சரண கோஷம் ஒலிக்கும் சபரிமலைக்கு வரும் பக்தர்களை "வாங்க சாமி, தள்ளுங்க சாமி' என்று மரியாதையாக கையாளும் போலீஸ், இப்போது மிரட்டல் தொனியில் பேசுவதைக் கண்டு பக்தர்களே அஞ்சுகிறார்கள்.
"பெண்களும் சன்னிதானத்துக்குப் போகலாம்' என்ற உத்தரவு வந்தாலும் வந்தது. பம்பையிலிருந்து சன்னிதானம் வரை 15 ஆயிரத்துக்கு அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பக்தர்கள் என்ற பேரில் பா.ஜ.க.வினர் நடத்தும் ஆர்ப்பாட்ட அட்டூழியங்களில் இருந்து உண்மையான பக்தர்களை வேறுபடுத்தி பார்க்கவே முடியாத இக்கட்டான நிலையில் போலீஸார் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால், போலீஸை வைத்து பக்தர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதாக தேவசம் போர்டு மீதும் கேரள அரசு மீதும் பா.ஜ.க.வும் இந்து அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் கேரளா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுரேந்திரன் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல முயன்றபோது, "அங்கு கலவரம் தூண்டப்படலாம்...' என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மற்றும் காவி அமைப்பினரை களையெடுக்கவும் போலீஸார் எச்சரிக்கையாக செயல்படுகின்றனர். இரவு கோயில் நடை அடைத்த பின்னர் அடுத்தநாள் அபிசேகத்திற்காக நடைப்பந்தலில் தங்கியிருந்த பக்தர்களில் 69 பேர் திடீரென்று சரணகோஷம் போட்டதால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் கேரள பக்தர்களோடு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
இந்நிலையில் கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை நக்கீரனிடம் பேசினார்… “""பா.ஜ.க. தலைவர் என்பதைத் தாண்டி, ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தனாக பேசுகிறேன். பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக போலீஸார் நிறுத்தப்பட்ட நிலை மாறி இப்போது கலவரத்தை அடக்குவதற்காக நிறுத்தப்படும் நிலை வந்துள்ளது. முன்பு போலீஸார் தலையில் தொப்பியோ, இடுப்பில் பெல்ட்டோ அணிந்திருக்கமாட்டார்கள். ஆனால், இப்போது, பூட்ஸ் கால்களோடு உலாவருகிறார்கள். போலீஸின் வியர்வை படிந்த பேண்ட் சட்டைகளை சன்னிதானத்திலேயே காயப்போடுகிறார்கள். பக்தர்களின் இருமுடிகளை பாதுகாப்புக் காரணத்துக்காக சோதனை செய்கிறார்கள். இரவு நடை அடைத்தபிறகு சன்னிதானத்தில் உருள் வழிபாடு செய்வதையும், மாளிகைபுறத்தம்மன் கோவிலில் கன்னிசாமிகள் தேங்காய் உருட்டுவதையும் போலீஸ் தடைசெய்துவிட்டது. இரவில் சன்னிதானத்தில் தங்கவிடாமல் பம்பைக்கு துரத்துகிறார்கள். இப்படி துரத்தினால் அப்பம் அபிசேகம் செய்வது எப்படி? சன்னிதானத்தில் நின்று சரணம் கூப்பிட்டால் உடனே போலீசார் பக்தர்களை மிரட்டுகிறார்கள். அபிஷேகம் முடித்துக்கொண்டு பம்பைக்கு திரும்பும் பக்தர்கள் 18-ம் படி அருகில் இருக்கும் வாபர் பள்ளிக்குச் செல்வதையும் தடுத்துவிட்டனர். இப்படி பக்தர்களின் விசுவாசத்தையும் உரிமையையும் தடுக்கும் போலீசையும் அரசையும் யார் தட்டிக் கேட்பது? இதையெல்லாம் தட்டிக்கேட்டால் பக்தர்கள் என்றுகூட பார்க்காமல் கைது செய்கிறார்கள்''’என்றார்.
வேலூரை சேர்ந்த அய்யப்ப பக்தர் சுப்புராஜ்... ""40 ஆண்டுகளாக சபரிமலைக்கு வருகிறேன். இதுவரையிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பக்தர்களுக்கு போலீசார் கொடுக்கும் நெருக்கடியைப் பார்க்கும்போது "இனிமேல் சபரிமலைக்கு வராதீங்க' என்று கேரள அரசு சொல்வதுபோல் உள்ளது. நிலக்கல்லில் இருந்து சன்னிதானத்துக்கு போயிட்டு திரும்ப நிலக்கல்லுக்கு வர அரசுப் பேருந்தில் பஸ் டிக்கெட்டுடன் நேரத்தையும் குறித்து தருகிறார்கள். இதுவரையிலும் இப்படி ஒரு நடைமுறை இருந்தது இல்லை. ஐயப்பனை தரிசித்துவிட்டு நெய் அபிஷேகம் செய்வதற்கு முன்னே போலீசார் வந்து "கிளம்புங்கடா... கிளம்புங்கடா...' என ஒருமையில் திட்டி துரத்துறாங்க. சபரிமலையில் எவ்வளவு கூட்டம் நெரிசல் இருந்தாலும் எந்த பக்தரும் போலீஸ் உதவியைக் கேட்கமாட்டார். அந்தக் கூட்டத்தில் சிக்கி இடிபட்டு கடைசியில் ஐயப்பனை பார்க்கும்போது மனசுக்குள் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி... அது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. இப்போது எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை''’’ என்கிறார்.
"சபரிமலையின் முக்கிய அம்சமே, விண்ணைப் பிளக்கும் சரண கோஷமும் கால் கடுக்க வரிசையில் நிற்கும் பக்தர்களின் நெரிசலும்தான். அது இப்போது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது. வன்முறைப் போராட்டத்தால் ஏற்பட்ட குழப்படிகளால், சன்னிதானத்தில் இருந்து நிலக்கல்வரை தேவசம்போர்டுக்கு சொந்தமான 222 கடைகளில் 90 கடைகளும் எருமேலியில் 65 கடைகளில் 32 கடைகளும்தான் ஏலம் போயிருக்கின்றன.
பக்தர்கள் வருகையும் மிகக்குறைவாக இருப்பதாலும், சன்னிதானத்தில் பக்தர்களை தங்க அனுமதிக்காததாலும் ஏலம் எடுத்த கடைகளில் வியாபாரமும் இல்லை. எனவே, வியாபாரிகள் லாபக்கணக்கு நோட்டில் நஷ்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சன்னிதானக் கடைகளின் வியாபாரிகள் கூறுகிறார்கள். பம்பை, நிலக்கல் வியாபாரிகளின் நிலைமையும் இதுதான்'.
-மணிகண்டன்