டம்பரக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டாத கம்யூனிஸ்ட்கள் திருவிழாவாக கொண்டாடுவது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கட்சியின் மாநில மாநாடுகளைத்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு முதன்முதலாக தூத்துக்குடியில் பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

""வானிலிருந்து பார்த்தால் இது மழைத்துளி; பூமியிலிருந்து பார்த்தால் அது தியாகத்துளி. அதுதான் நம் செங்கொடி'' என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைவரும் கவிஞருமான பாலபாரதி மாநாட்டு துவக்க நிகழ்ச்சியை கவிதைகளால் அலங்கரித்து தொகுத்து வழங்க, விண்ணதிர்ந்த எழுச்சி முழக்கங்களுக்கிடையே கட்சியின் மூத்த தலைவரான வே.மீனாட்சிசுந்தரம் கொடியேற்றி வைத்ததோடு, மாநாடு நிகழ்ச்சிகள் தொடங்கின.

cpm-meet

மாநாட்டை வாழ்த்தி, கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன் பேசினார். ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரும் புதிருமாக இருந்த சி.பி.ஐ. (எம்.எல்.லிபரேசன்) கட்சியின் மாநில செயலாளர் குமாரசாமி, மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த எஸ்.யூ.சி.ஐ. அமைப்பின் மாநில செயலாளர் எ.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்த இடதுசாரிகளின் ஒற்றுமையைக் காக்கும் வகையில் பொது மாநாடு நடைபெற்றது.

Advertisment

சி.பி.எம்.மின் முன்னாள் பொதுச்செயலாளரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிரகாஷ் காரத் பேச்சு விவாதங்களுக்கு வழிவகுத்தது.

gopalakrishnan""நாடு தற்போது வலதுசாரி மதவாத சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், நமது அண்டை நாடான நேபாளத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 62 சதவிகித இடங்களை கைப்பற்றி உள்ளன. நவீன தாராளமயம், இந்துத்வா வகுப்புவாதம் ஊழல்மயமாக உள்ள மோடி அரசை எதிர்த்து இடதுசாரிகள் தலைமை தாங்கும் அல்லது முன்னணி பங்கை வகிக்கும் இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு நாம் நமது இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்'' என்ற அவர், ""தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. தி.மு.க. வளராமல் தேங்கிவிட்டது'' என்றார். தி.மு.க. மீதான இந்த விமர்சனத்திற்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதிலளித்தார். இது அரசியல் அரங்கில் மார்க்சிஸ்ட் கட்சி மறுபடியும் "மக்கள் நலக் கூட்டணி' என்கிற வடிவத்தை முன்னிறுத்துகிறதோ என்கிற பிம்பத்தை உருவாக்கியது.

"முதல்நாள் மாநாட்டில் பேசுவார்' என தோழர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட 96 வயது தியாகியான தோழர் சங்கரய்யா இரண்டாம் நாள் உணர்ச்சிகரமான பதினான்கு நிமிட உரையாற்றினார். "விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே' என்கிற பாடலை இசைக்குழுவினரை மீண்டும் பாடச்சொல்லி கேட்டு உணர்ச்சிவசப்பட்ட சங்கரய்யா, விடுதலை போராட்ட காலத்தில் தொடங்கி இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் தியாகத்துடன் கட்சி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். "தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. பலவீனப்பட்டு நிற்கிறது. அதேநேரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை வலுவாக இருக்கிறது' என்று சொன்னதன் மூலம் பிரகாஷ்காரத், "தி.மு.க. தேங்கி நிற்கிறது' என சொன்னதற்கு நேர்மாறான பார்வையை மாநாட்டில் பதிய வைத்தார். அத்துடன் நிற்காமல், தி.மு.க. தலைவர் கலைஞர், மாக்சிம் கார்க்கியின் "தாய் காவியம்' என்கிற நூலை எழுதியபோது, தன்னிடம் அணிந்துரை கேட்டு வாங்கிப் பெற்ற நிகழ்வையும் கனிவாக மாநாட்டு பிரதிநிதிகள் மனதில் புரிய வைத்தார்.

Advertisment

sankaryaaசங்கரய்யாவின் பேச்சைத் தொடர்ந்து 3 வருடங்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றிய பணிகள் பற்றிய வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், கடந்த மூன்றாண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை வேலை அறிக்கையில் பட்டியலிட்டிருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமாகிவிட்ட மக்கள் நலக் கூட்டணி உருவாக்கத்தையும் இடது ஜனநாயக அமைப்புகளின் போராட்ட வடிவத்தின் நீட்சியே என வேலை அறிக்கையில் வர்ணித்திருந்தார் ஜி.ஆர்.

பெரும்பாலும் அறுபது சதவிகிதத்திற்கு மேல் இளைஞர்கள் பிரதிநிதியாக கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மக்கள் ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்தனர் பிரதிநிதி தோழர்கள்.

ccமுதலில், பிரகாஷ் காரத் தி.மு.க.வை எதிர்த்து பேசுவதையும் சீதாராம் யெச்சூரி தி.மு.க. + காங்கிரசோடு இணைந்து பா.ஜ.க.வை முறியடிப்போம் என சொல்வதும் ஊடகங்களில் வெளியாவதை தவிர்க்க வேண்டும் என கவலைப்பட்டார்கள் விவாதங்களில் ஈடுபட்ட தோழர்கள்.

""மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதுபோல கோஷ்டிகளை உருவாக்கி கட்சியை சீரழிக்க வேண்டாம்'' என்ற தோழர்கள், ""காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்க வேண்டும்'' என்றார்கள். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கூடாது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.

மொத்தத்தில் வருகின்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியா? இல்லையா? என்பதை மாநில மாநாட்டை தொடர்ந்து நடக்கும் அகில இந்திய மாநாடு முடிவு செய்யும் என்ற நிலையில், சி.பி.எம்.மின் புதிய மாநிலச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் தேர்வாகியிருப்பது சி.பி.எம். தோழர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-தாமோதரன் பிரகாஷ், பரமசிவன்