முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் கடலூர் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத்துக்கு எதிராக அதே அணியை சேர்ந்த எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழித்தேவன், சிதம்பரம் சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதில் கலைச்செல்வன், சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நெருக்கடி தாங்காமல் தினகரன் அணிக்கு தாவிவிட்டார்.

இது ஒருபுறமிருக்க, 2011-ல் சம்பத்தால் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு கொண்டுவரப்பட்டவர் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன்... மாவட்டத் தலைவராகவும் ஆக்கப்பட்டார்.

minister-sampath

கடந்த 10-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடுவதுபற்றி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாரதி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. அதில் அவைத்தலைவர் அய்யப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத் அந்தக் கூட்டத்தை நடத்தி, புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கினார். அதேசமயம் அடுத்த நாள் 11-ஆம் தேதி அமைச்சர் சம்பத் கூட்டம் நடத்திய அதே ஹோட்டலில் கூட்டத்தை கூட்டிய அய்யப்பன் கடலூர் நகராட்சியிலுள்ள 45 வார்டுகளின் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் உற்சாக ‘கரன்சிகளையும் வழங்கியுள்ளார்.

அடுத்ததாக 12-ஆம் தேதி கடலூர் வடக்கு ஒன்றிய பகுதிகளுக்கு படிவம் வழங்கும் நிகழ்ச்சி ரெட்டிச்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது..

அப்போது எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் மண்டபத்துக்கு வந்தனர். அப்போது சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும், அய்யப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்ததையடுத்து சம்பத்தின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisment

ministersampath

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன்… இப்படி தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையில் இறங்கியுள்ளதற்குக் காரணம், கடலூர் தொகுதியில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து, அதை வைத்து எப்படியாவது எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிட வேண்டும் என்பதுதானாம். அதற்காகத்தான் உறுப்பினர் படிவங்களுடன் உற்சாக ’கரன்சிகளையும் வார்டு, கிளை நிர்வாகிகளுக்கு தாராளமாய் வழங்கி வருகிறாராம். இது தெரிந்துதான் அமைச்சர் சம்பத் ஆங்காங்கே முட்டுக்கட்டை போட்டு அய்யப்பனின் முயற்சியை தடுக்க நினைக்கிறாராம்.

இதுகுறித்து அய்யப்பனிடம் பேசியபோது, ""நான் கட்சியை வளர்க்கத்தான் வேலை செய்கிறேன். எனது சொந்த பணத்தைத்தான் கட்சிக்காக செலவு செய்கிறேன். என்னுடைய அணுகுமுறை தொண்டர்களுக்கு பிடித்துள்ளதால் என்னுடன் வருகிறார்கள். அவர் (சம்பத்) பக்கம் தொண்டர்களும் இல்லை, நிர்வாகிகளும் இல்லை. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள், நீதியும் எங்கள் பக்கம் இருக்கிறது'' என்றார்.

கடலூர் அய்யப்பனை மட்டுமல்ல, பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தையும் வளர விடாமல் அமைச்சர் தடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 10-ஆம் தேதி நடந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டத்தின் மற்றொரு எம்.எல்.ஏ.வான சத்யாவுக்கு அழைப்பு இல்லையாம்.

""கட்சி எம்.எல்.ஏ. என்று அவர் நினைப்பதேயில்லை. ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தொகுதி என்றுதான் பெயர். ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. தொகுதியில் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் கூட நிறைவேறுவதில்லை. எல்லாவற்றிற்கும் அமைச்சர் முட்டுக்கட்டை போடுகிறார். நான் எம்.எல்.ஏ. என் கணவர் நகர்மன்ற முன்னாள் தலைவர். எங்களில் யாருக்கும் அழைப்பில்லை. இப்படி வேண்டுமென்றே கட்சிக்காரர்களைப் புறக்கணிக்கிறார். தான் மட்டும்தான் கட்சி, தன்னை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே கட்சிக்காரர்கள் என நினைக்கிறார். 2018-ஆம் ஆண்டுக்கான காலண்டரில் இணை ஒருங்கிணைப்பாளருமான முதலமைச்சர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் படங்கள் இல்லை. அவர் யாருக்கும் உண்மையாகவும் இல்லை. உண்மையான கட்சியினரை உதாசீனப்படுத்துகிறார்'' என குமுறுகிறார் சத்யா.

கட்சியினரின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிய அமைச்சர் எம்.சி.சம்பத்தை பலமுறை தொடர்பு கொண்டும் தொடர்பு கிடைக்கவேயில்லை.

-சுந்தரபாண்டியன்