காவல்துறையிலேயே நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு டி.எஸ்.பி. யிடமிருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பியாக இருப்பவர் சுந்தரேசன். இவர்  மனித உரிமை ஆணையத்தில் பனியாற்றிய நிலையில், போலீசாரின் அத்துமீறலுக்கு எதிராக மேலிடத்திற்கு அறிக்கை கொடுத்ததாகக் கூறி, கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவுக்கு இவரை மாற்றினர். இங்கு வந்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். இந்த நிலையில்தான், காவல்துறையின் நெருக்கடிக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

அவரிடம்  என்ன நடந்தது என்று நாம் கேட்டபோது...

Advertisment

"கடந்த ஐந்தாம் தேதி ஆயுதப்படை எஸ்.ஐ. செந்தில்குமார், அமைச்சர் மெய்யநாதன் எஸ்கார்ட் பணிக்கு எனது வாகனத்தைக் கேட்டார். அந்த வாகனம் முக்கிய பிரமுகர்களின் கான்வாய்க்கு பயன்படுத்தப்படும் அளவுக்கான வலுவான வாகனம் அல்ல என்பதால், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லாமல் வாகனத்தைத் தர முடியாது என்று மறுத்துவிட்டேன். தொடர்ந்து எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பால சந்திரன் என்னை செல்போனில் தொடர்புகொண்டார். "நீங்கள் எங்கே இருக்கிறீர் களோ அங்கேயே வாகனத்தை விட்டு இறங் கிக் கொண்டு, அதை அனுப்பிவையுங் கள்' என்றார். வாகனத்தை நான் தரமறுத்ததால் உடனடியாக என்னை திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணிக்கு போகச் சொன்னார்கள். என்னைப் பழிவாங்கணும் என்ப தாலேயே அங்கு அனுப்புனாங்க. நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் திருச்செந்தூர் சென்று கும்பாபிஷேக பாதுகாப்புப் பணி முடித்து ஏழாம் தேதி திரும்புவதற்குள் உடனே திருவாரூர் முதல்வர் பாதுகாப்புப் பணிக்குப்  போகச் சொன்னார்கள். அங்கே சென்று பணிமுடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, பணிக்குத் திரும்பினேன். 

மறுபடியும், என்னுடைய வாகனம் அமைச்சர் மெய்ய நாதன் பாதுகாப்புக்கு வேண்டுமென்றனர். இரவு நேரங்களில் சரக்கு கடத்தும் வழித் தடங்களில் ரைடு போவதை முடக்குவதற்காக இவர்கள் திட்டமிட்டே பழிவாங்குகிறார்கள் என் பதை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்துவிட் டேன். பத்தாம் தேதி வாகனத்தை ஒப்படைத்தேன் 17ஆம் தேதிவரை வாகனம் என்னிடம் திரும்பி வர வில்லை. நான் பைக்கில்தான் எல்லா இடங்களுக் கும் போனேன், சொந்த பைக் இல்லாததால் இரண்டுநாள் அலுவலகத்துக்கு நடந்து சென்றேன், அது ஊடகங்களிலும், சமூகவலைத்தளத்திலும் பரவியது. அது இந்த நிலமைக்கு வந்து நிற்குது.  மதுவிலக்குப் பிரிவில் கடுமையாக நடவடிக்கை எடுத்தேன், நேர்மையாக இருந்தேன் என்கிற ஒரே காரணத்துக்காக இவ்வளவு சிரமத்தை அனுபவிக்கிறேன்.  என்னுடைய அலுவலக அறையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாத்ரூம்கூட கிடையாது. நான் சென்னையிலிருந்து இங்கு வந்தபோது, எனக்கு நான்கு மாத சம்பளம் கொடுக்கவில்லை. எனக்கு இன்னும் ஏழு ஆண்டுகள் பணிக்காலம் உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கு மனு அளிக்கும் நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். 

dsp1

Advertisment

மயிலாடுதுறையில் சிறப்பு தனிப்படையை வைத்துக்கொண்டு எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பாலசந்தர் மூலம் பணம் வாங்குறாங்க. பணம் வசூலிக்கத்தான் சிறப்பு தனிப்படையே இங்க இருக்கு. என்னால் அவர்களுக்கு கொடுக்க முடியல. அதோட காரைக்கால் அருகில் இருப்பதால் அங்கிருந்து வரக்கூடிய வருமானம் எல்லாம் என்னால் போயிடுச்சி என்பதால், ரவுண்டு கட்டி பழி வாங்குறாங்க. என்னை சஸ்பெண்ட் செய்தாலும் கவலை இல்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறைய தவறு நடக்கிறது. எல்லா தவறையும் எஸ்.பி. இன்ஸ்பெக்டர்தான் செய்யுறார். இது எஸ்.பி.க்கு தெரியுமா? தெரியலயா? என்பது புரியல. தமிழகத் தில் தற்போது மிக சிறப்பான ஆட்சி நடக்கிறது. திறம்பட ஆட்சி செய்கிறார் நம்ம தமிழ்நாட்டு முதல்வர். அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையில் நடப்பது அவருக்குப் போகுதா என்பது தெரியல'' என்றவர், சற்று நிதானித்துவிட்டு...

"நான் காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, கஸ்தூரி என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி, "மரண வழக்கை விசாரித்து இதில் போலீஸ் சித்தரவதை இருக்கிறது என்றும், சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்' என்றும் மனித உரிமை ஆணையத்  தலைவர் மணிகுமாருக்கு அறிக்கை அனுப்பினேன். இந்த அறிக்கையை அவர் அரசாங் கத்திற்கு அனுப்பினார். அப்போதிருந்தே எனக்கு தொல்லைகள் ஆரம்பிச்சிடுச்சி, உடனடியாக என்னை பணியிட மாற்றம் செய்தார்கள். எனக்கு பல்வேறு மெமோ வருகிறது. அதற்கும் நான் பதிலளித்துக்கொண்டேயிருக்கிறேன். 

தவறான செய்கையில் ஈடுபடும் எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டரை தண்டிக்க வேண்டும்.  நான் மனித உரிமை ஆணையத்தில் நேர்மையாக அறிக்கை கொடுத்ததால் அடிமட்டத்தில்  இருப் பவர்களைக் கொண்டு டார்ச்சர் செய்கிறார்கள். இதற்குப் பின்னால் உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேல், சட்டம் -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர்  இருக்கிறார்கள். 

இங்கு வந்து ஓராண்டு ஆகப்போகுது. யாரிடமாவது லஞ்சம் வாங்கினேன்னு நிரூபிக்கட் டும். இங்கேயே தூக்குப்போட்டு சாகத் தயார். இந்த மாவட்டத்தில் லஞ்சம் புரையோடிக் கிடக்கு, பல குற்றங்கள் மறைக்கப்படுது. நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் நேர்மையானவர்களைக் குறிவைத்து துரத்துறாங்க. முதல்வர் அவர்கள்தான் இதையெல்லாம் சரிப்படுத்தணும்''’என்கிறார் கலக்கமாய்.

மயிலாடுதுறை காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்...’ "டி.எஸ்.பி. சுந்தரேசன் சொல்லு வது முற்றிலும் உண்மை. இந்த மாவட்டத்தில் இருக்கும் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் முதல் எஸ்.பி. ஏட்டுகள் வரையிலும் பணம் சம்பாதிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவது என்பதையே வேலையாக வச்சிருக்காங்க. அதேபோல தனிப்படை என எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மூன்று தனிப்படைகள் இருக்கு, அவர்களது வேலையே வசூல் செய்து கொடுப்பதுதான்.  

dsp2

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன் கொலைக்கு பெரம்பூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஒருவர்தான் முழுக்காரணம் என புகார் கொடுக்கப்பட்டது. அதில் பெரியஅளவில் பேரம் நடந்தது. அதன்மூலம் அந்த எஸ்.ஐ.யையும், அவரது மகன் பெயரையும் நீக்க வைத்துவிட்டார்கள். பெரம்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில்தான் இரண்டு கல்லூரி மாணவர்கள் சாராய விவகாரத் தில் கொலையானாங்க. அந்த காவல்நிலையத்தில் கொலைக்கு உடந்தையாக இருக்கும் உதவி ஆய்வாளரைக் கொண்டு வருமானம் பார்க்கி றார்கள்.

மணல் கொள்ளை  ஊருக்கு ஊர் நடக்குது. அதற்கேற்ப இன்ஸ்பெக்டர்களையும், உளவுப் பிரிவு போலீசாரையும் போட்டு வசூலிக்கிறார்கள். உதாரணமாக, பொறையார் காவல் நிலையத்தில் முருகன் வீற்றிருக்கும் மலையின் பெயர் கொண்ட ஒரு எஸ்.பி. ஏட்டு மூலம் வாரம் 2,30,000 வசூல் செய்யுறாங்க. அப்படியானால் மாவட்டம் முழுவதும் எவ்வளவு என கணக்கிட்டுக் கொள்ளலாம்.

மதுவிலக்கு பிரிவில் டி.எஸ்.பி.யாக இருந்து பிறகு மாற்றலானதும் விருப்பஓய்வு பெற்ற ஒருவர், தற்போது மயிலாடுதுறையில் பினாமி பெயரில் பார் நடத்துகிறார். தற்போது அவர் நடத்தும் பாரில் பாண்டி சரக்கு இருப்பதை அறிந்து டி.எஸ்.பி. சுந்தரேசன் ரெய்டு செய்து முடக்கினார். சும்மா விடுவாரா? அதேபோல ஆளுங்கட்சி இளைஞரணிப் பிரமுகர் ஒருவரின் அனுமதியில்லாத பாரையும் ரெய்டு செய்து மூடிவிட்டார். இப்போது  எல்லாரும் ஓரணியாகிப் பழிவாங்குகிறார்கள். வருமானம் கொட்டும் துறையில் இருந்தும் இந்த மாவட்டத்தில் நேர்மையாக, மக்களிடம் மட்டுமல்ல காவலர் களிடமும் டி.எஸ்.பி. சுந்தரேசன் நன்மதிப்பை பெற்றுள்ளார்’என்கிறார்கள்'' அழுத்தமாக.

இதற்கிடையில் டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது 2006 காலகட்டத்தில் லஞ்சம் வாங்கியதாகவும், புவனா என்கிற பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொண்டார் என்றும் அதற்காக துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் அவருக்கு எதிரான தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

இந்தச் சூழலில் டி.எஸ்.பி. சுந்தரேசன் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது காவல்துறை. அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்த்துப் போராட்டம் செய்யத் தயாராகியுள்ளனர் மயிலாடுதுறை மாவட்ட சமூக ஆர்வளர்கள்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலினிடம் கேட்டோம்...

"அவர் சொல்லுறது எல்லாமே தவறுங்க. அவருக்கு மாற்றுக் கார் கொடுத்திருந்தோம், இப்போது அவரது காரை கொடுத்துட்டோம். எல்லாருமே சேர்ந்துதான் மதுவிலக்கு வழக்குகள் போட்டனர். அவர் மட்டுமே போட்ட தாகக் கூறுகிறார். ஸ்பெஷல் டீமை கலைத்து காவல்நிலையங்களுக்கு அனுப்பியாச்சு, மாவட்டம் க்ளீனா இருக்கு''’என்றார். 

சுந்தரேசன் குறித்து சென்னை போலீசார் வட்டாரத்தில் விசாரித் தோம்.’"அதிரடி ஆபீசர் என்று பெயரெடுத்தவர். தமிழகத்தில் நடந்த முக்கிய வழக்குகளை இவர் விசாரித் திருக்கிறார். டி.எஸ்.பி. விஷ்னுபிரியா வழக்கைக் கூட இவர்தான் விசாரித்தார். நல்ல மனிதர், ஆன்மீகப் பற்று அதிகம். இப்போது நிர்கதியில் இருக்கும் அவரை, பா.ஜ.க.வினர் கையில் எடுக்கப் பார்க்கறாங்க''’ என்கிறார்கள்.

டி.எஸ்.பி. சுந்தரேசன் விவகாரம் பூதாகரமான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் திலிருந்து கோப்புகளை வெளி நபர்களுக்கு கசிய விடுவதாகக் கூறி, அந்த அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சரவணன் என்பவரை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். திருச்சி, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், 18ஆம் தேதி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்து தயாரிக்கப்பட்ட கோப்புகள் ஐ.ஜி. கையெழுத்திடாமலேயே வெளியான விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது.