தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்கிறோம் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அழுத்தமாக சொல்லி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், வளர்ச்சிக்கான அறிகுறி சிறிதளவும் இல்லாமல் திவாலை நோக்கி அரசு செல்வதையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் நிரூபிப்பதாக இருக்கிறது என்கிறார்கள் நிதி மேலாண்மை ஆலோசகர்கள்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வரும் நிதியாண்டில் 8.03 சதவீதமாக இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருந்தது. அந்த வளர்ச்சியை ஓராண்டில் தமிழக அரசு எட்டியிருந்தால் மக்களிடம் அதற்கான பலன்கள் தெரிந்திருக்கும். ஆனால், எந்த துறையிலும் அவை எதிரொலிக்கவில்லை.
வணிகவரியாக 77,234 கோடி ரூபாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்திருப்பதாக எடப்பாடியின் முந்தைய பற்றாக்குறை பட்ஜெட்டில் சொல்லப்பட்டது. அதனை மையமாக வைத்தே பொருளாதார வளர்ச்சியில் 8.03 சதவீதத்தை எட்டுவோம் என மார்தட்டிக்கொண்டார்கள். ஆனால், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வணிக வரி வருவாயை எடப்பாடி அரசு ஈட்டியதா? இல்லை. 75,264 கோடி ரூபாய்தான் ஈட்டியுள்ளது. இதன் மூலம், சுமார் 2000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல, முந்தைய நிதியாண்டில் அரசின் மொத்த வரி வருவாயாக 99,590 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 98,639 கோடியாக அவை குறைந்துவிட்டன. இதன் மூலமும் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வரவில்லை.
இது ஒருபுறமிருக்க, 2018-19 நிதியாண்டில் அரசுக்கான நிதிப்பற்றாக்குறை 15,930 கோடியாக இருக்கும் என முந்தைய பட்ஜெட்டில் மதிப்பீடு செய்திருந்தது எடப்பாடி அரசு. ஆனால், தாக்கல் செய்துள்ள நடப்பு பட்ஜெட்டை ஆராயும்போது, நிதிப் பற்றாக்குறை 28,550 கோடி அதிகரித்து 44,480 கோடியாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க, 43,962 கோடி ரூபாய் கடன் வாங்கப்படும் எனவும், இதன் மூலம் நடப்பாண்டில் அரசின் கடன் சுமை 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார் ஓ.பி.எஸ். ஆரோக்கியமான நிர்வாகம் நடந்திருந்தால், இந்த கடினமான நெருக்கடியை அரசு சந்தித்திருக்காது.
நம்மிடம் பேசிய நிதித்துறை அதிகாரிகள், ""கடனையும் கடனுக்கான வட்டியையும் ஆய்வு செய்தபோது, நடப்பாண்டில் கடனுக்கான வட்டியாக மட்டுமே கிட்டத்தட்ட 30 ஆயிரம்கோடி ரூபாய் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறது எடப்பாடி அரசு. அதேபோல, மானியங்களுக்காக 76 ஆயிரம் கோடி தேவை. இவை இரண்டையும் கணக்கிட்டால் வட்டிக்கும் மானியங்களுக்கும் மட்டுமே சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி செலவழிக்கப் போகிறது. ஆக, நடப்பாண்டில் மொத்த வரி வருவாய் 1,76,251 கோடியாக இருக்கும் நிலையில் மொத்த செலவினங்களோ 1,93,742 கோடியாக இருக்கிறது. இதன் மூலம் 17,491 கோடி ரூபாய் பற்றாக்குறை. வருவாய் பற்றாக்குறை ஒருபுறமிருக்க, 44,481 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது அரசு நிர்வாகம் திவாலை நோக்கி நகர்வதையே உணர்த்துகிறது.
நிதியிலும் வருவாயிலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், நேரடிக் கடன் சுமையாக 3,55,845 கோடியும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான கடன் சுமை சுமார் 2 லட்சம் கோடியும் இணைந்து 5 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உயர்த்தி வைத்திருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். தற்போதைய நிர்வாக வழிகாட்டுதல்களோடே அரசு செயல்படுமானால் நிதி ஆண்டின் இறுதியில் கடன் சுமை 7 லட்சம் கோடியாக அதிகரிப்பதை தடுக்க முடியாது'' என்கின்றனர்.
அதேபோல அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்களில், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்கப்பட்டு அதன்மூலம் அனைத்து தானியங்களையும் அரசே கொள்முதல் செய்யும் என்கிற அறிவிப்பையும், 450 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்பதையும் விவசாய சங்கங்கள் வரவேற்கின்றன. பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 1,500 கோடி ஒதுக்கவேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 273 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது கல்வியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டுதோறும் 500 மதுக்கடைகளை மூடி, படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவோம் என ஜெயலலிதா அறிவித்திருந்ததை எடப்பாடியும் பன்னீரும் மறந்துவிட்டார்கள். இந்த பட்ஜெட்டில் மதுக்கடைகளை குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல அத்திக்கடவு-அவினாசி திட்டத்திலும், கரும்புகொள்முதல் நிர்ணயம் செய்வதிலும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. தமிழகத்தில் பெருகிவரும் மர்ம காய்ச்சலையும் விஷ காய்ச்சலையும் கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் இல்லாததும் ஏமாற்றமே. சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 11,634 கோடியில் பெரும்பகுதி தனியார் மருத்துவமனைகளின் நலன்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என அச்சம் தெரிவிக்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.
நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொரு துறையும் அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில், கடன்சுமையையும் பற்றாக்குறையையும் அதிகரிக்கச்செய்து அரசாங்கத்தை திவாலாக்கி கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி!
-இரா.இளையசெல்வன்