பா.இரஞ்சித் மீண்டும் தன் ஹோம் கிரவுண்டுக்கு வந்துவிட்டார், அடித்து ஆடியுள்ளார் என்று சொல்கிறார்கள் "சார்பட்டா பரம்பரை' படம் பார்த்தவர்கள். "அட்டகத்தி', "மெட்ராஸ்' படங்களின் மூலம் ஒரு புதிய வாழ்வை, வெகுஜன சினிமாக்களில் சொல்லப்படாத அல்லது சரியாய் சொல்லப்படாத கதைகளை, போராட்டத்தை சரியாக சொன்னதன் மூலம் ஒரு பெரும் நம்பிக்கையை உருவாக்கியதோடு ஒரு புதிய அலையையும் ஏற்படுத்தியவர் இரஞ்சித். அதன் பிறகு வந்த "கபாலி', "காலா' படங்களில் திரைப்படத்தின் தேவையைத் தாண்டி, ரஜினியின் இமேஜை தாண்டி இரஞ்சித்தின் அரசியல் இடம்பெற்றது. அந்தப் படங்களை விவாதத்திற்கு உள்ளாக்கியதோடு, படைப்பு ரீதியாகவும் பாதித்தது. மலேசியா, மும்பை என்று சுற்றிவந்த இரஞ்சித் தற்போது "சார்பட்டா பரம்பரை' மூலம் மீண்டும் வடசென்னைக்கு வந்துள்ளார். இந்தமுறை வடசென்னையில் பிரபலமாக இருந்த "பாக்சிங்' போட்டிகளின் அடிப்படையில் 1970-களில் நடக்கும் கதையுடன் களமிறங்கியுள்ளார்.
"ரோசமான ஆங்கில குத்துச்சண்டை' என்ற கேப்சனில் இருந்தே இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமாக மட்டும் இருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி ஆழமான ஆய்வு, நிஜமான வாழ்வியல், அந்த காலகட்டத்தின் அரசியல், வியக்கவைக்கும் கலை வேலைப்பாடுகள், மறக்க முடியாத பாத்திரங்கள் என சேர்த்து அந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் ரஞ்சித்.
1975-ல் இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டில் நடக்கும் கதையாகத் தொடங்குகிறது படம். ஆங்கிலேயர்கள் பழகிக் கொடுத்துவிட்டுப் போன குத்துச்சண்டை விளையாட்டில் முக்கிய இரு அணிகளாகத் திகழும் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை, இரண்டுக் கும் இடையிலான போட்டியில் சார்பட்டா பரம்பரையின் பயிற்சியாளரான ரங்கன் வாத்தியார் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெரிய சவாலை நிறைவேற்ற கபிலன் களமிறங்குகிறார். அதற்கு ஏற்படும் தடைகள், இடையில் குறுக்கிடும் தமிழக அரசியல் சூழ்நிலை, திசைமாறும் கபிலன் வாழ்க்கை என ஒரு சுவாரசியமான படமாக அமைந்திருக்கிறது "சார்பட்டா பரம்பரை'.
"பரம்பரை' என்றதும் நமக்கு ஒரு குடும்பத்தின் வாரிசுகள் அல்லது உறவுகள் என்று தோன்றுகிறது அல்லவா? ஆனால், அந்தப் பரம்பரைகள் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களையும் கொண்ட, பாக்சிங் விளையாட்டுக்காக ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்டவர்களால் உருவான பரம்பரைகள். பரம்பரைகளுக்கு இடையிலான போட்டி, ஒரே பரம்பரைக்குள்ளும் நிலவும் வன்மம், சாதிய வெறுப்பு, பரம்பரையின் மீது சேர்க்கப்படும் மான உணர்வு, விளையாட்டில் அரசியல் கலப்பு, குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் விளையாட்டு வீரர்கள் என பாக்சிங் ஸ்டோரிக்கு மிக சுவாரசியமான பின்னணி சேர்த்ததிலும் கபிலன், ரங்கன் வாத்தியார், மாரியம்மா, டாடி, டான்சிங் ரோஸ் என மிக மிக சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கியதிலுமே பாதி வெற்றியை உறுதி செய்துவிட்டது பா.ரஞ்சித் - தமிழ்பிரபா கதைக்கூட்டணி. ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன், ஜான் விஜய் என படத்தின் நடிகர்கள் ஒவ் வொருவரும் பெரும் பலம். படம் முடிந்தும் பாத்திரங்கள் பெயர்களுடன் நினைவில் நிற்கும் அளவுக்கு சிறப்பான உருவாக்கம் மற்றும் நடிப்பு அமைந் திருக்கிறது. குத்துச் சண்டை நடக்கும் அரங்கம், கதை நடக்கும் களம் உள் ளிட்டவற்றை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளது கலை இயக்குனர் ராமலிங்கத்தின் குழு. ஒளிப்பதிவாளர் முரளி, இசையமைப் பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் எப்போதும் ரஞ்சித் படங்களுக்கு பலம் சேர்ப்ப வர்கள். சார்பட்டாவிலும் அது தொடர்கிறது.
இரஞ்சித் படத்தில் அரசியல் இல்லாமலா? எமெர்ஜென்சி காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்படும் கட்டம் படத்தில் வருகிறது.
ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி சொல்கிறார், "நான் யாருக்கும் அஞ்சாத கழகத்தின் உடன்பிறப்பு. எங்கயும் தப்பிக்கமாட்டேன், இங்கேதான் இருப்பேன்'. தி.மு.க. எமெர்ஜென்சி காலத்தில் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு சாம்பிள் இது. தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்களின் எதிரெதிர் மனநிலையும் கூட படத்தில் பதிவாகியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பாக்சிங்குக்கு வரும் வீரன் எப்படி ஆதிக்க மனநிலை கொண்டவர்களால் தடுக்கப்படுகிறான் என்பதும் குற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறான் என்பதும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. ரஞ்சித் படங்களில் பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதம் முக்கியமானது. நாயகி மாரியம்மாவாக வரும் துஷாரா, நாயகன் கபிலனின் தாயாக வரும் அனுபமா, இருவரின் பாத்திரங்களும் மிக தைரியமான, நாயகனை சார்ந்து மட்டுமே வாழாத உறுதியான பெண்கள். அதிலும் நாயகி பாத்திரம் திருமணம் முடிந்ததும் போடும் ஆட்டம், முழு உற்சாகம். இரண்டாம் பாதியின் நீளமும் தொய்வும் படத்தின் குறைகள். அதையெல்லாம் தாண்டி கெலிக்கிறது "சார்பட்டா பரம்பரை'.