லவர நெருப்பு பரவுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது தேனி மாவட்டம்.

துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊருக்கு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் கலவரச் சூழல் உருவாகியிருப்பதைக் கேள்விப்பட்டு பின்னணி அறியச் சென்றோம்.

Advertisment

incident

ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஆதிதிராவிட பெண் வன்னியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை வழக்கம்போல் ரைஸ்மில் வழியாக கொண்டு சென்றனர். அந்தப் பாதையில் திருமணத்திற்காக கொட்டகை போட்டிருந்தனர். எனவே, பள்ளிவாசல், காய்கறி மார்க்கெட் வழியாக கொண்டு சென்றனர். அப்போது, இஸ்லாமியர் சிலர் இறுதி ஊர்வலமாக உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகி வன்னியம்மாள் உடலை சுடுகாட்டில் அடக்கமும் செய்துவிட்டனர்.

ஆனால் இரண்டாம் நாளே, பிரச்சனை மதக்கலவரமாக மாறி இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கியதுடன் மட்டுமல்லாமல் கார், டூவீலர்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து பொம்மிநாயக்கன்பட்டி கலவர பூமியாக மாறியது. அதைத்தொடர்ந்து, எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கலவரத்தை அடக்கி, 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கிராமம் இப்போது போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவும் கிராமத்தை பார்வையிட்டு, ஆர்.டி.ஓ. தலைமையில் சமாதானக் குழு அமைத்திருக்கிறார். அந்தக் குழு இருதரப்பினருடனும் சமாதானப் பேச்சு நடத்திவருகிறது.

Advertisment

சமாதானமாக வாழ்ந்தவர்கள் எப்படி திடீரென மோதிக் கொண்டனர் என்று நாம் விசாரணையில் இறங்கினோம்.

முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆதிதிராவிடப் பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். இதுதொடர்பாக இருவரையும் பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் கேட்கவில்லை. இந்த நிலையில்தான் வன்னியம்மாள் இறுதி ஊர்வலத்தில் அந்தப் பெண் சென்றதைப் பார்த்துத்தான் இஸ்லாமிய குடும்பத்தினர் சத்தம் போட்டிருக்கிறார்கள். அதில்தான் பிரச்சனையே முளைத்திருக்கிறது.

அதுபோல, கடந்த மாதம் வி.சி.க. தலைவர் திருமாவளவனின் பிளக்ஸ் போர்டில் முஸ்லிம் பகுதியில் வசிக்கும் சிலர் சாணம் அடித்ததாக கூறப்படுகிறது. அது ஆதிதிராவிடர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றுடன் கோவில் இடங்களை இஸ்லாமியர் ஆக்கிரமித்து இருப்பதாக ஒரு தகவலை ஆதிதிராவிட மக்கள் மத்தியில் சிலர் பரப்பி உள்ளனர். எல்லாம் சேர்ந்துதான் கலவரம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

incident

ஆதிதிராவிடர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் 12 ஆம் தேதி திருமாவளவன் பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். இருதரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். ""சகோதரர்களைப் போல வாழும் உங்களுக்குள் மதச்சாயத்தை பூசி குளிர்காய சில இந்து அமைப்புகள் முயற்சி செய்கின்றன... அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்'' என்று அறிவுறுத்தினார்.

அவர் வந்துபோன அன்று மாலையிலேயே பா.ஜ.க.வின் ஹெச்.ராஜாவும் பொம்மிநாயக்கன்பட்டி வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு "எல்லாப் பிரச்சனைக்கும் அதிகாரிகள்தான் காரணம்' என்று சாடினார். அதிகாரிகள், முஸ்லிம்களிடம் பணம் பெறுவதாக குற்றம்சாட்டினார்.

இந்தக் கலவரம் தொடர்பாக பி.ஜே.பி.யின் தேனி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளரான ராஜபாண்டியன் நம்மிடம் கூறியது...

""இந்த ஊரில் தொடக்கத்தில் இந்துக்கள்தான் அதிகமாக இருந்தார்கள். பின்னர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டனர். இஸ்லாமியர் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் பாலசுப்பிரமணியன் கோவிலுக்கு சொந்தமானது. அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுதான் இந்துக்கள் கேட்கிறார்கள்''’என்றார்.

அனைத்து இசுலாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளரான அகமது பாட்சாவிடம் கேட்டபோது...

""ஏற்கனவே அந்த கள்ளக்காதல் பிரச்சனை, அதோடு பிளக்ஸ் போர்டு பிரச்சனை போன்றவை மூலம் இந்து, முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 25 குடும்பங்கள் பி.ஜே.பி.யில் இணைந்திருக்கிறார்கள். அவர்களை தூண்டிவிட்டு இந்த மதக்கலவரத்திற்கு வழிவகுத்து விட்டனர். நாங்கள் பயன்படுத்தும் இடம் அனைத்தும் முறைப்படி பணம் கொடுத்து வாங்கியவை. அதற்கான ஆதாரமெல்லாம் எங்களிடம் இருக்கு''’என்றார்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்டு சமாதானக்குழுவினர் பொம்மிநாயக்கன்பட்டியை பழைய சகோதரத்துவ நிலைக்கு திரும்பச் செய்வார்கள் என்று இருதரப்பினரும் விரும்புகிறார்கள்.

-சக்தி