ளைக்காமல் பயணித்து மக்களிடம் பரப்புரை செய்வது வைகோவுக்கு வழக்கமான ஒன்றுதான். டாஸ்மாக்குக்கு எதிரான அவரது நடைப்பயணம் கண்டு ஜெ.வே காரிலிருந்து இறங்கியது பழைய நிகழ்வு.

நியூட்ரினோவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தெளிவை, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக புறப்பட்ட வைகோவின் நடைப்பயணம் பரபரப்புகளுக்கும் பதட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் வீரநடை போடுகிறது.

vaiko

வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணத்தை, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மூவேந்தர்கள் சின்னங்கள் பொறித்த கொடியசைத்து 31-3-18 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

Advertisment

முன்னூறு தொண்டர்கள் பின்தொடர, தேனி சாலை அங்கயற்கண்ணி தோரணவாயில், அச்சம்பத்து நாகமலை புதுக்கோட்டை வழியாகச் செக்கானூருணி வந்தடைந்தது நடைப்பயணம். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார் வைகோ. இரண்டாவது நாள் முடிவில் உசிலம்பட்டி பொதுக்கூட்டம். மூன்றாம் நாளில் பெருங்காமநல்லூருக்கு வந்தது நடைப்பயணக் குழு.

குற்றப்பரம்பரை ரேகைச் சட்டத்தின் கொடுங்கோலுக்கு அடங்காது, பெருங்காமநல்லூரில் புரட்சி செய்த மக்களை கொக்கு, குருவிகளைச் சுடுவதைப்போல் சுட்டுக்கொன்றது பிரிட்டிஷ் இந்தியப் போலீஸ். 02-04-1920 அன்று நடத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாயக்காள் வீரப் பெண்மணி உட்பட பதினாறு பேர் கொல்லப்பட்டனர்.

அந்தத் தியாகிகளின் நினைவிடத்தில் வருடாவருடம் அஞ்சலி செலுத்துவது வைகோவின் வழக்கம். நடைப்பயணம் வந்த வைகோ பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் பேசத் தொடங்கியபோது... வெற்றிக்குமரன் தலைமையில் அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் ""தமிழினம் எங்கள் இனம்... நாயக்கனே வெளியேறு... அண்ணன் சீமான் வாழ்க'' என்று கோஷமெழுப்பினர். ம.தி.மு.க.வினர் எதிர் கோஷமெழுப்பினர். இரண்டு குழுவிற்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உள்ளூர் மக்கள், ""ஏம்ப்பா... வைகோ... வருடா வருடம் வந்து அஞ்சலி செலுத்துபவர். எதற்காக பிரச்சினை செய்கிறீர்கள்?'' என்றபடி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisment

தொடர்ந்து பேசிய வைகோ, ""என்னைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். என்னையும் தமிழ் மக்களையும் பிரிக்க முடியாது...'' கண்ணீர் கூடுகட்ட, பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் தனது தொண்டர்களுடன் வைகோ.

அன்று மாலை 5 மணிக்கு தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய்க்கு, சுமார் 150 பேருடன், நடந்து வந்த வைகோவுக்கு தேனி மா.செ. சந்திரன் தலைமையில் ம.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். கணவாய்மேடு பழக்கடைக்காரர் சுப்புராஜ், பழங்களை வெட்டி சல்லாட் செய்து கொண்டு வந்து கொடுத்து ""முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காகவும் நீங்கதான் வந்தீங்க. இப்ப நியூட்ரினோவுக்காகவும் நீங்கதான் வர்றீங்க?'' என வாழ்த்தினார்.

மாலை 7 மணிக்கு ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலையருகே பொதுக்கூட்டம். ""பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தப் போகிறார்கள். அங்கிருந்து முல்லைப்பெரியாறு அணை இருபது கிலோ மீட்டர் தூரம்தான். அங்கே மலையைப் பிளப்பதற்கு பயன்படுத்தப் போகிற ராட்சச வெடிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கும் ஆபத்து ஏற்படலாம்தானே'' -உணர்ச்சிப்பூர்வ சொற்பொழிவாற்றினார் வைகோ. வைகோவின் நடைப்பயணத்தை வரவேற்கவும் மாலை, சால்வை மரியாதை செய்யவும், பொதுக்கூட்டப் பேச்சைக் கேட்கவும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வருகிறார்கள். ஆனால் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் ம.தி.மு.க. தொண்டர்களே.

4-4-18 காலை ஆண்டிப்பட்டியிலிருந்து புறப்பட்ட நடைபயணிகளை முத்தரைப்பட்டி எழுச்சியோடு வரவேற்று நண்பகல் விருந்தளித்தது.

vaiko

மாலை 7 மணிக்கு தேனியில் கூட்டம். கவிஞர் வைரமுத்து வந்திருந்தார். மைக் பிடித்தார். ""என்னைக் கவிஞனாக்கியவை, எழுதத் தூண்டியவை இந்த மேற்குத் தொடர்ச்சி மலையும், வடுகப்பட்டியை விழுங்கிய வைகை அணைக்கட்டும்தான். இந்த இரண்டையும் மாதம் ஒரு முறையாவது நேரில் வந்து பார்த்து விடுவேன். பார்க்காவிட்டால் எனக்கு உடல் நலக்கேடு உண்டாகிவிடும். எனது அன்புக்குரிய மேற்குத் தொடர்ச்சி மலையை நியூட்ரினோ நாசப்படுத்தலாமா? படுத்தவிடலாமா?'' என்று இலக்கிய நயத்தோடு பேசினார்.

மறுநாள் 5-4-18 அன்று காவிரி உரிமைக்கான முழு அடைப்பை முன்னிட்டு நடைப்பயணத்திற்கு ஓய்வளித்துவிட்டு கலிங்கப்பட்டிக்கு விரைந்தார் வைகோ. அன்று, தன் தந்தையின் நினைவு தினத்தை பின்பற்றுவதற்காக வீட்டுக்குச் சென்றார். நாள் முழுதும் உண்ணாவிரதம், மௌனவிரதமிருந்தார்.

6-4-18 வெள்ளியன்று காலையில் போடியிலிருந்து, தருமத்துப்பட்டி, சிலமரத்துப்பட்டி, சிலமலை வழியாக நண்பகலில் ராசிங்கபுரத்தில் கூட்டம், ""நான் கட்சி வளர்ப்பதற்காக நடைப்பயணம் வரவில்லை. முல்லைப் பெரியாறு அணையைக் காத்ததுபோல மேற்குத் தொடர்ச்சி மலையைக் காப்பதற்காக புறப்பட்டிருக்கிறேன்; என்கூட குடிகாரர்கள் வரவேண்டாம். வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருப்போர் வரவேண்டாம். இரண்டு பிள்ளைகள் உள்ள வீடுகளிலிருந்து வீட்டிற்கு ஒருவர் என பின்தொடர்ந்தால், மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்தை முறியடித்து நமது இயற்கையை, வளத்தை காப்பாற்றி விட முடியும்...'' இன்றிரவு (6.4.18) பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் தங்குகிறது வைகோவின் நடைப்பயணம்.