ஜெ. தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த மானிய ஸ்கூட்டி திட்டத்தை மோடி துவக்கி வைப்பதென முடிவு எடுத்ததே மத்திய அரசுதான் என்கிறார்கள்.

Advertisment

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி தொடங்கி வைக்க நினைத்த திட்டம் பற்றி, கவர்னரின் ரிப்போர்ட் மூலம் அறிந்த பிரதமர் அலுவலகம், மோடியுடன் விவாதித்து சம்மதம் பெற்று, கடந்த 20-ந்தேதி கவர்னர் புரோஹித்துக்கு தகவல் தெரிவித்துவிட்டது. மோடி அமரும் மேடையில் பின்புறம் வைக்கப்படும் பேனரின் டிஸைனை முடிவு செய்து அனுப்பி வைக்கவும் சொல்லியுள்ளது. கவர்னர் டூ தலைமைச்செயலாளர், தலைமைச் செயலாளர் டூ முதல்வர், முதல்வர் டூ சீனியர் அமைச்சர்கள் என தகவல் பாஸ் ஆனபோது அதிர்ச்சிதான். மேடை பேனர் டிசைனில் இருந்த ஓ.பி.எஸ். படத்தை அகற்றச் சொல்லிவிட்டது டெல்லி. ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் கையில் எடுத்தது, எடப்பாடிக்கு தனிப்பட்ட ஷாக்காக இருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸுக்கு டெல்லி முக்கியத்துவம் தரவில்லை என்ற மகிழ்ச்சியில், பிரதமர் விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்பெஷலாக செய்ய உத்தரவிட்டார்.

modi

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செலவிடப்படாமல் இலவச திட்டங்களுக்கு திருப்பிவிடப்பட்டு, மாநில ஆட்சியாளர்கள் பெயர் பெறுகிறார்கள். அந்தப் பெயரை பிரதமரே எடுக்கட்டும் என்றுதான் பாண்டிச்சேரி புரோக்கிராமை 25-க்கு மாற்றிவிட்டு 24-ந் தேதி சென்னை வந்தார் பிரதமர்‘’ என மோடியின் தமிழக விசிட் குறித்து விவரித்தனர் அதிகாரிகள்.

Advertisment

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தைத் துவக்கி வைத்த மோடி, தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி தந்து உதவியிருக்கிறது என்பதையும், எந்தெந்த திட்டங்களின் மூலம் பெண்கள் பலனடைந்துள்ளனர் என்பதையும் விரிவாக விவரித்துப் பேசி, அதனை மத்திய அரசின் பிரச்சார மேடையாக மாற்றி அமைத்தார். அன்றிரவு ராஜ்பவனில் தங்கிய மோடி, அமைச்சர் தங்கமணியை மட்டும் சந்தித்துவிட்டு மறுநாள் பாண்டிச்சேரிக்குப் பறந்தார்.

thangamaniஇந்த நிலையில், மோடியின் சென்னை பயணம் குறித்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் மோடி, கவர்னர் புரோஹித், பொன்.ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் பயணித்தனர். மற்றொரு ஹெலிகாப்டரில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., சபாநாயகர் தனபால் மற்றும் 4 அதிகாரிகள் பயணித்தனர். இரண்டு ஹெலிகாப்டரும் ஐ.என்.எஸ். கடற்படைத்தளத்தில் இறங்கியது. அங்கு 10 நிமிடம் ஓய்வெடுத்தார் மோடி. அப்போது எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரிடமும், "தமிழக அரசு குறித்து எனக்கு வரும் தகவல்கள் ஆரோக்கியமாக இல்லை. இருவரின் செயல்பாடுகளிலும் எனக்கு திருப்தியில்லை. உங்கள் அரசில் ஊழல்கள் மலிந்துவிட்டன' என சொன்ன மோடி, "தனிப்பட்ட சந்திப்பில் நடந்ததை பொதுமேடைகளில் பேசுவதுதான் உங்களுக்குத் தெரிந்த நாகரிகமா' என ஓ.பி.எஸ்.சைப் பார்த்து கடிந்துகொண்டுவிட்டு, காரை நோக்கிச்சென்றார். அப்போது, "நிகழ்ச்சி முடிந்து உங்களை சந்திக்க விரும்புகிறோம். 15 நிமிட அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள்' என எடப்பாடி கேட்க, அதனை மறுத்தார் மோடி. அதேசமயம், நிகழ்ச்சியின் புரோட்டகால்படி இந்த பயணத்திற்காக நியமித்துள்ள பெர்சனாலிட்டி யார் என கேட்க, "மினிஸ்டர் தங்கமணி' என சொன்னார் புரோஹித். அதனால்தான் அவருக்கு ராஜ்பவனில் ஸ்பெஷல் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார் மோடி'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

அந்த விவாதத்தில், ""தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் துறைமுக சரக்கு முனையம் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவது குறித்தும், ஏற்கனவே ஒப்புதல் தரப்பட்ட துறைமுக திட்டங்கள் குறித்தும் சில அறிவுறுத்தல்களை தங்கமணிக்கு கொடுத்துள்ளார் மோடி. இது தொடர்பாக நிதின்கட்கரி சொல்வதை நடைமுறைப்படுத்துங்கள் என்றும் சொல்லியுள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதியை கவர்னர் தருவது குறித்தும், முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் உங்களை சந்திக்க வேண்டும் என்பதையும் பிரதமரிடம் தங்கமணி தெரிவித்தார். அதற்கு, "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அனைத்துக்கட்சி தலைவர்களை சந்திப்பது பற்றி டெல்லி சென்றதும் ஆலோசிக்கிறேன்' என சொல்லியுள்ளார் மோடி'' என்கின்றனர் உயரதிகாரிகள் தரப்பினர்.

-இரா.இளையசெல்வன்

Advertisment

நமது அம்மா! ஒரிஜினல் ஓனர் புலம்பல்!

அ.தி.மு.க.வின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடான "நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தித்தாளில் நிறுவனர்கள் "எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்' என்கிற பெயர்கள் இருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் கோவிந்தன் என்கிற ஜெயகோவிந்தன். அ.தி.மு.க.வின் நீண்டகால உறுப்பினரான இவர், தற்போது தலைமைக் கழக பேச்சாளராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு "நமது புரட்சித்தலைவி அம்மா' என்கிற இதே பெயரில் பத்திரிகையை பதிவு செய்து, ஆர்.என்.ஐ. எண் வாங்கி நடத்திவந்தார். அது நட்டத்தில் இயங்கிவந்தது.

ஜெயகோவிந்தனை அழைத்துப் பேசிய அமைச்சர் வேலுமணி, ""தினமும் ஒரு லட்சம் காப்பி பிரிண்ட் செய்து தமிழகத்தில் உள்ள நம் கட்சியின் அனைத்து கிளைகளுக்கும் இலவசமாக அனுப்ப வேண்டும். நிறுவனர் என்கிற இடத்தில் முதல்வர் பழனிச்சாமி பெயரும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயரும் வரவேண்டும்'' என்றுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட கோவிந்தன் "என்னை ஆசிரியராகவோ, துணை ஆசிரியராகவோ நியமிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது சரிசரி என தலையாட்டிய அமைச்சர் வேலுமணி, இதற்கு பிரதிபலனாக ஓரளவு பணம் தந்துள்ளார். ஆனால் வாக்கு தந்தபடி ஆசிரியராக அவரை நியமிக்கவில்லை. மருது அழகுராஜை நியமித்தனர். துணை ஆசிரியராகவும் நியமிக்கவில்லை என்பதால் நொந்துபோய் தனது நண்பர்களிடம் வெதும்பிப் புலம்பியுள்ளார் கோவிந்தன்.

-ராஜா