தமிழகத்தில் ஏப்ரல் 3-ந் தேதி முதல் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இதற்கான வேட்புமனு தாக்கலின்போதே பல இடங்களிலும் மோதல்கள் வெடித்துள்ளன. கரூர் மாவட்டத்தில் மோதல்கள் உச்சகட்டத்திற்குச் சென்றன.
இந்த மாவட்டத்தில் 360 கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு 4 கட்டமாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. முதல் கட்டமாக 64 கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனு தாக்கல் அறிவிக்கப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில், 11 இயக்குநர்கள் பதவிகளுக்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு செய்ய, சங்க அலுவலகம் முன்பு காத்திருந்தனர். அப்போது, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவரும், சிட்டிங் சங்கத் தலைவருமான ராஜாவும், அவரது ஆட்களும் வந்தனர். முதலில், வேட்புமனு தாக்கல் செய்ய அ.தி.மு.க.வினர் அலுவலகத்தின் உள்ளே சென்றனர். அப்போது அ.ம.மு.க.வினரும் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சங்க அலுவலகத்திற்கு செல்லும் மாடிப்படியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் குதித்தனர். அப்போது, அவர்கள் முதல்வர் எடப்பாடி மற்றும் மாவட்ட மந்திரியான போ.வ.து. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க, இதையடுத்து ராஜா உள்பட சிலர் மனுத்தாக்கல் செய்யச் சென்றனர்.
அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் கோபமடைந்து, டி.டி.வி.தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அது மோதலாக மாறியது. இதனால் அந்த இடமே கலவரமானது.
பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். எனினும் பதட்டம் தணியாததால், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.
இதன் பிறகும் இருதரப்பும் வரிந்து கட்டிக்கொண்டு முண்டியடிக்க... அவர்களின் நடுவே பஸ்சை வரவழைத்து குறுக்கே நிறுத்தியது போலீஸ். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென செங்கல்லைத் தூக்கி போலீஸ் பஸ் மீது வீசினார். இதனைக்கண்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முயன்றபோது, தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீஸ் ஜீப் மீதும் கல் வீசப்பட்டது.
இதற்கிடையில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள்ளும் அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சங்க அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, அ.ம.மு.க.வை சேர்ந்த ராஜா, விஜயகுமார் உள்பட 8 பேரை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். கைதான விஜயகுமார் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. கைதானவர்களை தான்தோன்றிமலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அவர்களை போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் ’""கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற எங்கள் கட்சியைச் சேர்ந்த 11 பேரை போலீசார் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். போலீஸ் வாகனங்கள் மீது ஆளுங்கட்சியினர் கல்வீசித் தாக்கி உள்ளனர். போலீசாரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது புகார் சொல்கிறார்கள்'' என்றார் காட்டமாக.
இதேபோல் அ.தி.மு.க. நகரச்செயலாளர் நெடுஞ்செழியன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ""அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்யவந்த இடத்தில் தகராறில் ஈடுபட்டு எங்களைத் தாக்க முயன்றனர். போலீசார் உரிய நேரத்தில் வந்து எங்களைக் காப்பாற்றினர்'' என்றார்.
கூட்டுறவு சங்கத் தேர்தலுக்காக கரூரில் இந்நாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பும் முட்டி மோதிக்கொண்டதில், "கூட்டுறவு' என்ற வார்த்தையே மதிப்பிழந்து கிடக்கிறது.
-ஜெ.டி.ஆர்.
ஷேரிங்?
கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்கெனவே சசிகலா தரப்பில் அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் தேர்தலில் அ.ம.மு.க. அதிகளவில் வெற்றிபெறும் என்ற பதட்டம் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் உள்ளது. அதனால்தான் தினகரன் தரப்பினர் வேட்புமனு செய்ய முடியாதபடி தமிழகத்தின் பல இடங்களிலும் அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபடுகின்றனர். தி.மு.க. தரப்பும் ஒரு சில இடங்களில் "உரிமைக்குரல்' எழுப்புவதால், அ.ம.மு.க.வை ஓரங்கட்டி ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் 60:40 என்ற ஷேரிங்கில் கூட்டுறவுத் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிகிறது. தி.மு.க. தரப்போ, ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதுடன், தேர்தலுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்க ஆலோசிக்கிறது.
-இளையர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-29/fight2.jpg)