ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு தடைகோரி 50 நாட்களுக்கு மேலாகப் போராடும் மக்களின் பங்கேற்பை தடை செய்ய ஆலோசிக்கிறது அரசாங்கம்.
தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக ஏப்ரல் முதல் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாஸன் நேரில் சென்றார்.
மரத்தடியில் குவிந்திருந்த பெண்கள் மத்தியில் அமர்ந்தார் கமல். ""பேசுவதற்கு மைக் இல்லையா?'' என்று கேட்டார். “""போராட்டத்தில் மைக்கை பயன்படுத்த அனுமதி இல்லை''’ என்று மக்கள் சொன்னதும், கமல் லேசாக அதிர்ந்து, மைக் இல்லாமலேயே பேசினார்.
""இங்கு நான் போட்டோவுக்காகவும், விளம்பரத்துக்காகவும் வந்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். சின்ன வயதிலிருந்தே எனக்கு போதுமான விளம்பரத்தை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம் பாதியில் முடிந்துவிடக்கூடாது. மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இதைக்காட்டிலுமா ஆதாரம் வேண்டும்?''’என்று கூறிய கமல், போலியோவால் பாதிக்கப்பட்ட மூன்று சிறு குழந்தைகளை தூக்கி காட்டினார். பிறகு தொடர்ந்து பேசினார்...
""உங்களுடைய வேதனை தெரிகிறது. ஸ்டெர்லைட் தரப்பில் ஆளுக்கு ரூ.5 கோடி வீதம் 120 பேருக்கு சுமார் 600 கோடி ரூபாய் கேட்டதாக கூறுகிறார்கள். பணம் கொடுத்து பழகக்கூடாது என்பதால் கொடுக்கவில்லையாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்''’என்று கமல் கூறியதுதான் தாமதம், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கொந்தளித்தார்கள். கமல் சொன்னதை மறுத்து குரல் எழுப்பினார்கள். கமல் சமாளிக்கப் பார்த்தாலும், போராட்டக்குழுவைச் சேர்ந்த வேல்ராஜ் எழுந்து, ""இதை எப்படிக் கூறுகிறீர்கள். நாங்கள் பணம் கேட்டதற்கான ஆதாரத்தை கேட்டீர்களா?''’என்று கமலிடம் வாக்குவாதம் செய்தார். உடனே, “""நீங்கள் என்னிடம் கூறியதை அப்படியே மக்களிடம் கூறுங்களேன்''’என்று விஷயத்தை மடைமாற்றிவிட்டார் கமல்.
இதையடுத்து பேசிய வேல்ராஜ்... ""இந்தப் போராட்டத்திற்கான ஆயத்த வேலைகளை 7 மாதத்திற்கு முன்பே செய்துவிட்டோம். எங்கள் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டிருப்பது கமல் வழியாக வெளியாகியிருக்கிறது. நாங்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் இருந்தால் வாங்கி வெளியிடுங்கள் அல்லது போராட்டத்தைக் கைவிடக்கோரி ஆலை நிர்வாகம் எங்களிடம் பேசியதை நாங்கள் ஆதாரமாக தரத் தயாராக இருக்கிறோம்''’ என்று ஆவேசமாக கூறினார்.
போராடும் மக்கள் பக்கம் நிற்பதை உறுதி செய்த கமல், கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பிய சிறுவனை தனக்கருகே அழைத்து முழக்கமிடச் செய்தார். சுமார் 20 நிமிடங்கள் கரைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் ஆஸ்துமா, கல்லடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கமலிடம் கொடுத்த மக்கள், “"இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள், நாங்கள் நோய்களோடுதான் போராடுகிறோம்'’என்றனர். பின்னர், ""எந்த நேரத்திலும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன். மக்கள் நீதி மய்யமும் ஆதரவாக இருக்கும்''’என்று உறுதியளித்துவிட்டுப் புறப்பட்டார் கமல்.
கமல் அங்கிருந்த சமயத்தில், தரையோடு தரையாக குழந்தைபோல அவரிடம் தவழ்ந்துவந்த 60 வயதைக் கடந்த மூதாட்டி காளியம்மாள், ""பிறப்பால் நான் ஊனம்னாலும் இந்த ஆலையால் இங்கே பிறக்கிற குழந்தைகளின் கால்கள் சூம்பியிருக்கு. என்னைப் போல யாருக்கும் இனி பாதிப்பு ஏற்படக்கூடாது''’என்று கூறியது நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.
கமலுடன் பேசிய பெண்களில் பசுபதி என்பவரிடம் கேட்டபோது,…""இந்த ஆலையால் பெரிய பாதிப்பு பெண்களுக்குத்தான். ஆலையின் புகையை சுவாசித்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாயிருச்சு. அதனால பல பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிட்டாங்க''’என்றார் அதிர்ச்சியுடன்.
பட்சிராஜன் என்பவரின் அனுபவம் வேறுவிதமாக இருந்தது.…""எனக்கு கல்யாணமாகி மனைவிக்கு முதல்முறையா கருத்தரிச்சுச்சு. ஆனால், அந்தக் கரு சில நாட்களில் சிதைஞ்சிருச்சு. ஆலை நச்சுதான் காரணம்னு டாக்டர் சொன்னார். அதை எழுதித் தரும்படி கேட்டபோது மறுத்திட்டாரு''’என்கிறார்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போர் குறித்து க்யூ பிரிவு உளவு அமைப்பினர் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். இந்த நிலையில்தான், வெடிகுண்டாக மாறி ஆலையைத் தகர்ப்போம் என பொருள்படும்படி பேசியதாக போராட்டக்குழுவில் உள்ள பேராசிரியை பாத்திமா பாபு, சம்சுபக்கி ஆகியோர் மீது வழக்குகளை பதிவு செய்து போராட்டத்தை தடைசெய்ய நெருக்கடி கொடுக்கிறது காவல்துறை.
-பரமசிவன், நாகேந்திரன்
படங்கள்: ராம்குமார்
----------------------------------------------------------------------
சென்னை முதல் அமெரிக்கா வரை!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் தொடங்கி சென்னை வரை போராட்டங்கள் விறுவிறுப்படைந்துள்ளன. சென்னையில் "தேடல்' இயக்கமும் தூத்துக்குடி சென்னைவாழ் மக்களும் இணைந்து நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற "தேடல்' இயக்கத்தின் செயலாளர் சுகன்யா கூறுகையில் ""ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து நிரந்தரமாக மூடவேண்டும். அதேபோல தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட நிலத்தை புதுப்பித்து, மீண்டும் அவர்களிடமே கொடுக்கவேண்டும்'' என்றார் ஆவேசமாக.
-அ.அருண்பாண்டியன்
படம்: ஸ்டாலின்