகலா கூவத்தூரில் நடத்திய கேம்ப்பிலிருந்து ஓ.பி.எஸ். அணிக்கு ஓடி வந்தவர். நேரில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காத நிலையில், ஓ.பி.எஸ். சரவணன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
"இ.பி.எஸ். அணியுடன் மோடி சொல்லித்தான் இணைந்தேன்' என்ற ஓ.பி.எஸ்.சின் ஓப்பன் பேச்சு குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் மிகவும் வருத்தப்பட்டுள்ளார் மோடி.
ஓ.பி.எஸ்.சுடன் வந்து நான்குமுறை டெல்லியில் சந்தித்த மைத்ரேயனை, தற்போதைய சென்னை விசிட்டில் -விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வருபவர்கள் பட்டியலில் சேர்த்தார் மோடி. மைத்ரேயனுடன் பேசினார். சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு மோடி போகும் போது, "நீங்கள் அடிக்கடி சென்னை வர வேண்டும்' என்கிற மைத்ரேயனின் கோரிக்கைக்கு மோடி செவிசாய்த்தார்.
கலைவாணர் அரங்கில் மானிய ஸ்கூட்டி விழாவை முடித்துவிட்டு மோடி போகும்போது அவருடன் கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார் அமைச்சர் தங்கமணி.
அமைச்சர் தங்கமணிதான் தமிழக அரசின் புரோட்டகால் எனப்படும் வரவேற்புக்கு பொறுப்பான அமைச்சர். மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களான அதானி குழுமத்தினருக்கு தங்கமணி நண்பர். கவர்னர் மாளிகையில் பிரதமரை சந்தித்துப் பேச தாமதமான நிலையில், தங்கமணிக்காக அவரது நண்பர்கள் மோடியிடம் பேசினார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. கட்சி-ஆட்சி பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தினார் மோடி. பின்னர் தங்கமணியிடம் பிரதமர் நேரில் விளக்கமாகப் பேசியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு அட்வைசராக இருந்த ஹீரா என்கிற சௌராஷ்டிரா இனத்தைச் சேர்ந்தவர் மூலம் மோடியிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருந்த எம்.எல்.ஏ. சரவணனை ஓ.பி.எஸ். தொடர்பு கொண்டார். அவரை பாண்டியில் மோடியை சந்தித்து எடப்பாடி அணி எப்படியெல்லாம் ஓ.பி.எஸ்.சை பழிவாங்குகிறது என சொல்ல வைத்தார். பிரதமரிடம் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லையாம்.
பிரதமரை சென்னை கவர்னர் மாளிகையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழிசை, இல.கணேசன், எச்.ராஜா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் தமிழக அரசியல் சூழலைப் பற்றி விவாதித்துள்ளார் நரேந்திர மோடி.
""எடப்பாடி தரப்பிலிருந்து பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கவர்னரை உத்தரவிட சொல்கிறார்கள். தற்பொழுது இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் எடப்பாடி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் வந்தால் நிலைமை மாறிவிடும். அந்த தீர்ப்புகளுக்கு பிறகுதான் தமிழக அரசியல் சூழலில் நாம் என்ன செய்ய முடியும் என முடிவெடுக்க முடியும். தற்போதைய சூழலில் சட்டப்படி மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது'' என எஸ்.ஆர்.பொம்மை வழக்கை சுட்டிக் காட்டினாராம் பிரதமர்.
""பிரதமரிடம் நாங்கள் தமிழக அரசியல் சூழல் பற்றி விவாதித்தோம். பிரதமர் அ.தி.மு.க. பற்றியோ அதன் உட்கட்சி விவகாரங்களை பற்றியோ எதுவுமே பேசவில்லை'' என்கிறார் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா நம்மிடம். தமிழகத்தில் மோடியின் விசிட்டும், அ.தி.மு.க. பஞ்சாயத்தும் தோல்வி அடைந்தாலும் புதுச்சேரியில் மோடி விசிட் உற்சாகம் தந்துள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்
ஆபாசப் புகாரில் கவர்னர்!
தென் இந்தியாவை சேர்ந்த கவர்னர் ஒருவர் மீது கவர்னர் மாளிகை ஊழியர்களே ஜனாதிபதிக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.
கவர்னர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். புகார் உண்மை எனத் தெரிந்து, ஜனாதிபதி விரும்பினால் கவர்னரை மாற்ற முடியும் என்கிறார்கள் அரசியல் சாசன வல்லுநர்கள். கவர்னரின் ஆபாசமான செய்கைகள் பற்றி கவர்னர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு புகார் செய்திருக்கிறார்கள். அதை அவர் மத்திய உள்துறைக்கு அனுப்பியிருக்கிறார். மத்திய உள்துறை அதன் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்பான இந்திய புலனாய்வுத் துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் விசாரிக்கிறது என்கிறது டெல்லி தரப்பு.
மேகாலயாவில் கவர்னராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் மீது ஆபாச புகார்களை கவர்னர் மாளிகை ஊழியர்கள் எழுப்பினார்கள். அவரை கவர்னர் பதவியிலிருந்து அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நீக்கினார் என்பதையும் நினைவூட்டுகிறது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளாவில் தமிழரான முன்னாள் நீதியரசர் சதாசிவம், ஆந்திராவில் தமிழரான முன்னாள் இந்திய உளவுத்துறை தலைவரான நரசிம்மன், தமிழகத்தில் பன்வாரிலால் புரோஹித், கர்நாடகாவில் வஜீபாய்வாலா ஆகியோர் கவர்னராக உள்ளனர். புதுச்சேரி லெப்டினண்ட் கவர்னர் கிரண்பேடி. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்வையும் டெல்லி வட்டாரம் நினைவூட்டுகிறது.
இந்நிலையில் புகாருக்குள்ளான கவர்னர் ஏற்கனவே அவர் பதவி வகித்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு கவர்னராக பொறுப்பு வகித்தவர் என்கிற தகவல் டெல்லி வட்டாரங்களில் உலவுகிறது. அத்துடன், சர்ச்சைக்குள்ளாகியிருப்பவரும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர் என டெல்லி வட்டாரங்கள் சொல்வதால், இதர மாநில கவனர்கள் பக்கமும் லேசாக கவனம் திரும்புகிறது.
ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
பா.ஜ.க. தலைமை எப்படி இதில் செயல்படப் போகிறது என்ற பரபரப்பும் டெல்லியில் உள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்