"மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். சத்தமில்லாமல் நடக்கும் அந்த யுத்தத்தில் எடப்பாடியை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அ.தி.மு.க.வை பிளவுபடுத்திய ஓ.பி.எஸ்., மீண்டும் இணைந்தபோது ஆட்சியிலும் கட்சியிலும் சில உத்தரவாதங்கள் தரப்பட்டிருந்தன. அதில் சிலது மட்டும் ஓபிஎஸ்.ஸுக்கு கிடைத்தது. அவரது ஆதரவாளர்களுக்கு அது கூட கிடைக்கவில்லை. இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. ஆனாலும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளாத அவர், எடப்பாடியிடமிருந்து சில அதிகாரங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினார். அதற்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை எடப்பாடி. இவர்கள் இருவரின் எஜமானரான மோடியோ, எடப்பாடிக்கே ஜே போட... அமைதியானார் ஓ.பி.எஸ்.
இப்படிப்பட்ட சூழலில், "தற்போது கட்சியின் அதிகாரத்தை பரவலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதனால், மீண்டும் உள்கட்சி விவகாரம் வெடித்துள்ளது' என்கிறார்கள். இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் நாம் பேசியபோ
"மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். சத்தமில்லாமல் நடக்கும் அந்த யுத்தத்தில் எடப்பாடியை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
அ.தி.மு.க.வை பிளவுபடுத்திய ஓ.பி.எஸ்., மீண்டும் இணைந்தபோது ஆட்சியிலும் கட்சியிலும் சில உத்தரவாதங்கள் தரப்பட்டிருந்தன. அதில் சிலது மட்டும் ஓபிஎஸ்.ஸுக்கு கிடைத்தது. அவரது ஆதரவாளர்களுக்கு அது கூட கிடைக்கவில்லை. இதனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. ஆனாலும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளாத அவர், எடப்பாடியிடமிருந்து சில அதிகாரங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினார். அதற்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை எடப்பாடி. இவர்கள் இருவரின் எஜமானரான மோடியோ, எடப்பாடிக்கே ஜே போட... அமைதியானார் ஓ.பி.எஸ்.
இப்படிப்பட்ட சூழலில், "தற்போது கட்சியின் அதிகாரத்தை பரவலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதனால், மீண்டும் உள்கட்சி விவகாரம் வெடித்துள்ளது' என்கிறார்கள். இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் நாம் பேசியபோது, ""எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து, ஜனவரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது, "மாவட்ட செயலாளர்கள் தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலுமுள்ள சுமார் 2000 நிர்வாகிகளை நீக்கியிருக்கிறோம். அந்த இடங்களில் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், சீனியர்களுக்குள் நடந்த ரகசிய ஆலோசனைகளில் எடப்பாடிக்கு 65, ஓ.பி.எஸ்.ஸுக்கு 35 என்கிற சதவீதத்தில் நிர்வாகிகளை நியமிக்கத் தீர்மானித்தனர். ஆனால், இப்போதுவரை அதற்கான நடைமுறைகளை எடப்பாடி எடுக்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்துள்ள ஓ.பி.எஸ்.ஸின் முக்கிய ஆதரவாளர்கள், அவரைச் சந்தித்து, "எங்களுக்கு பொறுப்புகள் வாங்கிக்கொடுங்கள் அல்லது கிடையாதுன்னாவது சொல்லிவிடுங்கள். நாங்கள் தினகரனிடம் சென்று எங்களுக்கான அரசியலை தேடிக்கொள்கிறோம்' என கறாராக சொல்லிவருகின்றனர். இதன்பிறகே இதில் சீரியஸ் காட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதன் முதல்கட்டமாக, ஓ.பி.எஸ்.ஸும் கே.பி.முனுசாமியும் எடப்பாடியிடம் விவாதித்துள்ளனர். அப்போது, "காலியாக உள்ள மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் பதவிகளை நியமிப்பது குறித்த ஆலோசனையில் இரு தரப்புக்கும் மீண்டும் முட்டிக்கொண்டது''’என சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் விசாரித்தபோது, ""தென்சென்னை கலைராஜன், வடசென்னை வெற்றிவேல் உட்பட தினகரன் ஆதரவாளர்களான 8 மா.செ.க்களை ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் இணைந்து சில வாரங்களுக்கு முன்பு நீக்கினார்கள். அந்த இடங்களை பகிர்ந்துகொள்வது குறித்து விவாதித்தனர். அப்போது, தென்சென்னை மா.செ.வாக தனது ஆதரவாளர் தி.நகர் சத்யாவை நியமிக்க விரும்புகிறார் எடப்பாடி. ஒரு காலத்தில் இங்கு மா.செ.வாக இருந்தவர் சத்யா. அவருக்கு இந்தப் பதவியையும் எம்.எல்.ஏ. சீட்டையும் வாங்கித்தந்தது ஓ.பி.எஸ்.தான். ஆனால், அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். விலகியபோது, அவருடன் செல்லாமல் அ.தி.மு.க.விலேயே தங்கினார். எடப்பாடியின் ஆதரவாளராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். அவரை நியமிக்க எடப்பாடி விரும்பிய நிலையில், ஓ.பி.எஸ். பிரிந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்த ஆதிராஜாராமை நியமிக்க கே.பி.முனுசாமி சொன்னபோது, அதை எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவருமே ஏற்கவில்லை. உடனே மத்திய சென்னை எம்.பி. விஜயகுமாரை பரிந்துரைத்தார் ஓ.பி.எஸ். அதனையும் ஏற்க மறுத்த எடப்பாடி, சத்யாவை நியமிப்பதிலேயே விடாப்பிடியாக இருந்தார்.
அதேபோல, வடசென்னைக்கு வெங்கடேஷ்பாபுவை எடப்பாடி முன்னிலைப்படுத்த, அதை ஏற்க மறுத்த ஓ.பி.எஸ், மதுசூதனனின் வலதுகரமான ராஜேஷை நியமிக்க வலியுறுத்தினார். ஆனால், மா.செ. நியமனத்தில் மதுசூதனனின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என ஏற்கனவே எடப்பாடியிடம் அமைச்சர் ஜெயக்குமார் கறாராக சொல்லியிருந்ததால் ராஜேஷுக்கு ரெட் சிக்னல் காட்டினார் எடப்பாடி. இதனால், இங்கும் மோதல் வெடித்தது. காஞ்சி மாவட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளரான சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும், வாலாஜா கணேசனும் மா.செ.க்களாக இருக்கிறார்கள். ஆனால், இங்கு ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்களாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆலந்தூர் வெங்கட்ராமன், ரஞ்சித்குமார், குமாரசாமி ஆகியோரில் இருவரை மா.செ.க்களாக நியமிக்க, மாவட்டத்தை உடைக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் ஓ.பி.எஸ். இதுவும் எடப்பாடியால் ஏற்கப்படவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் இதே சிக்கல்தான். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள். இதனால் நியமனங்களை கிடப்பில் போட்டுவிட்டார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கடி அதிகரிக்க... எடப்பாடியிடம் சத்தமில்லாமல் யுத்தத்தை நடத்துகிறார் பன்னீர்'' என்கிறார்கள் அழுத்தமாக.
அ.தி.மு.க.வில் கட்சியின் ஆண்டுவிழா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாக்கள் ஆகிய மூன்றும்தான் மிக முக்கியமானவை. இவை மூன்றையும் பல மாவட்டங்களுக்கு செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் இல்லாமலே நடத்தி முடித்துவிட்டார் எடப்பாடி. இனி கட்சியில் முக்கிய நிகழ்ச்சிகள் சமீப நாட்களில் எதுவும் இல்லை என்பதால் கட்சியைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே அவரது கவனம் இருக்கிறது. அதனால், நிர்வாகிகள் நியமனங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இதனால், அதிருப்தியடைந்திருக்கும் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்களோ, தனிக்கட்சி குறித்து ஆலோசனை செய்துவரும் தினகரன் பக்கம் தாவலாமா என யோசிக்கின்றனர். எடப்பாடியின் பிடிவாதத்தால் கட்சியின் கூடாரத்தில் ஓட்டை விழத் துவங்கியிருக்கிறது.
-இரா.இளையசெல்வன்