முதலில் சட்டப் பல்கலைக்கழகம், அடுத்து அண்ணா பல்கலைக்கழகம் என தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியில் தமிழரல்லாத வேற்று மாநிலத்தவர்களை நியமித்து வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தேசிய அளவில் சிறந்து விளங்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி, கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமலே இருந்து வந்தது. தகுதியானவர்களை கண்டறியும் தேடுதல் குழுக்களை மாற்றியமைத்தல், அதன் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட சிக்கல்களை கடந்து, மூன்று பேர் கொண்ட பட்டியலை கவர்னரிடம் அண்மையில் ஒப்படைத்தது ஓய்வுபெற்ற நீதிபதி சிர்புர்க்கர் தலைமையிலான தேடுதல் குழு. அதில் மூன்றாவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை, துணைவேந்தராக நியமித்திருக்கிறார் கவர்னர் புரோகித்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் பேராசிரியருமான ஜவாஹிருல்லா, ""துணைவேந்தர் பணிக்கான தகுதியும், ஆற்றலும், அனுபவமும் மிக்க கல்வியாளர்கள் 170 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், அப்பழுக்கற்ற கல்வியாளர்கள் என தமிழகத்தைச் சேர்ந்த 123 பேர் அடங்குவர். அவர்களிலிருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்திருக்க வேண்டும். அதைத்தவிர்த்து, கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவைத் தேர்ந்தெடுத்தது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம்.
இசைப் பல்கலைக்கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தியையும், தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியையும் ஏற்கனவே நியமித்துள்ள நிலையில்... தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா. தமிழக உயர்கல்வியில் உயர்பதவிகளுக்கு தமிழர்கள் யாருமே தகுதியானவர்கள் இல்லை என்பதுபோல இத்தகைய நியமனங்கள் நடக்கின்றன. தமிழகத்தின் கல்விக்கொள்கையை காவிமயமாக்கும் முயற்சியை தொடர்ந்து எடுத்து வருகிறது சங்பரிவாரங்கள். முதல்கட்டமாக, தமிழகத்தின் உயர்கல்வியை ஆக்ரமிக்கத் துவங்கியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தாது போனால் தமிழக மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாத தூரத்துக்குப் போய்விடும் ஆபத்து இருக்கிறது''’என்கிறார் ஆவேசமாக.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் சூரப்பாவை மிகப்பெரிய கல்வியாளராக அடையாளம் காட்டுகிறார் கவர்னர் பன்வாரிலால். ஆனால், துணைவேந்தர் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதைச் சுட்டிக்காட்டும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ""பஞ்சாப்பிலிருக்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநராக சூரப்பா இருந்தபோது, புதிய கட்டடங்கள் கட்ட 760 கோடி ஒதுக்கப்பட்டும் 5 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதனால் கட்டுமானச் செலவினங்கள் 1,958 கோடியாக உயர்ந்தது. இதனை கண்டறிந்த தலைமைக் கணக்கு தணிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். தனது பணிக்காலத்தில் பெரும்பாலான நாட்கள் பணிக்கு வந்ததே இல்லை. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுத்ததில்லை. மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியிருக்கிறார். பேராசிரியர்களை தரக்குறைவாக மரியாதையின்றி நடத்தியிருக்கிறார் என ஏராளமான குற்றச்சாட்டுகள் சூரப்பா மீது இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழரல்லாத ஒருவரை தமிழக பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமித்திருப்பது ஏற்கவே முடியாது. சூரப்பாவைவிட தகுதியும் திறமையும் அதிகமுள்ள தமிழக கல்வியாளர்கள் 25 பேரின் பட்டியலை கொடுக்கத் தயார். அவர்களில் ஒருவரை கர்நாடகத்திலோ அல்லது மத்திய அரசின் பல்கலைக்கழகங்களிலோ துணைவேந்தராக நியமிக்கும் திறன் ஆளுநருக்கு உண்டா? சூரப்பாவின் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் வெடிக்கும்''’என்கிறார் அழுத்தமாக.
தமிழக கல்வியாளர்களிடம் நாம் விசாரித்தபோது, ""கவர்னர் மாளிகையில் எந்த நேர்காணலும் நடக்கவில்லை. நேர்காணல் நடந்ததாக தெரிவிப்பதே ஒரு பித்தலாட்டம்தான். உதவிப் பேராசிரியராக தேர்வு செய்யப்படுபவருக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசிரியருக்கே இப்படிப்பட்ட விதிகள் எனும்போது, தமிழே தெரியாத ஒருவரை துணைவேந்தராக நியமிப்பது மிகப்பெரிய மோசடி. அடிப்படையில் சூரப்பா ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். எடியூரப்பாவின் நெருங்கிய நண்பர். மூன்றாவது தேடுதல் குழு அமைக்கப்பட்டபோதே, சூரப்பாவை விண்ணப்பிக்கச் சொன்னார் எடியூரப்பா. அதன்படி விண்ணப்பித்தார். கடந்தவாரம் கர்நாடகாவிற்கு விசிட் அடித்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமீத்ஷாவிடம், கர்நாடக தேர்தல் குறித்து விவாதித்த பிறகு, சூரப்பா நியமனம் குறித்து நினைவுபடுத்தியிருக்கிறார் எடியூரப்பா. இதனையடுத்து டெல்லி சென்ற அமீத்ஷா, மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். இந்த சூழலில்தான், தமிழக பிரச்சனைகளுக்காக கவர்னர் பன்வாரிலாலை டெல்லிக்கு வரவழைத்த மோடி, சூரப்பா நியமனம் குறித்து அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் இருந்தபடியே, 3 பேர் கொண்ட பட்டியலை தயாரிக்கும்படி தேடுதல் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார் கவர்னர். டெல்லியிலிருந்து அவர் சென்னை வருவதற்குள் பட்டியல் ராஜ்பவனுக்கு வந்துவிட்டது. கவர்னர் வந்ததும் நியமன உத்தரவு தயாரானது''’என பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
துணைவேந்தர் நியமிப்பது குறித்து தமிழக அரசுக்கும் அதன் உயர் கல்வித்துறைக்கும் தெரிவிக்கப்படவில்லை. ப்ரஸ் ரிலீஸ் செய்வதுபோல கடைசி நேரத்தில் அரசுக்கு தெரிவித்திருக்கிறது கவர்னர் மாளிகை!