"போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, "ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.
"ஜக்கி வாசுதேவின் ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் தங்கிப் படித்துவந்த தனது மகனுக்கு பாலியல் தொல்லை நடந்திருக்கின்றது' என ஹைதராபாத்தை சேர்ந்த யாமினி நரேந்திரா தம்பதியினர் முதன்முதலில் ஊடக வெளிச்சத்தில் ஜக்கியின் தகிடுதத்தங்களை அம்பலத்திடுத்தினர். தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறைக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினர். அதில், ஜக்கி வாசுதேவின் உரைகளைக் கேட்டு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த யாமினி, 2013ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்துடன் நேரடியாக பல்வேறு களப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்பொழுது யாமினி தன் மகனை ஈஷா யோகா மத்தி மையத்தில் இயங்கும் ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் சேர்த்து இருக்கின்றார். அங்கு அவர் பத்தாம் வகுப்பு வரை படித்து இருக்கின்றார். இந்த நிலை யில் யாமினியின் மகன் மைனராக இருந்த பொழுது, 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை, மாணவர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.
சிங்கப்பூரைச் சார்ந்த பொருளாதாரத்தில் வலிமையான குடும்ப பின்னணியில் உள்ள ஒரு சிறுவன், பாலியல் ரீதியாக அவனை 3 வருடங் களாக நள்ளிரவில் துன்புறுத்தியுள்ளான். இது தொடர்பாக அப்பள்ளி ஜென்ரல் கோ-ஆர்டினேட் டரிடம் யாமினியின் மகன் தெரிவித்திருக்கின்றார். ஆனால் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கப்படா மல், குற்றப் பின்னணியில் இருந்த சிறுவனை ஈஷா யோகா மையத்தினர் ஒரு வாரம் தங்கள் கஸ்டடியில் பாதுகாத்தனர். இந்த காலகட்டத்தில் தன் மகன் கடும் மன உளைச்சலோடு, உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த பொழுதிலும், ஈஷா யோகா மையத்தின் தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை. இதனிடையே ஈஷா யோகா மையத்தில் தன் மகனுக்கு நேர்ந்த அவலம் தெரியவந்த பொழுது ஈஷா யோகா மையத்தில் இயங்கும் பள்ளி நிர் வாகத்திடம் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் தெரிவித்த, இது குறித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஈஷா யோகா பள்ளி நிர்வாக தரப்பு, நட வடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்தது. இது தொடர்பாக, தன் மகனுக்கு நடந்த பாலியல் துன்புறுத் தல்களில் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவித்திருத்தார்.
இந்த நிலையில், "உங்கள் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. இது தொடர் பாக, யாமினியும், பாதிக் கப்பட்ட அவரது மகனும் விசாரணைக்கு ஆஜராகி நடந்ததை கூறினர். ஆனால் எப்.ஐ.ஆர். போடாமல் அலைக்கழித் தது கோவை மாவட்ட காவல்துறை. இதுகுறித்து தொடர்ச்சியாக நக்கீரனும் பதிவு செய்துவந்த நிலையில்... அதனின் எதிரொலியாக, "எப்.ஐ.ஆர். போட்டுவிட்டோம், வந்து வாங்கிக்கொள்ளுங்கள்'' என்றது காவல்துறை. ஆனால், எப்.ஐ.ஆர். நகலை வாங்க வந்த நிலையில்தான் மிரட்டப்பட்டிருக் கின்றார் யாமினி.
"உங்களது புகார் சம்பந்தமாக போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தார் அழைத்த நிலையில்தான் இங்கு வந்தேன். இன்ஸ்பெக்டர் சுமதி உள்ளிட்டோர், "யார் இன்று வரக்கூறியது?' என எடுத்த எடுப்பிலேயே என்னை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைத்தார்கள். நானும் விடாமல், "உங்க ஸ்டேஷ னிலிருந்துதான் வரச்சொன்னாங்க. மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க' என அதனைக் காண்பித்த போதும், எப்.ஐ.ஆர். நகலை தர மறுத்து அங்கிருந்து அனுப்பிவிட்டனர். வேறு வழியில் லாமல்தான் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு செல்லவேண்டியதாயிற்று. "இன்று அமித்ஷா வருகிறார். அதனால் எதுவும் செய்ய இயலாது. அத்தனை போலீஸாரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர்' என்ற னர். "அமித்ஷா வருவது முன்பே தெரியாதா இவர் களுக்கு?' என அங்கும் போராடினேன். இந்த நிலையில், மீண்டும் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வரக்கூறினார் இன்ஸ் பெக்டர் சுமதி.
எப்.ஐ.ஆரை கொடுங்கள் எனக் கேட்டதற்கு, நீதிமன்றத்தில் வாங்கிக்கொள்ளுங்கள் என கூலாக கூறிவிட்டார். "அப்புறம் எதற்கு எஸ்.பி. அலுவலகத்திலிருந்து இங்க வரக்கூறினீர்கள்?' என்றேன். ஒருகட்டத்தில் எப்.ஐ.ஆரில் என்ன இருக்கின்றது? யார் மீது வழக்கு தொடுத்திருக் கிறீர்கள்? எனக் கேட்டதற்கு காண்பிக்கின்றேன் எனக்கூறி எப்.ஐ.ஆரை காண்பித்தார்.
புகாரில் சுட்டிக்காட்டப்பட்ட சுவாமி விபுஆனந்தா மற்றும் இருவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருக்கின்றது. ஆனால் ஜக்கியை சேர்க்கவில்லை. இந்த நிலையில், "எப்.ஐ.ஆரில் இருப்பது குறித்தும், ஜக்கி குறித்தும் ஈஷா குறித்தும் வெளியில் பேசக் கூடாது'' என மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார். "பாதிக்கப்பட்டோர் குறித்துதான் வெளியில் கூறக்கூடாது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கூறலாமே..? அந்த இன்ஸ்பெக்டர் ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றார். இதுகுறித்து சட்டப்படி சந்திப்பேன்'' என்றார் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரான யாமினி.
ஜக்கிக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் இன்ஸ்பெக்டர் சுமதியோ, "யாரையும் மிரட்டவில்லை. யாரை பற்றியும் பேசக்கூடாது எனக் கூறவில்லை. எப்.ஐ.ஆரில் உள்ளது குறித்து கூறினால் பாதிக்கப்பட்டோர் விபரம் தெரிந்து விடும் என்பதால் அதுகுறித்து பேசவேண்டாம் என்றேன். மற்றபடி அது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு'' என்கிறார் அவர்.
எப்.ஐ.ஆர். நகலுக்கே இந்தப் போராட்டம்! குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த எவ்வளவு போராட வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்டோரின் தற்போதைய கேள்வி.
படங்கள்: விவேக்