ரவுநேர சினிமா பார்த்துவிட்டு, டூ வீலரில் இளம்பெண் ஒருவருடன் வந்த மகேஷ்குமாரை, இரவுநேர சோதனை என்ற பெயரில் வழிமறித்து, ரூ.11 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசென்ஸை பறித்து அவரை விரட்டிவிட்டு, அந்தப் பெண்ணை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, மதுரை, திலகர் திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன்மீது, பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவாகி கைது செய்யப்பட்டு, மேலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலீஸ்காரர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில்... அவர் குறித்து விசாரித்தபோது பகீர் தகவல்கள் கிடைத்தன.

dd

கொரோனா ஊரடங்கின் தொடக்கத்தில், தேவையில்லாமல் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்ததிலிருந்து, சாலையில் வாகனங்களில் பயணிப் போரை மறித்து கேள்வி கேட்பதும், நடவடிக்கை எடுப்பதும் காவல்துறையின் பணியாகிப்போனது. வாகன சோதனை என்பதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, கடந்த 2 வருடங்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார் போலீஸ்காரர் முருகன். இதே ரீதியிலான குற்றச்சாட்டினால்தான், திலகர் திடல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனாலும், வழிப்பறியைத் தொடர்ந்திருக்கிறார்.

Advertisment

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை, போதை ஏற்றிக்கொண்டு முருகன் டூ வீலரில் ரவுண்ட்ஸ் வருவதெல்லாம் டவுண் ஹால் ரோடு, நேதாஜி ரோடு, சுண்ணாம்புக்காரத் தெரு, பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஜங்ஷன் பகுதிகளில்தான். இரவு நேரத்தில் ஜோடியாக டூவீலர்களில் செல்பவர்களைத்தான் குறிவைப்பார். கையை நீட்டி டூவீலரை நிறுத்தியதும், முதல் வேலையாக அந்த ஜோடியை தனது செல்போனில் படம் எடுப்பார். ‘"சினிமாவுக்கு போனோம்...'’ என்று டிக்கட்டை காண்பித்தால், பிடுங்கி கிழித்து எறிந்துவிடுவார். விசாரிக்கும்போதே அந்த ஆணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடுவார். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அந்த இரவுநேரத் தாக்குதலில் பொறிகலங்க வைத்துவிடுவார்.

கூனிக் குறுகிப்போய் நிற்கும் ஆணிடமிருந்து செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசன்ஸ் என அனைத்தையும் பறித்துவிடுவார். அடுத்து, அந்த ஜோடியிடம் உங்க அப்பா மொபைல் நம்பரைக் கொடுங்க என்று மிரட்டுவார். இருவரையும் தனித்தனியாக விசாரிக்கும்போது, அவர்கள் கணவன்-மனைவி இல்லை என்பது தெரிந்துவிட்டால், "நாளை குறிப்பிட்ட தொகையோடு என்னைச் சந்தித்து, செல்போன், ஏ.டி.எம்.கார்டை வாங்கிக்கொள். இல்லையென் றால் வழக்கில் சிக்கவைத்து உன்னை சின்னா பின்னமாக்கிவிடுவேன்'’என்று அச்ச உணர்வை ஏற்படுத்தி, அந்த ஆணை விரட்டிவிடுவார். செய்வதறியாது தவித்தபடி, அந்த இரவு நேரத்தில் தனியாக விசாரணை வளையத்தில் சிக்கி நிற்கும் அந்தப் பெண்ணை, தான் வழக்கமாகச் செல்லும் விடுதிக்கு இழுத்துச்சென்று, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு அனுப்பிவிடுவார். ஒருநாளில் குறைந்தது பத்து அப்பாவிகளையாவது முருகன் கார்னர்’ பண்ணி பணம் பறிப்பது, வாடிக்கையாக நடந்துவிடுமாம்.

மதுரையில் கஞ்சா புகைப்பவர்களின் நடமாட்டமும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். அவர்களும் முருகனிடம் சிக்கி பணத்தை இழந்ததுண்டு. நேதாஜி சாலையில் இரவு நேரங்களில் லாரிகளில் இருந்து சரக்கை இறக்கும் போது, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் குறைந்தது 50 ரூபாயாவது மாமூல் வாங்காமல் போகமாட்டாராம்.

Advertisment

ஒருநாள் தவறாமல் ‘நைட் டூட்டி’ பார்க்க முருகனை எப்படித்தான் காவல்துறை அனுமதித்ததோ? காவல்துறை விசாரணையில், சென்னை காதல் ஜோடி முருகனிடம் சிக்கி மாயமான விவகாரமெல்லாம் தெரியவந்துள்ளது.

முருகனைப் போலவே ‘இரவு நேர வாகன சோதனை’ நடத்தும் போலீஸ்காரர்கள் இன்னும் நான்கைந்து பேர் மதுரையில் உள்ளனராம். ‘போலீஸ் மானம் போய்விடக்கூடாதே..’ என்ற சிந்தனை எழாமல், தீவிரமாக விசாரணை நடத்தினால்தான், எத்தனை பேர் பணத்தையும் மானத்தையும் இழந்துள்ளனர் என்பது தெரியவரும்'' என்கிறார்கள் மதுரைவாசிகள்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போலீஸ் விஷயத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது.