ந்த வெடிகுண்டும் முஸ்லிம் வைத்ததா, இந்து வைத்ததா என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. உயிரைக் கொல்வதுதான் அதன் நோக்கம். எந்த மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதம் என்றாலும் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

nia

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் நடந்த சில குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சம்பவங்களில் சிலவற்றில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பில் இருந்தனர். மற்றவையும் அவர்கள் மீது சந்தேகத்தை விதைத்த நிலையில்... பின்னர் அவை இந்துமதத்தை சேர்ந்தவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டன.

இந்த வழக்குகளை ஏ.டி.எஸ். எனப்படும் தீவிரவாத தடுப்புப் படை விசாரித்தது. ஆனால், 2008- ஆம் ஆண்டு, மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு விசாரணை நடத்த சக்திவாய்ந்த அமைப்பு தேவைப்பட்டது. எனவே, அதே ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பயங்கரவாத நிகழ்வுகளை விசாரிக்க "நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி ஆக்ட்' என்ற பெயரில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

"என்.ஐ.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின்கீழ் இதுவரை மொத்தம் 265 வழக்குகள் இருக்கின்றன. அவற்றில் இந்து பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட 9 முக்கியமான வழக்குகளும் அடக்கம்.

2006 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் பள்ளிவாசல் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 35 பேர் பலி. இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் 9 இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர்தான் பெண் சாமியார் பிரக்யா சிங் உள்பட அவருடைய கூட்டாளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

nia

Advertisment

2007 பிப்ரவரி 18-ஆம் தேதி நள்ளிரவு டில்லியிலிருந்து லாகூர் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 64 பேர் பலியாகினர்.

அதே 2007-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி அஜ்மீரில் உள்ள தர்காவில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர் சுனில் ஜோஷி மத்தியப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார். மாலேகான், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான பெண் சாமியார் பிரக்யாவுக்கு வேண்டியவரான இவர், அவரிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதால் கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மீண்டும் மாலேகானில் 3 குண்டுகள் வெடித்து 7 பேர் பலியாகினர்.

2009-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய இரவு கோவா மாநிலத்தில் உள்ள பானாஜியில் குண்டுவெடித்து ஒருவர் பலியானார். நரகாசுரன் விழாவில் கூடியிருந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைச் சந்தேகித்த போலீஸ், பின்னர், "சனாதன் சன்ஸதா' என்ற இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தது.

nia

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விசாரணை தொடர்ந்த நிலையில்... 2014-ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு மத்தியில் அரசு அமைத்த பின்னர், என்.ஐ.ஏ. இணையதளத்தில் இந்து பயங்கரவாதம் என்ற தலைப்பில் இருந்த வழக்குகள், இதர குழுக்கள் என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மென்மையான போக்கை கையாளுமாறு, தான் மிரட்டப்படுவதாக, சிறப்பு மத்திய அரசு வழக்கறிஞரான ரோஹினி சாலியன் பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில்தான், "பா.ஜ.க. அரசு தமது அரசியல் ஆதாயத்திற்காக என்.ஐ.ஏ.வை பயன்படுத்தி வழக்குகளை சீர்குலைக்கும்' என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் இப்படிக் கருத்துக் கூறிய இரண்டே வாரங்களில்... சுனில்ஜோஷி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்சாமியார் பிரக்யாவை, தேவாஸ் நீதிமன்றம் விடுவித்தது. அதைத்தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் பிரக்யா மற்றும் 5 இந்து பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. விடுவித்தது. அதுபோல, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளிலும் பல சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதாவது 9 வழக்குகளில் 4 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, மூவர் தவிர அனைத்துக் குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். ஒரு வழக்கில் குற்றவாளிகள் எவரும் பிடிபடாத நிலையில் முடித்து வைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 4 வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

வெடிகுண்டுகள் மதம் பார்க்காமல் பலி தீர்க்கின்றன. விசாரணைகள் மதச்சாயம் பூசி பழி சுமக்கின்றன.

-தொகுப்பு: ஆதனூர் சோழன்