2021 செப்டம்பர் 17. காலை 9:30 மணி. வேலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி மின்னல் வேகத்தில் வருகிறது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான வேன். பெரியசாமி என்கிற காவல்துறை ஓட்டுநர் ஓட்டிவந்த அந்த வாகனம், கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனை கிராமத்தின் அருகே வரும்போது எதிரே திருவண்ணாமலை மாவட் டம், செங்கம் நகரிலிருந்து குடியாத்தத்திற்கு வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. தனது பேரன் பிறந்தநாளைக் கொண்டாடு வதற்காக 60 வயது ராமச்சந்திரன், அவரது மனைவி சரஸ்வதி, 26 வயதான அவர்களது மகன் ராம்குமார், 27 வயதான ஓட்டுநர் செல்வழகன் ஆகியோர் அந்த காரினுள் இருந்தனர். விபத்து நடந்ததும் காரிலிருந்த சரஸ்வதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இராமச்சந்திரன் இறந்தார். ராம்குமார், செல்வழகன் சிறிய காயங்களோடு உயிர்தப்பினர். போலீஸ் வேனில் வந்தவர்களில் ஓட்டுநர் பெரியசாமி, மாவட்ட குற்றப்பிரிவு ஆவணக் காப்பாக ஆய்வாளர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
வழக்கமாக விபத்தில் சிக்கியவர்கள் அனைவரின் பெயர்களும் வெளியேவரும். ஆனால் இந்த விவகாரத்தில் காரில் வந்தவர்களின் பெயர்கள் மட்டுமே வெளியானது. போலீஸ் வேனில் பயணம் செய்தவர்கள் யார், யார் என்கிற பெயர்கள் முழுமையாக வெளியாகவில்லை. அவர்கள் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகா மல் தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகி யுள்ளனர். இதுபற்றி நாம் போலீஸ் தரப்பில் விசாரித்தபோதுதான் இந்த விபத்தில் மறைக்கப் படும் விவகாரங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
விபத்தில் சிக்கிய டிபார்ட்மெண்ட் வேன், விதிகளை மீறியே வேலூர் சென்றது. விபத்து நடந்த அன்று மட்டுமல்ல, கடந்த ஓராண்டாகவே வாரத்தில் 5 நாட்கள் வேலூர் -திருவண்ணாமலை, திருவண்ணாமலை -வேலூர் என்று பயணமாகிறது. காரணம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் நிர்வாகப் பணியாளர் கள் சிலர், வேலூர் -கண்ணமங்கலத்திலிருந்து வரு கிறார்கள். அவர்களை வேலூரிலிருந்து அழைத்து வரவும், திரும்பக் கொண்டுசென்று விடவும், விதிகளை மீறி இந்த வாகனம் பயன்படுத்தப்படு கிறது. கொரோனா முதல் அலை காலத்தில் பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை. அப் போதும் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்புப் பேருந்து இயக்கப்பட்டது.
அப்போது, கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள பணியாளர்கள், நாங்க மத்த அரசு ஊழியர்களோட போகணுமா என முரண்டு பிடித்ததால் விதிகளை மீறி இவர்களுக்காக ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டது. அந்த வாகனம் வேலூரில் உள்ள மத்திய சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துவரவும், அழைத்து சென்று விடவும் பயன்படுத்தப்படும் 4 வாகனங் களில் ஒன்றாகக் கணக்குக் காட்டப்பட் டது. அந்த வாகனம்தான் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து இயங்கிக்கொண்டிருக் கும் நேரத்திலும் அந்த வாகனம் அவர்களுக்காக இயங்கியதுதான் தற்போது கேள்விக்குள்ளாகிறது.
அதிரடிப்படை போலீஸ் தரப்பிலோ, காலை 10 மணிக்கு திருவண்ணாமலையிலுள்ள அலுவலகத்துக்கு வரவேண்டியதற்கு 8.30 அல்லது 8.45 மணிக்குதான் வேலூர் சத்துவாச்சாரி யில் நிற்கும் வேனில் வந்து அமர் வார்களாம். பாகாயம் தாண்டும்போதே 9.15 மணியாகியிருக்கும். அதன்பின் 75 கி.மீ. தூரத்தை 45 நிமிடத்தில் எட்ட வேண்டும் என்பதால் மின்னல் வேகத்தில் தினமும் வாகனத்தை ஓட்டவைத்துள்ளார்கள். பொறுமை யாக ஓட்டினால், "நேரமாயிடுச்சு, வேகமா போ, வேகமா போ'' என விரட்டியுள்ளார்கள். இதனால் சாலை விதிகளை மீறி வேன் வந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றார்கள்.
விதிகளை மீறி இயங்கியதா என மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் நாம் கேட்டபோது, "விதிகளை மீறி எதுவும் செயல்படவில்லை. விதிகளுடன் தான் செயல்பட் டது'' என்பதோடு முடித்துக்கொண்டார். வேறு சில அதிகாரிகளிடம் பேசியபோது, "முன்பு இங்கு எஸ்.பி.யாக இருந்த அரவிந்தனிடம், நிர்வாகப் பணியாளர்கள், "நாங்கள் வயதானவர்கள். வேலூர், கண்ணமங்கலம் பகுதிகளில் இருந்து வருகிறோம். பேருந்து வசதியில்லை, எங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்துதரவேண்டும் எனக் கேட்டனர். அவர்கள் வயதானவர்கள் என்பதால் மனிதாபி மான அடிப்படையில் ஒரு வாகனத்தை ஒதுக்கித் தந்தார். பொதுப்போக்குவரத்து சகஜமான பின் அந்த வாகனத்தை நிறுத்தி நீங்கள் வழக்கம்போல் பேருந்துகளில், ரயிலில் அல்லது அவரவர் சொந்த வாகனத்தில் வரச் சொல்லியிருக்கலாம். அதை யாரும் சொல்ல முன்வரவில்லை.
காரணம், நிர்வாகப் பணியாளர்கள், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பிக்களையே மிரட்டுவார்கள், நேருக்கு நேராக நக்கலடிப்பார்கள். அதற்குப் பயந்துகொண்டே புது எஸ்.பி.யிடம் இதுபற்றி யாரும் சொல்லவில்லை'' என்றார்கள்.
விபத்து விவகாரம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணனைக் கடுப்பாக்கியுள்ளது. இதுபோல் மற்ற மாவட்டங்களில் எங்கெல்லாம் விதிகளை மீறி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என ரிப்போர்ட் வாங்கி யுள்ளார்கள்.
முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் இப்படி விதிகளை மீறி வாகனங்கள் ஓடுவது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் விதி மீறலால் இயங்கிய வாகனத்தால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன, இதற்கு யார் பொறுப்பு?