முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தைக்கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது எடப்பாடி அரசு. அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் அது குறித்து மோடி கவலைப்படவில்லை. குறைந்தபட்சம் அந்த கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து விளக்கம் கேட்டிருக்கலாம். அதைக்கூட செய்யாமல், பிரதமர் அலுவலகத்திலேயே தூங்குகிறது அந்த தீர்மானம் என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

governor-modi

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூட்டிய அதிகாரிகளின் கூட்டத்திலும், ""வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை. திட்டம் என்கிற அடிப்படையிலேயே சொல்லியிருக்கிறது. என்ன மாதிரி திட்டம் என்பதை சுப்ரீம் கோர்ட்டையே தெளிவுபடுத்தச் சொல்லலாம். இதனை உங்கள் முதலமைச்சரிடம் (எடப்பாடி) எடுத்துச்சொல்லுங்கள்''’என தமிழ்நாடு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் வலியுறுத்திச் சொன்னார்கள் மத்திய அரசு அதிகாரிகள். அதை ஏற்று தமிழக அரசு அதிகாரிகள் சென்னை திரும்பினர்.

தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதனும், பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகரும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து டெல்லியில் நடந்ததை விவரிக்க, எடப்பாடிக்கு அதிருப்தி. ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களை அழைத்து விவாதித்தார்.

Advertisment

அதில், டெல்லியில் நடந்ததையும் நமது மாநில அதிகாரிகள் விளக்கிப் பேசாமல் திரும்பியதையும் எடப்பாடி விவரித்தபோது, அமைச்சர்கள் எல்லோருமே பொங்கித் தீர்த்தனர். ""காவிரிங்கிறது நம்முடைய உரிமை. அதை விட்டுக்கொடுக்கக்கூடாது. உரிமை சார்ந்த விசயத்தில் பின் தங்கினால் தமிழகத்துக்கு நாம் துரோகிகளாகத் தெரிவோம். தி.மு.க.வுக்கு அது சாதகமாகும். அதனால் வாரியம் அமைப்பதில் விடாப்பிடியாக இருப்போம். பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்'' என ஓ.பி.எஸ்., சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்கள் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள். மேலும், இது குறித்து சில சட்டப்பாயிண்டுகளைப் பேசிய சண்முகம், ""காவிரி நதிநீர் சிக்கல் தொடர்பான இதற்கு முந்தைய சட்டவரையறைகளில், "ஸ்கீம்' என்பதற்கு அத்தாரிட்டி’என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தாரிட்டியை ஆணையம் என்றும் சொல்லலாம், வாரியம் என்றும் சொல்லலாம். போர்ட் என இருந்தால்தான் வாரியம் என சொல்லணும்ங்கிறதல்ல'' என்கிற ரீதியில் விளக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்துதான், வாரியம் அமைக்காது போனால் மத்திய அரசுக்கு எதிராக போராடலாம் என முடிவு செய்தனர் என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

eps-opsஇந்த நிலையில்தான், ஆறு வாரம் கெடு முடியும் கடைசி நாளில், "ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகவிருக்கும் செய்தியை அறிந்து அவசரம் அவசரமாக சட்ட நிபுணர்களுடன் விவாதிக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். அந்த ஆலோசனையில்தான், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு முன்பாகவே தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்ததால், செய்வதறியாமல் திகைத்த எடப்பாடி, சீனியர்களிடம் விவாதித்துவிட்டு, அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என அறிவித்தார். எதிர்க்கட்சிகள்-மாணவர்கள் உள்ளிட்டோரின் போராட்ட செய்திகளை உடனுக்குடன் டெல்லிக்கு அனுப்பியபடி இருந்தது மத்திய உளவுத்துறை.

Advertisment

இந்த நிலையில்தான், தமிழக அரசின் தலைமைச்செயலர் கிரிஜாவைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன்மார்ட்டி, டி.ஜி.பி.ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் ஆகியோரை அவசரமாக அழைத்து மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு குறித்து ஆலோசித்தார் கவர்னர் பன்வாரிலால். ஆலோசனையைத் தொடர்ந்து டெல்லிக்கு விரைந்த கவர்னர் பன்வாரிலால், பிரதமரை சந்தித்து ஒரு ரிப்போர்ட் தந்திருக்கிறார். கவர்னரின் ஆலோசனையும், பிரதமருடனான சந்திப்பும்தான் தற்போது அரசியல் பரபரப்புகளை உருவாக்கியிருக்கிறது.

officersஇதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""மத்திய அரசுக்கு எதிரான தமிழக போராட்ட நிலவரங்களை பிரதமர் மோடி ரசிக்கவில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஒரு ரிப்போர்ட் தயாரித்து டெல்லிக்கு எடுத்து வருமாறு கவர்னருக்கு உத்தரவிட்ட பிரதமர் அலுவலகம், சில கேள்விகளையும் அழுத்தமாக கேட்டிருக்கிறது. இதனையடுத்துத்தான் கிரிஜாவைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து விவாதித்தார் பன்வாரிலால். அப்போது, "உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் வாரியம் பற்றி சொல்லப்படவில்லை. இது தெரிந்தும், மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்வதும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதும் சரியா? இந்த விவகாரங்களில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என அதிகாரிகளிடம் கவர்னர் கேட்க, முதல்வரிடம் நாங்கள் சொல்லியும் அவர் ஏற்கவில்லை. மத்திய அரசை கண்டித்து கவர்மெண்டே உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. இதை சுப்ரீம்கோர்ட்டே பலமுறை சொல்லியிருக்கிறது. அதனால், உண்ணாவிரதத்தை தவிர்க்கப்பாருங்கள் என எடுத்துச்சொன்னோம்.

அதற்கு அவர், ’"இதனை அ.தி.மு.க. கட்சி நடத்துகிறது. நானோ, துணை முதல்வரோ கலந்துகொள்ளவில்லை. கட்சி நடத்துவதை நாங்கள் தடுக்க முடியாது' என சொல்கிறார். இதன்பிறகு ஒரு முதல்வரை எங்களால் எப்படி வற்புறுத்த முடியும்?' என விளக்கம் தந்திருக்கிறார்கள் கிரிஜாவும், நிரஞ்சன்மார்ட்டியும்.

"அவமதிப்பு வழக்கு போடும் யோசனை முதலில் கிடையாது; கர்நாடக தேர்தலை சுட்டிக்காட்டி மத்திய அரசு மனு தாக்கல் செய்வதையறிந்துதான் அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டது. அதில் தவறேதும் இல்லை' என விளக்கம் தந்திருக்கிறார் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன். இதனையடுத்து, வேல்முருகன் கட்சியினரால் டோல்பிளாஸா உடைக்கப்பட்ட விவகாரத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன் என டி.ஜி.பி.யிடம் கவர்னர் சொல்ல, உடனடியாக அவை தடுக்கப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தைத் தாண்டி வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் டி.ஜி.பி.! ஆலோசனையின் முடிவில், மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை டெல்லி உன்னிப்பாக கவனிக்கிறது. "எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்' என சொல்லி அதிகாரிகளை அனுப்பி வைத்தார் கவர்னர்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

பிரதமருடனான கவர்னரின் சந்திப்பு குறித்து டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ""தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் அத்தனை போராட்டங்களுக்கும் பின்னணியில் மாநில அரசின் ஒத்துழைப்பு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நடத்தும் திடீர் திடீர் மறியல் போராட்டங்களும் காவல்துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது. மாநிலத்தின் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என அரசுக்கு எதிராக பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி கனமான ரிப்போர்ட்டை தந்திருக்கிறார் கவர்னர். இதனால் எடப்பாடி அரசு மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் பிரதமர். சில நாட்களுக்கு முன்பு நடந்த கவர்னர்-ஸ்டாலின் சந்திப்பில் சில உறுதிமொழிகள் ஸ்டாலினிடம் பெறப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப, நடவடிக்கைகள் எடுக்கத்தான் சட்டம்-ஒழுங்கு குறித்த ரிப்போர்ட்டை கவர்னரிடம் கேட்டுப்பெற்றிருக்கிறார் பிரதமர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவை அடுத்து எடப்பாடி அரசுக்கு எதிரான பிரதமரின் கோபம் வெளிப்படையாகத் தெரியவரும்'' என்கின்றனர்.

இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டச் சிக்கல்களை கருத்தில் கொண்டு கலந்துகொள்வதில்லை என்று தான் எடப்பாடியும் பன்னீரும் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் சென்னையில் நடந்த போராட்டத்திற்கு தலைமையேற்று இருவரும் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, ""அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் போராட்டத்தில் மாவட்ட அமைச்சர்கள் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்ற ஒரு போராட்டம், 2011-2012 காலக்கட்டத்தில் நடந்தபோது, அமைச்சர்கள் கலந்துகொள்வது சட்டச் சிக்கல்களையும் ஆட்சிக்கு பிரச்சனையும் ஏற்படுத்தும் என ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டதால், அமைச்சர்களை கலந்துகொள்ள வேண்டாம் என சொல்லிவிட்டார். அதை சீனியர் அமைச்சர்கள் 2-ந்தேதி இரவு எடப்பாடியிடம் சுட்டிக்காட்டியபோது, "நாளைக்கு சென்னையில் நடக்கும் போராட்டத்தில் நானும் ஓ.பி.எஸ்.சும் கலந்துகொள்ளப்போகிறோம். இதை வைத்து ஆட்சிக்கு சிக்கலை டெல்லி உருவாக்கினால் அது நமக்கு நல்லதுதான். ஏற்கனவே டெல்லிக்கும் நமக்கும் முரண்பாடுகள் அதிகரித்தபடிதான் இருக்கிறது. காவிரி பிரச்சனையால் இது வெளிப்பட்டால் நல்லதுதான். அதனால், தமிழக அரசும் மத்திய அரசுக்கு எதிராக இருக்கிறதுங்கிற தோற்றமாவது கிடைக்கட்டும்' என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதனால், ஒரு முடிவோடுதான் கலந்துகொண்டார்கள்'' என்றனர்.

தமிழகத்தில் கொந்தளிக்கும் போராட்டங்களை சமாளிக்க உண்ணாவிரத நாடகம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசுக்கு பயன்பட்டுள்ளது. கவர்னர் மூலம் பா.ஜ.க. ஆட்சியை தமிழகத்தில் நடத்தும் மோடியின் கோபமும் வேகமும் அதிகரித்துள்ளது.