/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vc.jpg)
கைதான துணைவேந்தர் கணபதி கொடுத்துள்ள முதல்கட்ட வாக்குமூலம் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை நோக்கி நீண்டிருப்பதால் பதற்றத்தில் இருக்கிறது உயர்கல்வித்துறை. துணைவேந்தர்களின் கண்ட்ரோல், வேந்தரான கவர்னர் கையில்தான் என்பதால் ராஜ்பவன் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, தமிழக அரசிலுள்ள முக்கியமான 34 துறைகளில், கோடிகளை கொட்டும் பணம் காய்ச்சி மரங்களாக 12 துறைகள் இருக்கின்றன. அதில் ஊழல்கள் பெருத்துப் போயிருப்பது உயர்கல்வித்துறைதான். கடந்த மாதம், "புரோக்கர்களின் பிடியில் உயர்கல்வித்துறை'ன்னு நக்கீரனில் எழுதப்பட்ட செய்தி உள்பட எல்லாவற்றையும் கவர்னர் புரோகித் அப்டேட்டாக வைத்திருக்கிறார். ஜனாதிபதியிடமே ரெகார்டுகளை ஒப்படைத்தார். அதுபற்றி ரகசிய விசாரணை நடக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vc1.jpg)
இதற்கு முன்புவரை கவர்னர் மாளிகையை கைக்குள் போட்டுக்கொண்டு துணைவேந்தர்கள் பலரும் கோடிகளை குவித்துவந்தனர். அவர்களுக்கு உதவியாக இருந்துவந்த ராஜ்பவன் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரையும் கடந்த வாரம்தான் கூண்டோடு மாற்றினார் கவர்னர். தற்போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்திருப்பதைத் தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவர்மீதும் வழக்குப்பதிவு செய்ய அரசுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்தடுத்து பல அதிரடிகள் நடக்கும்'' என சுட்டிக்காட்டினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vc2.jpg)
மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கணபதியிடம் கோவை அதிகாரிகள் கடுமையாக விசாரித்திருக்கிறார்கள். அப்போது, "லஞ்சம் கொடுத்துத்தான் இந்த பதவிக்கு வந்தேன்' என்பது உட்பட பல உண்மைகளை ஒப்புவித்துவிட்டார் கணபதி. "பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதில் பணியிடத்தின் தன்மையைப் பொறுத்து 10 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்பட்டது. இதில் நான் மட்டும் சம்பந்தப்படவில்லை. உயர்கல்வித்துறையின் செயலாளர் சுனில்பாலிவால் யோசனைப்படியே நடந்துகொண்டேன். பணியிடங்கள் நிரம்பியதும் மொத்தத்தொகை கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதத்தை புரோக்கர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்துவிடுவேன்' என முதல்கட்ட விசாரணையில் வாய் திறந்துள்ளார் கணபதி. "கவர்னர் அலுவலகத்திலிருந்தும் எங்களுக்கு சில உத்தரவுகள் வந்துள்ளதால் ஊழல்களுக்கு காரணமான உயரதிகாரிகள் தப்பிக்க முடியாது' என்கிறார்கள் அழுத்தமாக.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vc3.jpg)
கணபதியைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவாலை நோக்கி குற்றச்சாட்டுகள் நீள்வதால், இதுகுறித்து கோட்டையிலுள்ள உயரதிகாரிகளிடம் நாம் பேசினோம். ‘’""பால்வளத்துறையின் எம்.டி.யாக சுனில்பாலிவால் இருந்தபோது ஐ.பி.எஸ். அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், சுனில் சொல்வதையெல்லாம் கேட்டார். சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவிக்கான தேர்வில் வெறும் 3 மார்க் பெற்ற அகர்வாலின் மனைவிக்காக மதிப்பெண்களைத் திருத்தி அவருக்கு போஸ்டிங் போட்டுக்கொடுத்தவர் சுனில். அவரை மாற்ற வேண்டுமென துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முதல்வர் எடப்பாடியிடம் கடுமையாகப் பேசினார். இதையறிந்து, தினகரனின் வலதுகரமாக அப்போது இருந்த தளவாய்சுந்தரத்தின் மூலம் தினகரனை நெருங்கினார் சுனில். தினகரன் வார்த்தைகளுக்கு வலிமை இருந்த நேரம் அது. அதனால் உயர்கல்வித்துறைக்கு செக்ரட்டரியாக நியமிக்கப்பட்டார். அந்தத்துறையின் அமைச்சர் அன்பழகனோ, "எனது துறைக்கு சுனிலை நியமித்ததை மறுபரிசீலனை செய்யுங்கள்' என எடப்பாடியிடம் மன்றாடினார். தினகரனின் உத்தரவைச் சொல்லி அன்பழகனை சமாதானப்படுத்தினார் எடப்பாடி.
உயர்கல்வித்துறையில் 20 சதவீத ஊழல்கள் நடந்துவந்த நிலையில், தற்போது 90 சதவீத அளவுக்கு ஊழல்கள் வளர்ந்துள்ளன. அமைச்சர் அன்பழகனுக்கும் அதிகாரி சுனிலுக்கும் ஒத்துப்போவதே இல்லை. ஒவ்வொரு வருசமும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலுள்ள இடங்கள் முழுமையாக நிரம்பாததால், ஒவ்வொரு வருசமும் தனியார் கல்லூரிகள் தந்து வந்த லஞ்சத்தொகையில் பிரச்சனை எழுந்தது. ஒரு மாணவனுக்கு 3000 ரூபாய் தர வேண்டும் என சொல்ல, அதனை தனியார் கல்லூரிகள் ஏற்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தபட்சம் 2000 மாணவ-மாணவிகள் இருக்கின்றனர். அதன் எண்ணிக்கைக்கேற்ப கப்பம் கட்டி வருகின்றனர்.
அமைச்சருக்கும் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் லாபி சுனிலை காப்பாற்றியது. இப்படிப்பட்ட சூழலில், தற்போது துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சுனிலின் பெயர் சீரியஸாக அடிபடுவதால் அவரை துறையிலிருந்து இடத்தை மாற்றி, காத்திருப்போர் பட்டியலில் வைக்குமாறு ராஜ்பவனிலிருந்து உத்தரவு. அதன்படி விரைவில் கைது செய்யப்படலாம் என்கிறார்கள். இதனை உணர்ந்துள்ள சுனில், வழக்கம்போல ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் உதவியை நாட, அவரைக் காப்பாற்றும் முயற்சியில் குதித்துள்ளன வட இந்திய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் லாபி'' என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது பல மாதங்களுக்கு முன்பே குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நடவடிக்கை ஏதுமின்றி கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்ற கேள்வியையும் கல்வியாளர்கள் எழுப்புகிறார்கள். பல்கலைக்கழக பதவி நியமனங்களில் பெறப்படும் லஞ்சம் மேல்மட்டம் வரை பாயும் நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணை தொடரும்போது அமைச்சரும் சிக்கலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.
-சஞ்சய்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-12/vc1a.jpg)