அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தாலும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டாலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் + தூத்துக்குடி மக்களின் போராட்ட உணர்வு மங்கவில்லை.
"எங்கிருந்து போராட்டத்தினை ஆரம்பிப்பது..? எவ்வாறு ஆரம்பிப்பது..?' என ஆலைக்கெதிரான போராட்டக் குழுவினர், மக்களுடன் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட்ட வேளையில், செவ்வாய்க்கிழமையன்று, சட்டென பண்டாரம்பட்டியில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் குழுவாக இணைந்து போராட்டத்தைத் தொடங் கினர். போலீசாரோ, வருவாய்த்துறை யினருடன் இணைந்து, "அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கூடக்கூடாது. உங்க ளுடைய கோரிக்கையை ஆட்சியரிடம் கொடுங்கள். இப்பொழுது கலைந்து செல்லுங்கள். இல்லையெனில் வலுக்கட் டாயமாக கைது செய்ய வேண்டியிருக்கும்'' என மிரட்டி கூட்டத்தினை கலையவைத் தது. இதேவேளையில், தூத்துக்குடி நகரப்பகுதியான புதுத்தெருவில் தங்கள் வீடுகள் முன் விளக்கை ஏற்றி "வேண்டாம் ஸ்டெர்லைட்' என போராட்டத்தினை துவக்கினர் அப்பகுதி மக்கள். அவர்களும் காவல்துறையால் மிரட்டப்பட்டு கலைக்கப்பட்டனர்.
தனித்தனி அமைப்பாக இருப்பவர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால்தான் அரசின் முடிவில் மாற்றம் வரும் என்ற தீர்மானத்துடன், 29-04-2021 அன்று, தூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிக் கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. "ஸ்டெர்லைட் திறக்காதே! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டு' என்று காலை கோலம் போடுவோம்! வீடு, தெரு, ஊர்களில் கருப்பு கொடி கட்டு வோம்! கருப்புச்சட்டை அணிவோம்! சட்டைகளில்/ஆடைகளில் கருப்பு பேட்ச் அணிவோம்! மற்றும் மாலை 5 முதல் 8 வரை வாட்ஸ்-ஆப், பேஸ்புக், டிவிட்டரை கருப்பாக்குவோம்' என்பது உள்ளிட்ட திட்டங்களுடன் 29-ஆம் தேதியினை கருப்பு தினமாக அறிவித்து வாட்ஸ்-ஆப்பில் ஆதரவு திரட்டியது "ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.'
இதேவேளையில், 8973894435 என்ற எண்ணிலிருந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பெயரில் போலியாக பதிவிட்டு, அதில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ரத்து செய் யப்படுவதாகக், குறிப்பிடப்பட்டு வாட்ஸ்-ஆப்பில் தகவலை பரப்பியது ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான குழு. எனினும் மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பண்டாரம்பட்டி, மீளவிட்டான், சில்வர் காலனி, முத்தம்மாள்புரம் மற்றும் கடற் கரையோரப் பகுதிகள் முழுவதும் வீடுகள்தோறும் "வேண்டாம் ஸ்டெர்லைட்' என கோலமிட்டும், கருப்புப் பலூன் பறக்கவிட்டும், கருப்புக்கொடி ஏற்றி யும் தங்களது ஒற்றுமையை பறைசாற்றினர் மக்கள்.
"ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றமும், தமிழக அரசும் அனுமதித் துள்ள நிலையில், தூத்துக்குடியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் தேசத்திற்கு விரோதமாக தூத்துக்குடி அப்பாவி பொதுமக்களை மூளைச்சலவை செய்து போராட்டத்திற்குத் தூண்டும் அடிப்படைவாத அமைப்புகளான கிறிஸ்தவ மிஷினரிகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் உதவிபெறும் மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் நக்சல் தொடர்புள்ள அமைப்புகளும் ஆக்சிஜன் உற்பத்தியை தடுக்கும் எண்ணத்தோடு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி, பல்வேறு நாசகார வேலைகளை செய்ய முகாந்திரம் உள்ளது. மேலும் நக்சல்கள் இந்த அமைப்புகளின் மூலமாக தூத்துக்குடியில் ஊடுருவ வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினர் உள்ள பகுதி கள் முழுவதுமாக சோதனை செய்திடவும், இந்த அடிப்படைவாத அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்திடவும், மேலும் அவர்கள் சார்ந்த அமைப்பு களை தடைசெய்யவேண்டும்'' என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளது இந்து மக்கள் கட்சி.
"இதுபோல் லெட்டர்பேடு கட்சிகளிட மிருந்து மனுவினை வாங்கி வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். இதனையே காரணம் காட்டி மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கின்றது ஸ்டெர்லைட் நிர்வாகம். அதனால் கிறிஸ்தவ மிஷனரிகளை சல்லடை போடும் எண்ணத்தில் உள்ளது காவல்துறை'' என்கிறார் ஆலைக்கெதிரான கூட்டமைப்பில் உள்ள சகாயராஜ்.
வியாழக்கிழமையன்று, "ஆட்சியரைப் பார்க்க வேண்டும்' என்கின்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகை யிட்டனர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். திரண்ட மக்களின் எழுச்சியை பார்த்து விக்கித்து நின்ற காவல்துறை சில நிமிடங் கள் கழித்தே, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தது. "அவனது (ஸ்டெர்லைட்) ஆக்ஸிஜன் சுவாசத்துக்கு உகந்ததல்ல என்பது எங்கள் வாதமல்ல... அவன் (ஸ்டெர்லைட்) சகவாசமே சமூகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்கள் வாதம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி அறவழியில் போராடிய எங்களின் பிள்ளைகளை, கணவரை, தாய், தந்தையரை சகோதரனை காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டினால், தடியடியால் இழந்து தவிக்கிறோம். எங்களது உறவுகளை துடிதுடிக்க படுகொலை செய்து, உடல் உறுப்புகளை சிதைத்த ஆலையை மூடும்வரை மறக்கவும், மன்னிக்கவும் முடியாது. நச்சுஆலை என தமிழக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டும், உயர்நீதிமன் றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டும், நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட், ஆக்சிஜனை இந்தியாவிற்கே உற்பத்தி செய்து தருகிறோம் என்று உண்மைக்குப் புறம்பாக, பொய்யான காரணங்களை கூறி திறக்கப்பட உள்ளது. நச்சு ஆலை திறக்கப்படுவது எங்கள் உறவுகளின் தியாகங்களை இழிவுபடுத்தி, மேலும் எங்களின் வலிகளையும், வேதனைகளையும் அதிகப்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆயிரம் வழிகள் இருக்க... ஸ்டெர்லைட்டை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஸ்டெர்லைட் நச்சு ஆலையின் மரணக் கதவுகளைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது'' என தங்களது கோரிக்கையை ஆட்சியரிடம் ஆவேசமாகவும், அழுத்தமாகவும் கூறிச்சென்றனர்.
ஆலையைச் சுற்றி 600-க்கும் அதிகமான போலீசாருடன் ஆலையைக் காத்துவரும் காவல்துறை, மறுபக்கம் ஆலைக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சத் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பண்டாரம்பட்டி மக்கள் உள்ளிட்ட 37 நபர்கள் மீது, சிப்காட் சப்-இன்ஸ் பெக்டர் சங்கரிடமே புகார் வாங்கி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக காவல்துறைக்கு எதிராகவும், தூத்துக்குடியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாட்ஸ்-ஆப்பில் அவதூறு தகவல்களை பரப்பியதாக தூத்துக்குடி யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..
பல்வேறு கட்டங்களாக, பல்வேறு இடங்களில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டத்தினைக் கண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜோ, "ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எந்த தீர்ப்பும் வழங்கவில்லை. ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகை மட்டும் 3 மாத காலத்திற்கு தனியாக தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இயக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆலையை மூடியதோடு அதே நிலைப்பாட்டை நீதிமன்றங்களிலும் கடைபிடித்துள்ளது'' என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
ஆலைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அக்ரி பரமசிவனோ, "கடந்த 2018-ல் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு முக்கிய காரணம் உளவுத்துறையினரின் தவறான வழிகாட்டுதல்கள் என்பதை ஒப்புக்கொண்டதோடு, கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் போல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்துவிடக் கூடாது என்பதற்காக 2018-ல் செய்யத் தவறிய வழக்குகளையும் பயத்தையும் பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தி விட வேண்டும் என்கிற நோக்கில் காவல் துறையினர் செயல்படத் தொடங்கிவிட்டனர்.
மக்களின் எண்ண ஓட்டமென்பது மீண்டும் ஸ்டெர்லைட்டினை நிரந்தரமாக திறந்து மண் வளம், நீர் வளம், நிலவளம் மற்றும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்கிற அச்சநிலையில் தூத்துக்குடியில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனை ஒடுக்கும்விதமாக உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகளின் தலைமை யில் மீண்டுமொரு குண்டுகள் துளைக்காத துப்பாக் கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்ற ஒத்திகையை தொடங்கிவிட்டனர்...'' என்கிறார் அவர்.
புரட்சிகரமான போராட்டத்தின் தொடக்கம் எப்போதும் காவல்துறையின் அடக்குமுறையில் இருந்துதான் தொடங்குகிறது என்பதனை அறியாதோர் இல்லை.
படங்கள்: விவேக்