கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவாசனூர் கோட்டை காவல் நிலைய எல்லையில் உள்ளது எஸ்.மலையனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் பி.இ. பட்டதாரி அண்ணாமலை மகன் ராமர். தன் மீது காவல்துறையால் பொய் வழக்குப் போடப் பட்டுள்ளதாகக் கூறும் இவர், தனது தரப்பை நம்மிடம் விவரித்தார்.
"கடந்த 23-5-2021 அன்று ஊரிலுள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதற்காக அதிலுள்ள மரங்களை வெட்டினார்கள். இதைப் பார்த்த நான், சம்பந்தப்பட்ட உளுந்தூர்பேட்டை வட்டாட்சியருக்கு போன் செய்து தடுத்து நிறுத்துங்கள் என்று போன்மூலம் தகவல் கூறினேன். அவர்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அன்று நான் எனது கணினி மையத்திற்காக எனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தேன். தெருவைக் கடப்பதற்குள் எங்கள் ஊரைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது மனைவி காந்திமதி, ஜெயபாலன், அவரது மனைவி விஜயசாந்தி, ரூபேஷ், மகேந்திரன், ஏழுமலை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் என்னை வழிமறித்து அசிங்கமாகத் திட்டியதுடன் இரும்புத் தடியால் தாக்கி, முன்பல் உடையுமளவுக்கு காயம் ஏற்படுத்தினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி உளுந்தூர்பேட்டை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்
தகவல் தெரிந்து எலவாசனூர் போலீசார் என்னிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர். உடல்நலம் தேறியபிறகு காவல் நிலையம் சென்று சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் அவர்களிடம் எனது புகார் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை குறித்து கேட்டேன். அவர்களுடன் சமாதானமாகப் போகவேண்டுமென்று சப் இன்ஸ்பெக்டர் என்னை வற்புறுத்தினார்.
இதனால் நான் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரளித்தேன். அதுசம்பந்தமாக விசாரணைக்கு வருமாறு எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்துக்கு அழைத்தனர். அங்கு சென்றதும் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் என் மீதே நீ புகார் கொடுக்கிறாயா என்று ஆத்திரப்பட்டதுடன் எதிர்த் தரப்பினரிடமிருந்து ஒரு பொய்யான புகாரை வாங்கி என்மீது ஒரு வழக்கை பதிவுசெய்தார்.
பொய் வழக்கு போட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறி, மீண்டும் உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் ஆகியோரிடம் புகாரளித்தேன். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மணிமொழியன் அவர்களிடமும் நேரடியாக மனு அளித்தேன். நான் எனது மனைவி எங்கள் கைக் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்துள்ளோம்''’ என்று மனவேதனையோடு குமுறித் தீர்த்தார்.
எஸ் மலையனூர் ராமரின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட எலவாசனூர்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கத்திடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.
அவர் நம்மிடம், "பொது இடத்தில் மரம் வெட்டியது சம்பந்தமாக ராமர் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அது சம்பந்தமாக அவருக்கும் ஆறுமுகம் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெயபாலன் மனைவி விஜயசாந்தியை கடுமையான வார்த்தைகளைப் பேசி மிரட்டியுள்ளார். அதனால் ஜெயபாலன் மனைவி விஜயசாந்தி கொடுத்த புகாரின் பேரில் ராமர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்மீது ராமர் கொடுத்த புகாரின் மீது ஆறுமுகம், ஜெயபாலன், ஏழுமலை, ரூபேஷ் உட்பட எட்டுபேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் என்மீது உயர் அதிகாரிகளுக்கு எழுதிய புகார் சம்பந்தமாக அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்தியுள்ளனர்''’என தன் தரப்பைக் கூறினார்.
சமூக ஆர்வலர் ராமருக்கு உரிய நீதி கிடைக்குமா?