தனித்தனி பெயரில் அழைக்கப்பட்டு வந்த சமூகத்தினரை அவர்களின் கோரிக்கைப் படி தேவேந்திரகுல வேளாளர் என ஒருங்கிணைத்துள்ளன மத்திய- மாநில அரசுகள். அவர்களின் மற்றொரு கோரிக்கை, தங்களைப் பட்டியல் இன சமூகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதாகும். இதற்கிடையே தேவேந்திரர் சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்து வெளியே வருவதைப் பற்றி எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் எங்கள் சமூகத்தின் பெயரான வேளாளர் என்பதை அவர்கள் பயன்படுத்தக் கூடாது’ என பிள்ளைமார் சமூகத்தினர் வலியுறுத்தி வந்த நிலையில், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், பிள்ளைமார் சமூகத்தினரை திருப்திப் படுத்தும் நோக்கத்தோடு, கடந்த வாரம் சட்டப்பேரவையில் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி. உருவப்படத்தை திறந்து வைத்தனர்.
இந்நிலையில், போடி பழைய பஸ் நிலையம் அருகில் ஐக்கிய பிள்ளைமார் சங்கம் நிறுவிய வ.உ.சி முழு உருவச் சிலை திறப்புவிழா கடந்த 24-ந் தேதி கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை, ஓ.பி.எஸ் மற்றும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் அந்த சமூதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பெண்களும், முக்கிய பொறுப்பாளர்களும் திரண்டிருந்தனர். சமூதாயக் கொடி ஏற்றப்பட்ட பின்னர், வ.உ.சி. சிலையை ஒ.பி.எஸ் திறந்து வைத்து, அதற்கு மாலை அணிவித்து மற்றவர்களோடு மரியாதை செலுத்தினார்.
விழா மேடையின் முன்பாக மதுரையைச் சேர்ந்த வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநிலத் தலைவி அன்னலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளான தமிழ்ச்செல்வி, பாலசரஸ்வதி உள்ளிட்ட மகளிர் அணியினரும், இளைஞர்களும் பெருந்திரளாக உட்கார்ந்திருந்தனர் . அப்போது மகளிர் அணியினரும் இளைஞர்களும் திடீரென எழுந்து நின்று, ""எங்களது பெயரை வேறு ஒரு சமூகத்திற்கு தாரை வார்க்கக் காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.''’என தொடர்ந்து கோஷம் போட்டனர்.
அதைக் கண்டு டென்ஷனான போலீசார் பாய்ந்து சென்று, அந்த மகளிர் அணியினரையும் இளைஞர்களையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி, தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பியதால், மகளிர் அணியினரையும் இளைஞர்களையும் போலீசார் வளைத்துப் பிடித்துத் தாக்கியபடியே, தங்களது ஜீப்புகளில் ஏற்றி கொண்டு சென்றனர். இப்படி ஓ.பி.எஸ். முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தும் கூட, அவர் அதைக் கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருந்தார். அந்தப் பகுதி பரபரப்பானது.
காக்கிகளின் தாக்குதலால் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிர் அணி தலைவியான அன்னலட்சுமியிடம் இதுகுறித்துக் கேட்டபோது... ""ஐயா வ.உ.சி சிலையை திறப்பதற்கு ஓ.பி.எஸ்.சுக்குத் தகுதி இல்லை. அதனாலதான் ஐயா சிலையை அவர் திறக்க கூடாது என மாநில நிர்வாகிகளிடம் ஏற்கனவே முறையிட்டோம். அதையும் மீறித்தான் ஓ.பி.எஸ்.சை வைத்து திறந்தார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். உடனே அங்கிருந்த பெண் இன்ஸ்பெக்டர்களான வசந்தா வும், லட்சுமியும் எங்களை வாடி, போடி என்று வாய்க்கு வந்தபடி பேசி, சேலையைப் பிடித்து இழுத்து அடித்துக் கீழே தள்ளினார்கள். என்னுடன் வந்த சில மகளிர் அணியினரையும் அடித்துத் தள்ளி இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். போலீஸ் வேனிலும் என்னை வாய்க்கு வந்தபடி கொச்சையாகத் திட்டி அடித்தார்கள்.
தாக்கப்பட்ட என்னை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை கொடுத்தார்கள். தற்போது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இது எங்கள் மாநில நிர்வாகிகளுக்கு தெரிந்ததின் பேரில், அவர்கள் டென்ஷன் அடைந்து, ஓ.பி. எஸ்.சை கண்டித்து கண்டன போஸ்டர்களை மாநில அளவில் ஒட்டி வருகிறார்கள். விரைவில் ஓ.பி.எஸ்.சைக் கண்டித்து தமிழக அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தப் போகிறோம்'' என்றார் கொதிப்பாய்.
தேனி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் மகளிரணியின் பொறுப்பாளரான பெரியகுளத்தை சேர்ந்த பாலசரஸ்வதியோ, ""எங்கள் சமூகப் பெயரை மற்ற சமூகத்தினர் பயன்படுத்த கூடாது. அது பற்றிய அரசாணையையும் வெளியிடக் கூடாது. மீறி னால் எங்கள் போராட்டம் தொடரும். தற்போது தேனி மாவட்டத்திலேயே எங்கள் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எங்கள் மீதும் எங்கள் இளைஞர்கள் மீதும் போலீசார் நடத்திய தாக்குதலுக்கான பலனை, இந்த அரசு அனுபவிக்கப் போகிறது. ஓ.பி.எஸ். உள் ளிட்ட அ.திமு.க.வினர் தேர்தலில் படுதோல்வி அடைவார்கள்.
அவருக்கு எதிராக நான் குரல் கொடுத்தேன் என் பதற்காக என் வீட்டை, போலீசாரும் சில மர்ம நபர்களும் நோட்டமிட்டு வருகிறார்கள். அதனால என் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் அதற்கு ஓபிஎஸ்தான் காரணம்'' என்றார் ஆவேசமாக வும் அழுத்தமாகவும். அவர்கள் பக்கமிருந்து அனல் பலமாகவே வீசுகிறது.
ஓ.பி.எஸ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கோப அலை, இ.பி.எஸ்.ஸை பதற வைத்திருக்கிறது.