டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், PhD.,
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்கள்தான் மாபெரும் கனிமவளம் கொண்டவை. ஒன்று, ஆஸ்திரேலியாவின் மேற்கு எல்லை மாநிலமான மேற்கு ஆஸ்திரேலியா. இரண்டாவது, வடகிழக்கு எல்லை மாநிலமான குயின்ஸ்லாந்து.
இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானி, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள "கார்மிக்கேல்'’என்ற இடத்தில் தொடங்கத் திட்டமிட்டார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களையும் செலவிட்டார்.
இந்தச் சுரங்கம் 447 சதுர கி.மீ. பரப்பில் அமையவுள்ளது. இங்குள்ள நிலக்கரி அதிக சாம்பல் கொண்டது. உயர் தரமல்ல. இச்சுரங்கத்தின் நடுவே கார்மிக்கேல் என்ற ஆறு ஓடுகிறது. ஆண்டொன்றுக்கு இந்நிலக்கரிச் சுரங்கம் 1,200 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சும். மீண்டும் நீர்ப்படுகைகளுக்குள் திருப்பிச் செலுத்தவேண்டிய நீர்போக, 60 ஆண்டுகளில், மொத்தம் 29,700 கோடி லிட்டர் அதாவது 10.5 டி.எம்.சி நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.
கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் அபட் பாய்ன்ட் துறைமுகம் உள்ள இடத்திற்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 475 கி.மீ. ஏற்கெனவே உள்ள ரயில் பாதையுடன் சுரங்கத்தை இணைக்க புதிதாக 189 கி.மீ. தூரத்திற்கு ரயில்பாதை போடப்பட வேண்டும்.
வேலை வாய்ப்பு:
இந்த நிலக்கரிச் சுரங்கத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏறத்தாழ 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அதனால், குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கமும், ஆஸ்திரேலிய மத்திய அரசும் அதானிக்கு ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. இடையில், ஆஸ்திரேலியாவிற்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் குழுவிலும் அதானி வந்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்புறச்சூழல் போராளிகள், அதானியின் இந்த நிலக்கரிச் சுரங்கத்தால் சுற்றுப்புறச்சூழல் கெட்டுவிடும்; நிலத்தடிநீர் மாசுபடும்; அது மட்டுமல்லாது, உலகின் மிகஅரிய, பாதுகாக்கப்பட வேண்டிய "தி கிரேட் பேரியர் ரீஃப்' எனப்படும் பவளப்பாறைகளுக்குப் பேராபத்து ஏற்படப்போகிறது என்பதனால் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகத்தின் நெடுவாசலில் எதற்காகப் போராட்டம் நடைபெறுகிறதோ அதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன, நடைபெற்று வருகின்றன. ஆனாலும், பொருளாதார நன்மை கருதியும், 10,000 வேலை வாய்ப்புகளைக் கருத்தில்கொண்டும், மாநில-மத்திய அரசுகள் அதானிக்கு சுரங்க உரிமையை எப்படியும் வழங்க வேண்டும் என்று முனைப்பாகச் செயல்பட்டன.
அரசு ஆதரவு:
2010-ல் கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கம் பல பொருளாதார முன்னேற்றங்களை குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குத் தரும் என்ற நம்பிக்கையில் இந்த நிலக்கரிச் சுரங்கம் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப் பட்டன. சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அறிவியல்ரீதியான பல எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன. இறுதியில், 08-05-2014-ல் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம் 190 கட்டுப்பாடுகளை விதித்து இந்தச் சுரங்கத்திற்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில், இந்தத் திட்டத்தில், 16.5 பில்லியன் டாலர்கள், அதாவது 82,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அதானி குழுமம் தெரிவித்தது. இந்த சுரங்கத்தின் ஆயுட்காலம் அறுபது ஆண்டுகள். இந்த 60 ஆண்டுகளில், 22 பில்லியன் டாலர்களை (1,10,000 கோடி ரூபாய்) அதானி குழுமம் சுரங்க வரியாகவும் மற்ற வரிகளாகவும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்தும்; இந்தப் பணத்தின் மூலம் கல்வி, மருத்துவம், கட்டமைப்பு போன்ற மக்கள் நலவாழ்வுப் பணிகளை அரசு மிகவும் திறம்படச் செய்யலாம் என்றெல்லாம் அதானி குழுமம் அள்ளிவிட்டது.
கார்மிக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தின் சுரங்க உரிமை, ஆஸ்திரேலிய மைய அரசால் 29-7-2014-ல் 39 கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நரேந்திரமோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நாள் 26-05-2014.
இந்த உரிமையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில், சுரங்க உரிமை வழங்கப்பட்டதை தொழில்நுட்ப காரணங்களுக்காக நீதிமன்றம் ரத்து செய்தது. பிறகு ஒரு வழியாக சுரங்க உரிமம் வழங்கப்பட்டது.
முதல்வரின் இல்லற வாழ்வில் சிக்கல்:
ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண், கட்சித் தலைவராகப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானது குயின்ஸ்லாந்து மாநிலத்தில்தான். அம்முதல்வரின் பெயர் அனஸ்டீஷியா பலாஷே. அதானி சுரங்கம் செயல்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். இவரைக் கௌதம்அதானி சிலமுறை சந்தித்திருக்கிறார்.
அனஸ்டீஷியாவின் துணைவர் ஷான் ட்ராஷ். இவர் ‘ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்’ என்ற தொழில்நுட்ப, பொருளாதார ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் அரசு உதவிக்கோ அல்லது கடனுக்கோ விண்ணப்பிக்கும்பொழுது கடன் விண்ணப்பங்களைத் தவறில்லாமலும், தரக்கூடிய வகையிலும் தயாரித்துத் தருவதற்கு இப்படிப்பட்ட ஆலோசனை நிறுவனங்களைத்தான் பயன்படுத்துவார்கள்.
அதானி குழுமம், தங்களுடைய நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்காக, ஆஸ்திரேலிய அரசிடம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்தக் கடன் விண்ணப்பங்களைத் தயாரிப்பதற்காக, குயின்ஸ்லாந்து முதல்வரின் வாழ்க்கைத் துணைவர் பணியாற்றுகின்ற ப்ரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தை நியமித்தது அதானி குழுமம். அங்கேதான் அதானிக்கு முதல் சிக்கல் தொடங்கியது.
குயின்ஸ்லாந்து தேர்தலும் அதானியும்:
சென்ற ஆண்டு, குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள், முதல்வர் அனஸ்டீஷியா, அதானிக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்... ஏனென்றால், வடஆஸ்திரேலியக் கட்டமைப்பு நிதியிலிருந்து ஒரு பில்லியன் டாலர் (5,000 கோடி ரூபாய்) கடனுக்கு அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்தைத் தயாரித்த நிறுவனத்தில் முதல்வரின் துணைவர் பணியாற்றுகிறார். ஆகவே, அதானி குழுமத்திற்குச் சாதகமாகச் செயல்பட முதல்வருக்கு அவருடைய வாழ்க்கைத் துணைவர் அழுத்தம் தரலாம். அது முறையற்ற செயல் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரத்தில் முதல்வருக்கு எதிராகப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டன.
அதனை முதல்வர் அனஸ்டீஷியா வன்மையாக மறுத்தார். "நானும், என் துணைவரும் சட்டப் படித்தான் செயல்பட்டிருக்கிறோம்' என்றார். இப்பொழுது, என்ன காரணமோ தெரியவில்லை, "நானும் என் வாழ்க்கைத் துணைவரும் முறையாக, மனமொத்து பிரிந்துவிட்டோம்'’என்று அனஸ்டீஷியா ஒரு மாதத்திற்கு முன் அறிவித்துவிட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தி. மணவாழ்க்கை முறிவிற்கு முதல்படியாக அமைவது மிகச்சிறிய மன வேறுபாடோ அல்லது நம்பிக்கையின்மையோதான்.
அதானிக்கு முதல் அடி:
குயின்ஸ்லாந்து முதல்வரின் வாழ்க்கைத் துணைவர் பணியாற்றும் நிறுவனத்திற்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தவுடன், முதலில் முதல்வர், “"என் துணைவருக்கும் அதானி குழுமத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை'’என்று அறிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகமானது. அதனால், முதல்வர் அனஸ்டீஷியா தன்னுடைய நேர்மையை, அதுவும் தேர்தல் நேரத்தில், நிரூபிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி நிதியை ஆஸ்திரேலிய மைய அரசுதான் ஒதுக்குகிறது. ஆனாலும், குயின்ஸ்லாந்து மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மையஅரசு எந்த நிறுவனத்திற்கும், அந்த மாநிலத்தின் வளர்ச்சி நிதியிலிருந்து கடன் வழங்க முடியாது. நம்முடைய இந்தியத் திருநாட்டின் நிலையை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், "அதானி குழுமம் விண்ணப்பித்திருந்த ஒரு பில்லியன் டாலர் கடனை அந்நிறுவனத்திற்கு வழங்க குயின்ஸ்லாந்து மாநில அரசு தடை விதிக்கிறது' என்று முதல்வர் அனஸ்டீஷியா உத்தரவிட்டுவிட்டார். அதனால், அதானி குழுமத்திற்குக் கிடைக்க வேண்டிய ஒரு பில்லியன் டாலர் (5,000 கோடி ரூபாய்) கடன் கிடைக்காமல் போனது.
அதானி குழுமத்தின் தற்புகழ்ச்சி:
அதானி குழுமம், தொடக்கத்திலிருந்தே "எந்த அரசுப் பொருள் உதவியும் இல்லாமல், சுய முதலீட்டிலேயே நாங்கள் இந்த சுரங்கத்தை நடத்துவோம்' என்றுதான் கூறியது. இந்தியாவில் வாழ்பவர்களுக்கும், வாழ்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு மாநிலத்தவரின் சொற்களும், செயல்பாடுகளும் ஓரளவிற்குப் புரியும். ஆனால், ஆஸ்திரேலியர்களுக்குப் புரியாதே! ஆகவே அவர்கள் அதானி சொன்னதை நம்பினார்கள். ஆனால், இதுவரையிலும் அதானி குழுமம் 16.5 பில்லியன் (82,500 கோடி ரூபாய்) மூலதனத்தை எப்படிக் கொண்டுவரப்போகிறது, எந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்கப்போகின்றன என்ற எந்த விவரத்தையும் தரவில்லை.
இந்தியாவை ஆள்பவர்களின் துணையுடன் அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நடத்தும் திருவிளையாடல்கள் ஏராளம்.