நிர்மலாதேவி விவகாரம், பொள்ளாச்சி வன்கொடூரம் என எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு பல்லிளிக்கிறது. அதன் கொடூர எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டியிருக்கிறது நாகை சம்பவம்!

po

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகிலுள்ள கேசவன்பாளையத்தைச் சேர்ந்தவர் மதியழகன், கூலித்தொழிலாளி. இவரது மகள் கவியரசி திருமணமாகாத இளம்பெண். பொள்ளாச்சியை அடுத்த தேவனாம்பாளையத்தில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விடுமுறைக்கு வந்திருந்த கவியரசி கடந்த மே. 06-ந்தேதி இரவு 10 மணியளவில் பொள்ளாச்சி செல்வதற்காக, தன்னுடன் வேலைபார்க்கும் பெண்களுடன் தரங்கம்பாடி பேருந்துநிலையத்திற்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது கறுப்புநிற காரில் வந்த அடையாளம் தெரியாத சிலர் கவியரசியைக் கடத்த முயன்றுள்ளனர்.

இதைத் தடுக்க முயன்றபோது தரதரவென்று இழுத்துச் சென்றதில் படுகாயமடைந்த கவியரசியை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து பொறையார் போலீசாரிடம் விபரமாக புகார் கொடுத்தும், விபத்து வழக்காகவே பதிவுசெய்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும், பொதுமக்களும் "கவியரசியின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் வரை சடலத்தை வாங்கமாட்டோம்' எனக்கூறி பொறையார் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்குவந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் வந்தனா, "குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டுநாள் அவகாசம் வேண்டும்' என்று கேட்டபிறகு, சடலத்தை வாங்கமறுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

po

சம்பவத்தன்று கவியரசியோடு சென்ற அவரது சகோதரி மங்கையர்க்கரசியிடம் விசாரித்தோம்... ""தரங்கம்பாடி பஸ் ஸ்டாண்டுக்கு போகும்போது கறுப்புக்கலர் கார்ல லைட்டெல்லாம் அணைச்சிட்டு வந்த ஐந்துபேர், முன்னாடிபோன கவியரசி முடியைப் பிடிச்சு இழுத்தாங்க. முதுகுப்பக்கம் பேக் இருந்ததால் மார்புப்பகுதியில கையை வைச்சி தூக்கினாங்க. அவங்ககிட்ட இருந்து தப்பிக்கப் போராடினப்போ அவளோட சட்டை கிழிஞ்சிடுச்சி. சால் உருவிட்டு கீழ விழுந்தவ தொடையில காரை ஏத்திட்டுப் போயிட்டானுங்க. உயிர் போறதுக்கு முன்னாடி, ‘"கடத்த வந்தவனுங்க இங்க உள்ளவனுங்கதான் தெரிஞ்ச முகமாத்தான் இருந்தது'ன்னு கவியரசி சொன்னா''’என கதறியழுதார்.

Advertisment

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிவரும் வழக்கறிஞர் சங்கமித்திரனிடம் பேசியபோது, ""தரங்கம்பாடி, எருக்கட்டாஞ்சேரி, கேசவம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சமீபகாலமாக சாதிய வன்மம் தலை தூக்கியிருப்பதன் விளைவுதான் இது. கவியரசிக்கு அந்தக் கொடூரம் நிகழ்ந்த ஒரு மணிநேரத்தில் அதைச் செய்தவர்கள், அதே காரில் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர். அடுத்த அரை மணிநேரத்தில் அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர் ஒருவரின் தலையீட்டால், காவல்துறையினர் பேரம் பேசிக்கொண்டு வழக்கை விபத்தாக மாற்றிவிட்டனர். போராட்டம் வெடித்தபிறகு இந்த அ.தி.மு.க. பிரமுகர் கிளைச் செயலாளர்கள் மூலம் கவியரசியின் வீட்டில் பேரம் பேசுவதும், மிரட்டுவதும், வேலைக்கு அழைத்துச் சென்றவர் மூலம் பேச வைப்பதுமாக இருக்கிறார். குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யாமலிருக்க போலீஸ் பற்றாக்குறை என்று காரணம் சொல்கிறார்கள்.

காவலர்களின் கண்முன்னேயே பொன்பரப்பி சம்பவம் அரங்கேறியது. வாட்ஸ்அப்பில் சாதி வன்மம் பரப்பியவர்களையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பொன்பரப்பி சம்பவம் குறித்து வாட்ஸ்அப்பில் கண்டனம் வெளியிட்டதற்காக 200 போலீசாரை குவித்து ஒரு கிராமத்தையே நாசம் செய்தார்கள். அன்று குவிந்தவர்கள் இன்று எங்கே போனார்கள்''’என்றார் ஆத்திரத்துடன்.

po

காவல்துறை உதவி கண்காணிப்பாளர் வந்தனாவிடம் பேசியபோது, ""விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்''’என்றார். பொறையார் காவல்நிலைய காக்கி ஒருவர் நம்மிடம், “""குற்றவாளிகள் யாரென்பது போலீசுக்கு நல்லாவே தெரியும். போலீஸ் ஸ்டேஷன் வீடியோ ஃபுட்டேஜைப் பார்த்தாலே உண்மை தெரிஞ்சிடும். இதில் அரசியல் தலையீடும் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு உயிரோட இருந்ததால விபத்து வழக்கு போட்டாங்க. இப்போ செத்துட்டதால கையறு நிலையில இருக்காங்க. அதனால, குறுக்குவழியில பேரம் பேசுவாங்க. படியாமப்போனா மிரட்டுவாங்க. பெற்றோரை வைச்சிக்கிட்டு காக்கிகளே அடக்கம் செய்வாங்க''’என்று யதார்த்தத்தை விளக்கினார்.

-க.செல்வகுமார்