பணிச்சுமையில் தொடங்கி தற்கொலை வரை போலீஸ்துறையில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையை தடுக்கும் வகையில் 4-வது போலீஸ் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையம் போலீஸ்துறையில் பொது வாக உள்ள பிரச்சினைகள், போலீஸ் அலுவலர்கள், அதிகாரிகள், வீட்டு வசதி மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அதிரடிப்படையினர் பிரச்சினைகள், போக்கு வரத்து ஒழுங்குபடுத்துவோர், குற்றங்களை கண்டு பிடிப்போர், குற்றத் தடுப்பு, போலீஸ் துறையை நவீனப்படுத்துதல், பொதுமக்கள், அரசியல்வாதி கள், போலீசார் இடையே உள்ள தொடர்பு உள் ளிட்ட அரசுத்துறைகளின் பணிகளை கவனிக்கும். குறைகளை அரசிடம் தெரிவித்து அதனை முறைப்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.
இந்த நிலையில் 1969, 1989, 2006 ஆகிய வருடங்களில் மூன்றுமுறை தி.மு.க. ஆட்சிக் காலத் தில் கலைஞரால் அமைக்கப்பட்டதே இந்த ஆணையம். முதல் ஆணையம் தொடங்கி மூன்றாவது ஆணையம் வரையிலும் மேம்பட்ட தகவல் தொடர்பை உருவாக்குவதிலும், பெண் போலீஸை நியமிக்கலாம் என்பதிலும், போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாரில் தலைமைக் காவலர் பதவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவிகளை உருவாக்கி அதன் தரத்தை மேம்படுத்துவதிலும் முனைப்பு காட்டியுள்ளது. ஆனால் அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அது நீர்த்துப் போனதின் விளைவாக பத்து ஆண்டுகளில் 525 காவலர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று ஆய்வு சொல்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியதின் விளைவால் 2018-ஆம் ஆண்டு ஜூன்26-ஆம் தேதி அன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "4-வது ஆணையம் அமைக்கப்படும்' என்று அறிவித்தார். அதன்படி 18-10-19 அன்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷீலாபிரியா தலைமையில் 4-ஆவது போலீஸ் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், முன்னாள் இணை செயலாளர் அறச்செல்வி ஆகி யோர் உறுப்பினர்களாகவும், சைபர் க்ரைம் போலீஸ் கூடுதல் இயக்குநர் வெங்கட்ராமன் உறுப் பினராகவும் செயல்படுவார் என்று அறிவித்தனர்.
அதேபோன்று தொடர் தற்கொலைக்கு பணிச்சுமையே முதல் காரணமாக இருப்பதாலும், போலீஸ் கமிஷனில் நீதியரசர் கிருபாகரன் தலைமையில் விசாரணைக்குட்பட்ட ஆடர்லி முறையையும் இதே ஆணையத்தின் கீழே கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவத்திடம் பேசியபோது, ""இந்தப் பணி முழுக்க முழுக்க காவல்துறையின் நலனுக்காவே என்பதில் எந்த மாற்றுகருத்துமில்லை. இது தொடர்பான அறிக்கை இன்னும் வரவில்லை. இன்னும் மூன்று நாட்களில் வந்துவிடும். அதன் பிறகு இதுதொடர்பாக தெரியவரும்''’என்றார்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணனிடம் இது குறித்து கேட்டபோது, ""இந்த ஆணையம் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நல்ல நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்ட இந்த ஆணையம் காவலர்களுக்கான ஆணையம் என நான் நம்பவில்லை. நான்கு மாதத்திற்கு முன்பாக ஒரு ஆணையம் முன்னாள் டி.ஜி.பி. நடராஜ், தலைமையில், சிறைத்துறை காவல்துறையை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்தபோது டி.கே. ராஜேந்திரன், நடராஜ் இடையே ஈகோ காரணமாக மூன்று மாதகாலமாக ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர் தூண்டுதலில் அரசே உச்சநீதிமன்றத்தில் இதற்கான ஸ்டே வாங்கி நிறுத்தி வைத்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கே முதுகெலும்பு போன்றவர்கள் கீழமை காவலர்கள். அவர்கள் பணிச் சுமையின் காரணமாக மன உளைச்சலால் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள். இதற்காக 1980-களில் 3ணீ கோடி மக்கள் தொகைக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் போலீஸ் இருந்தார்கள். ஆனால் தற்போது 7ணீ கோடி மக்கள் தொகைக்கு 2 லட்சம் போலீஸ்தான் உள்ளனர். 23 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. இதை சரிசெய்யாமல் எட்டுமணி நேர வேலைக்கு 15 மணி நேரம் வேலை என்பது படுமோசமானது.
ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தில் இருந்து 1 லட்சத் திற்கும் மேலானவர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் நுணுக்கமாக தடயங்கள் எதுவும் இல்லாமல் குற்றங்கள் செய்து வருகின்றனர். இக்குற்றங்களை தடுப்பதற்காக அறிவியல்பூர்வமாக வும் செயல்பாடுகள் இருக்கவேண்டும். ஆனால் உண்மையிலேயே இது காவலர்களுக்காக நன்மை பயக்குமா என்றால் நிச்சயம் கிடையாது. ஷீலாபிரியா போன்றவர்களுக்கு நன்மை பயக்குமே தவிர காவலர்களுக்கு கிடையாது'' என்றார்.
""இந்த ஆணையம் காவலர்களுக்கு வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. இவர்கள் ஆணையம் அமைத்தவுடனே அவர்களுக்கென்று தனி பாதுகாப்பு பந்தோபாஸ்த்து என, சொகுசு வாழ்க்கைக்கு செல்வார்களே தவிர காவல்துறை நலனுக்காக அடிமட்டத்தில் இறங்கி எப்படி வேலை செய்வார்கள் என்பது எங்களுக்கும் தெரியும்''’என்று மனம் நொந்து சொல்கிறார்கள் காவலர்கள்.
இவர்கள் சொல்வது போன்று இந்த ஆணையம் செயல்படப்போகிறதா? இல்லை, செலவிடப்போகிறதா!
-அ.அருண்பாண்டியன்