""பணம் தராவிட்டால் என்னையும் என் குடும்பத்தினரையும் "கொன்றுவிடுவோம்' என்று ரவுடிகள் மூன்று பேர் மிரட்டுகிறார்கள்''.’’
விருதுநகர் மாவட்டம் - திருத்தங்கல்லை அடுத்துள்ள ஆலமரத்துப்பட்டியிலிருந்து பாக்யராஜ் என்பவரின் மனைவி கீதாவிடமிருந்து வாட்ஸ்-ஆப் மூலம் நமக்குத் தகவல் கிடைத்தது.
கீதாவின் கணவர் பாக்யராஜ் வாட்ஸ்-ஆப் மூலம் நமக்கு அனுப்பிய ஆடியோவில், ""வெட்டுவேன்; குத்துவேன்; கொன்றுவிடுவேன்’ என்பது போன்ற கரடுமுரடான வார்த்தைகளை ஆளாளுக்குப் பேசுகின்றனர். தூத்துக்குடி கூலிப்படையினர், வடபட்டி அடியாட்கள் என்று அந்த ஆடியோவில், இருதரப்பினரின் பீதிகிளப்பும் பேச்சு நீள்கிறது. என்னைக் கடத்திக் கொலை செய்வதற்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டார்கள்'' என்று ஜோதிடர் பாக்யராஜ் விவரித்த மிரட்டலான பின்னணி இது -
2016 நவம்பர் 8-ஆம் தேதி, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தவுடன் பதறிப்போனார் செல்வகணேஷ். திருத்தங்கல்லில் யமஹா ஷோ ரூம் நடத்தி வரும் இவரிடம், கணக்கில் வராத பணம் கோடிகளில் இருந்திருக்கின்றன. அந்தக் கருப்புப் பணத்தை வேறு வழிகளில் மாற்றுவதற்கு முயன்றார். யமஹா ஷோரூம் மேனேஜர் செல்வகுமாரையும், நண்பர் பாக்யராஜையும் இதற்குப் பயன்படுத்தினார். இவ்விருவரும் பழைய நோட்டுகள் ஒன்றரைக் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு மதுரை சென்றார்கள். அங்கே திருச்செல்வம் என்பவரிடம், புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக, பழைய நோட்டுகளை கமிஷன் அடிப்படையில் கொடுத்தார்கள். பணத்தை வாங்கிய திருச்செல்வம் மாயமாகிவிட, வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார்கள். கணக்கில் வராத பணம் என்பதால், முறைப்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியவில்லை.
அந்த ஒன்றரைக் கோடியை மோசடி செய்திருக்கலாம் என்று நண்பர் பாக்யராஜ் மீது செல்வகணேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆடம்பர பங்களா, கார் என்று வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்யராஜிடமிருந்து, இழந்த பணத்தை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று, ரவுடிகளைக் களத்தில் இறக்கினார். ரவுடிகள் விடுத்த கொலை மிரட்டலால் ‘எஸ்கேப்’ ஆனார் பாக்யராஜ். அதனால், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்து, விசாரணை என்ற பெயரில் பாக்யராஜை அழைத்துவந்து, ரவுடிகளின் கையில் ஒப்படைத்து, கட்டப் பஞ்சாயத்து நடத்தி, அந்த ஒன்றரைக் கோடி ரூபாயை திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்று பிளான் போட்டார்கள். இந்த சேவைக்காக ஒரு பெரும் தொகையை சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சீனிவாசனுக்கு கொடுத்துவிடுவது என்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இதையறிந்த பாக்யராஜ் விசாரணைக்கு வராமல், தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
செல்வகணேஷ் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்த நிலையில், அவர் தரப்பில் பேசிய ஒருவர், ""இழந்தது கருப்புப் பணம் என்பதால், ரவுடிகளை வைத்து வசூலிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் செல்வகணேஷ். இதில் கொடுமை என்னவென்றால், ரவுடிகளுக்கு ஒரு பக்கம் லட்சம் லட்சமாக கொடுக்கிறார். காவல்துறையினரும் பல லட்சங்களை எதிர்பார்க்கின்றனர். மொத்தத்தில், அந்த ஒன்றரைக் கோடி திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ? மேலும் பல லட்சங்களை இழந்துகொண்டிருக்கிறார் செல்வகணேஷ். ஏமாற்றுப் பேர்வழியான பாக்யராஜ், கருப்புப் பண விவகாரம் வெளியில் தெரிந்து, செல்வகணேஷ் சிக்கலில் மாட்டிக்கொண்டால், தான் தப்பிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்'' என்றார்.
பாக்யராஜோ, ""எனக்கு உதவுவதாகச் சொல்லி, என்னிடமும் ரூ.25 லட்சம் கேட்டார் இன்ஸ்பெக்டர் சீனிவாசன். யாரோ கொண்டுபோன ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு நான் எப்படி பொறுப்பாவேன்? நான் ஊர் திரும்பினால், என் உயிருக்கு உத்தரவாதமில்லை'' என்றார் நடுக்கத்துடன்.
சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் நம்மிடம், ""கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, ரவுடிகளுக்குத் துணை போவதெல்லாம் காவல்துறையின் வேலை கிடையாது. 40 யமஹா டூ வீலர்களுக்கான பணம் ரூ.20 லட்சத்தை பாக்யராஜ் தரவில்லை; மிரட்டுகிறார் என்றுதான் புகார் வந்திருக்கிறது. இன்னும் விசாரணையே தொடங்காத நிலையில், தேவையற்ற பேச்சுக்கு ஆளாக வேண்டியதிருக்கிறது'' என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
திருடனுக்குத் தேள் கொட்டியது போல், ‘டிமானிடைசேஷன்’ நடவடிக்கையால், கருப்பு பணத்தைப் யார் யாரிடமோ பறிகொடுத்துவிட்டு, உள்ளுக்குள் புழுங்கித் தவிப்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள்.
-சி.என்.இராமகிருஷ்ணன்