எடப்பாடி அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் போராடி வரும் நிலையில், தலைமைச்செயலக சங்கமும் போர்க்கொடி உயர்த்துகிறது.
தமிழக அரசின் நிர்வாகத்துக்கு தலைமையகமாக இருக்கிறது சென்னையிலுள்ள தலைமைச்செயலகம். இங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தவிர்த்து லிப்ட் ஆப்ரேட்டர் முதல் அண்டர் செக்ரட்டரி வரை சுமார் 7 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் நலன்களுக்காக இருக்கிறது தலைமைச்செயலக சங்கம்.
இந்த நிலையில், நீண்ட வருடங்களாக நிலுவையில் இருக்கும் இவர்களது கோரிக்கைகள் மீது அரசு அலட்சியமாக இருப்பதால் கொதிநிலையில் இருக்கின்றனர் அச்சங்கத்தினர்.
சங்கத்தின் பணியாளர்களிடம் நாம் பேசியபோது, ""தமிழக அரசின் பல்வேறு துறைகளை உள்ளடக்கி 25 கோரிக்கைகள் எங்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி உயர்வு பெற்றுள்ள சார்பு செயலாளர்கள், பிரிவு அலுவலர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் மாவட்டங்களில் கட்டாய பயிற்சியும் கணக்குப் பயிற்சியும் எடுப்பது அவசியம். அதனை இந்த அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. நிதித்துறையிலுள்ள பணியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தை ஓரலகுத் துறை பணியாளர்களுக்கு உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துகின்றது அரசு.
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமைச்செயலகம் வரும் வழியில் ராணுவத்தினரால் போடப்பட்டுள்ள தடைகளை நீக்கவும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தலைமைச்செயலகத்துக்கு மினி பஸ் இயக்கவும் வேண்டும். பணியாளர்கள் வீடு கட்ட முன்பணம் 25-லிருந்து 40 லட்சமாக உயர்த்த வேண்டும். தற்காலிக தட்டச்சர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று தற்காலிகப் பணி முறிவு காலத்தை வரன்முறை செய்யாமல் காலம்தாழ்த்துகிறது அரசு.
இப்படிப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட வருடங்களாகவே நிலுவையில் இருக்கின்றன. இதில் அரசாங்கம் தொடர்ந்து பாராமுகம் காட்டுவதால் பணியாளர்கள் கொதித்துப்போயுள்ளனர். விரைவில் போராட்டம் வெடிக்கும்''’என்கிறார்கள் மிகஆவேசமாக.
சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணிசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, ""சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எங்களது கோரிக்கைகள் அரசின் உயரதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடவடிக்கை இல்லை. முதல்வரையும் துணைமுதல்வரையும் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் செயற்குழுவில் முடிவுகள் எடுக்கப்படும்'' என்கிறார் அழுத்தமாக.
-இளையர்