"நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்'’’"முத்து' படத்தில் இப்படி ரஜினி வசனம் பேசியதிலிருந்து, அவரது ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும், அரசியல் என்ட்ரி குறித்து விவாதங்கள் நடக்கும். ஆனால் இப்போது அரசியல் என்ட்ரி ஆன பின், ரிலீஸ் ஆகியிருக்கும் "காலா' குறித்து சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ரஜினி பட ரிலீஸுக்கு முன்பாக மக்களிடம் ஏற்படும் எதிர்பார்ப்பு ஃபீவர், "காலா' ரிலீசின்போது அந்தளவு இல்லை. "காலா'விற்கு நாலாபக்கமும் எதிர்ப்பு கிளம்பியதால், முதல் நான்கு நாட்கள் மட்டுமே ஹவுஸ்ஃபுல்லானது, அதுவும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் மட்டும். எல்லாமே தூத்துக்குடி விசிட்டில் ரஜினி பேசியதன் எஃபெக்ட். ஆனால் "காலா'வில் ரஜினி பேசியிருப்பதோ அதற்கு நேரெதிரான எஃபெக்ட்.
"கபாலி'யில் ரஜினியை முதிர்ச்சியான நடிப்பால் முற்றிலும் வேறொரு தளத்தில் பயணிக்க வைத்த டைரக்டர் பா.இரஞ்சித், "காலா' மூலம் தன்னுடன் ரஜினியை பயணிக்க வைத்து, தனது எழுத்து, எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார், அதுவும் முதன்முறையாக ரஜினியை நெல்லைத் தமிழில் பேச வைத்து.
அடித்தட்டு மக்கள் வசிக்கும் மும்பை- தாராவியை தூய்மைப்படுத்துகிறோம் என்கிற பேரில் அந்த மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தோடு அரசியல்வாதி நுழைகிறான். பரிதவிக்கும் மக்களுக்காக களம் இறங்குகிறான் கரிகாலன் என்ற காலா. மக்களின் நிலத்தை அபகரிக்க நினைப்பவர்களை ஓடஓட விரட்டுகிறான். ""புல்டோசரை வச்சு எங்க டோபிகானாவை இடிக்கிறியா, இரு வர்றேன்'' என சொல்லியபடியே இளைஞன் ஒருவன் ஓடுகிறான். சீனை கட் பண்ணினால், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் ரஜினி, மிடில் ஸ்டம்ப் எகிற, போல்டு ஆகிறார். இப்படித்தான் ரஜினியின் அறிமுகக் காட்சியே ஆரம்பமாகிறது. ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ், பழைய காதலியாக ஹூமா குரோஷி, வில்லனாக நானா படேகர், ரஜினியின் மச்சானாக டைரக்டர் சமுத்திரக்கனி, மகன்களாக திலீபன், நித்தீஷ், சிறிய வில்லன்களாக சம்பத்ராஜ், ஷாயாஜி சிண்டே, ரவிகாலா, இவர்களுடன் ரஜினியின் பேரன், பேத்திகளாக வரும் குழந்தை நட்சத்திரங்கள், இவர்களுடன் ஆயிரக்கணக்கான துணை நடிகர்-நடிகைகள் என படம் முழுக்க மனிதர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
நிலமற்ற ஏழைகளுக்கும் கண்ணில்பட்டதையெல்லாம் காசாக்க நினைக்கும் முதலாளிகளுக்குமிடையே நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் பற்றி, தான் பேச நினைத்ததை "காலா' ரஜினி மூலம் பேசி ஜெயித்திருக்கிறார் டைரக்டர் ரஞ்சித். அதிலும் படத்தின் முதல் பாதியில், கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை, தங்களின் மண்ணுரிமை பற்றி, பக்கம் பக்கமாக பேசியிருப்பது, பார்வையாளனுக்கும் ரஜினி ரசிகனுக்கும் வேண்டுமானால் சலிப்பாக இருக்கலாம். ஆனால் ரஞ்சித்தும் ரஜினியும் அவ்வளவு ரசனையோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பின்தான் படத்தில் வேகமும் விவேகமும் செம ஸ்பீடாக பயணிக்கிறது. ரஜினியின் நடிப்பு மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் விசாரணையின்போது மப்பில் இருக்கும் ரஜினி, ""ஆமா இவரு யாரு'' என மந்திரியைப் பார்த்து திரும்பத் திரும்பக் கேட்பது, மனைவி, மகன் கொல்லப்பட்ட பின், நானா படேகர் வீட்டுக்குப் போய், அவர் எதிரே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தபடி, ""நிலம் உனக்கு அதிகாரம், ஆனா எங்களுக்கு உரிமை, கருப்பு உன்னையப் பொறுத்தவரை அழுக்கு, ஆனா அதுதான் உழைப்பின் நிறம்'' என தனக்கேயுரிய மேனரிசத்துடன் அழுத்தமாக ரஜினி பேசும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
""நீ கடவுள் பேரைச் சொல்லி, நிலத்தை அபகரிக்க நினைச்சா, நான் அந்தக் கடவுளையே எதிர்ப்பேன். மக்களுக்கு அநியாயம் பண்றவனைத் தட்டிக் கேட்கும் ஒருத்தனை ரவுடின்னு ஈஸியா சொல்லிடுறாங்க'' என அதிரடியாகவும் பேசுகிறார் ரஜினி.
வசனம் மட்டுமல்ல, பாடல்கள் அத்தனையும் உரிமை மீட்பு கீதங்கள்தான். இசை அமைத்த சந்தோஷ் நாராயணன், தாராவியை அச்சு அசலாக செட் போட்ட த.இராமலிங்கம், கேமராமேன் முரளி. ஜி ஆகிய அத்தனை பேரும் ரஞ்சித்தின் மனசாட்சி அறிந்து வேலை பார்த்திருக்கிறார்கள்.
படத்தில் ரஜினி வரும் காட்சிகள் பலவற்றில் புத்தர், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், சில காட்சிகளில் சிலையாக காமராஜர், அதே போல் ரஜினியின் டேபிளில் "ராவண காவியம்' புத்தகம் இப்படி ரஞ்சித்தின் டச்சிங் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் "கபாலி' போலவே, "காலா'விலும் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.
க்ளைமாக்ஸில் ராமனுக்கும் ராவணனுக்கும் நடக்கும் யுத்தத்தை கதாகாலட்சேபமாக விவரித்து, ரஜினியின் மக்களுக்கும் நானாபடேகர் ஆட்களுக்கும் நடக்கும் சண்டையை காட்சிப்படுத்தி, ராவணனுக்கு இறப்பே இல்லை எனச் சொல்லி, சங்பரிவாரங்களின் காவியை அடையாளம் காட்டி, கருப்பு, சிவப்பு, நீலப் பொடிகளைத் தூவி, நிலம் எங்கள் உரிமை என்பதை அழுத்தமாகவே பதிவு செய்து, ரஜினி மூலம் தனது அரசியல் கொடியை வெற்றிகரமாக பறக்கவிட்டிருக்கிறார் டைரக்டர் பா.இரஞ்சித்.
ரஞ்சித் படத்தில் ரஜினி. இதுதான் "காலா'.
-ஈ.பா.பரமேஷ்வரன்
நிலத்தைப் பறித்து அடிமைகளாக்கும் அதிகாரம்!’
-டைரக்டர் பா.இரஞ்சித் பேட்டி!
நக்கீரன்: "காலா' படத்தில் சொல்லியிருப்பது போல், சேரி மக்களுக்கு வேறு இடம் கொடுப்பது குறித்து உங்களின் கருத்து?
ரஞ்சித்: நில உரிமைக்கான கிளர்ச்சி, இந்தியா முழுவதும் நடக்கத்தான் செய்கிறது- அதுவும் பெரு நகரங்களில். ஏன்னா சேரி மக்கள் அதிகம் வசிப்பது பெரிய நகரங்களில்தான். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட்டு கொடுக்க வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது, பட்டா உள்ளவர்களையும் கூட திடீரென காலி செய்து எங்கோ ஒதுக்குப்புறமாக ஒதுக்கிவிடுகிறார்கள். எதற்காக நம்மை காலி செய்யச் சொன்னார்கள் என அந்த மக்களுக்கே தெரியாது. இதுதான் இப்போதைய நிலைமை.
நக்கீரன்: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தனியார்களுக்கும் சாதகமாக இதுபோன்ற வெளியேற்றுதல் நடக்கிறதாக கருதுகிறீர்களா?
ரஞ்சித்: கண்டிப்பா, அதிலும் அரசாங்கத்தின் துணையுடன்தான் நடக்கிறது. அப்பல்லோ மாதிரியான ஃபைவ் ஸ்டார் ஆஸ்பத்திரி அருகே வசிக்கும் சேரி மக்களை நிம்மதியாக இருக்கவிடுவார்களா? ஏன்னா வெளிநாட்ல இருந்து ட்ரீட்மெண்டுக்கு வர்றவன், இந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துலேயே குடிசை இருந்தா, அவன் வேறுமாதிரியான மனநிலைக்குத் தள்ளப்படுவான். ஒரு நாளைக்கு கோடிக்கணக்குல வருமானம் பார்க்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் சும்மா இருக்குமா? அரசாங்கத்தின் ஆதரவோடு அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுகிறது.
நக்கீரன்: சேரி மக்களை நிலமற்றவர்களாக்குவதன் நோக்கம்தான் என்ன?
ரஞ்சித்: வேறென்ன நோக்கம், அடிமைகளாக்குவதுதான் நோக்கம். முதலாளிகளிடமே ஒட்டுமொத்த நிலமும் இருந்தால்தான், சேரி மக்களெல்லாம் அவர்களை அண்டியே வாழ வேண்டிய சூழல் வரும். காலம் முழுக்க அம்மக்களை அடிமைகளாக வைத்திருப்பதே முதலாளிகளின் நோக்கம். இது கிராமங்களின் சேரி நிலை என்றால், நகரங்களிலோ சேரிகள் அழுக்காக இருக்கு, அக்யூஸ்டுகள் நிறைந்திருக்கிறார்கள் இப்படியெல்லாம் கதைவிட்டு, காலி செய்வதும் நடக்கிறது.
சென்னையில் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தபோது, வெளிநாட்டுக்காரன் முகம் சுளிப்பான் என்பதற்காக சேரிகளை அப்புறப்படுத்தினர். நம்ம நாட்ல மட்டும்தான்னு நினைச்சுராதீங்க, பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து நடந்தபோதும் இந்தக் கொடுமை நடக்கத்தான் செஞ்சது. சேரி மக்களுக்கும் நிலத்திற்குமான இடைவெளியை உருவாக்கி, நிலமற்ற மக்களாக, அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் வேலையாக இருக்கிறது.
சந்திப்பு: அ.அருண்பாண்டியன்
படம்: ஸ்டாலின்