ச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில்... மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ponradhakrishnanநக்கீரன்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி என்ற அடிப்படையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

பொன்.ராதா: நான், பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த நேரத்திலும் சரி, மத்திய அமைச்சராகவும் சரி... தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேதான் இருக்கிறேன். நீதிமன்றங்களைச் சார்ந்த சில விஷயங்கள் இருப்பதால் நாம் நடைமுறைப்படுத்தக்கூடிய விஷயங்கள் நாளைக்கு கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையுடன் மத்திய அரசு செயல்படுகிறது.

நக்கீரன்: கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. மத்திய மந்திரியான அனந்தகுமார் ஹெக்டே "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது' என்று அந்த மாநில முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து இருக்கிறார். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

Advertisment

பொன்.ராதா: கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும்போது, அங்கிருக்கிற மத்திய அமைச்சரை அந்த அரசாங்கம் அழைச்சிருக்காங்க. ஒட்டுமொத்த மாநிலத்தின் நிலையை இது பிரதிபலித்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என சர்வகட்சிக் கூட்டம் முடிவெடுத்தது. அப்போது தமிழக பா.ஜ.க. தலைவரான நான், அதை எதிர்த்து தீர்மானம் போட்டேன். ஆனால் இப்போது தமிழகத்தில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை.

நக்கீரன்: பல்வேறு மாநிலங்களில் நதிநீர் பங்கீடு பிரச்சினைகளில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 10 நதிநீர் மேலாண்மை வாரியங்கள் அமைக்கப்பட்டு அவை முறையாக செயல்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மட்டும் பா.ஜ.க. அரசு ஏன் பின் வாங்குகிறது?

பொன்.ராதா: அது பா.ஜ.க. அரசின் பின்வாங்கல் என்று சொல்லாதீர்கள். இரண்டு மாநிலத்தின் விவசாய பிரச்சினை, அரசியல்வாதிகளுக்கு ஆதாய பிரச்சினையாக போச்சு.

Advertisment

நக்கீரன்: "தமிழகத்தை சுடுகாடாக மாற்ற வேண்டுமென்கிற எண்ணத்தில்தான் பிரதமர் மோடி பல்வேறு நச்சு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்' என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பொன்.ராதா: அவர் சொல்லுற அத்தனை நச்சு திட்டங்களுக்கும் யார் ஆட்சியின்போது கையெழுத்து போடப்பட்டது? தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணிட்டோம்னு ஸ்டாலின் மன்னிப்பு கேட்கட்டும்.

நக்கீரன்: அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம்?

பொன்.ராதா: ஆட்சியில் இருந்துகொண்டே மக்களை ஏமாற்றி நாடகம் ஆடக்கூடாது.

நக்கீரன்: "நான் ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை அமைக்கப்படும்' என்றால் அதற்கு நீங்கள் தயார் என்றீர்கள். அப்படியென்றால், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?

பொன்.ராதா: ராஜினாமா செய்யப்போகிறேன் என்று அ.தி.மு.க.வினரைப் போன்று ஏமாற்ற மாட்டேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பொன்.ராதாகிருஷ்ணன்தான் தடையாக இருக்கிறார் என்றால்தான் என் ராஜினாமாவுக்கு தேவை இருக்கும்.

-சந்திப்பு: மணிகண்டன்