ழக்கமாக போலீஸ் எழுதும் திரைக்கதைதான், விகாஸ் துபேவுக்கான க்ளைமாக்ஸும். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட எட்டு போலீஸ்காரர்களைச் சுட்டுவீழ்த்திய, விகாஸ் துபேயை ஜூலை10-ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்து பழிக்குப் பழி தீர்த்துக் கொண்டுள்ளது உத்தரபிரதேச காவல்துறை.

vd

கிட்டத்தட்ட 60 வழக்குகளுக் காகத் தேடப்பட்ட உ.பி. தாதாவான விகாஷ் துபேயை பழைய வழக்கொன் றின் விசாரணைக்காக கைதுசெய்யப் போன போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட எட்டுப் பேரை விகாஸ் துபேயும் அவனது அடியாட்களும் ஜூலை 3-ஆம் தேதி கொடூரமாக கொலைசெய்தனர். ரத்தச் சகதியாகக் தோற்றமளித்த விகாஷ் துபேயின் கிராமத்துக்கு விரைந்த போலீஸ் படை அன்றைய தினமே விகாஷின் அடியாட்களான அதுல் துபே, பிரகாஷ் பாண்டே இருவரையும் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வைத்து தீர்த்துக்கட்டியது.

எஞ்சியவர்களைக் கைதுசெய்ய உ.பி. காவல்துறை மிகப்பெரிய படையைக் களத்தில் இறக்கியது. விரிவான திட்டங்களும், ரவுடிகளைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகைகளும் அறிவிக்கப்பட்டன.

Advertisment

போலீசுக்கு வந்த துப்பின் அடிப்படையில் மற்றொரு ரௌடியான அமர் துபே, ஹமீர்புரைச் சேர்ந்த மாதுவா கிராமத்தில் வைத்து அதிகாலை நேரத்தில் ஜூலை 8-ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டான். விகாஷ் துபேயின் நெருங்கி கூட்டாளியான பிரவீண் துபே ஜூலை 9-ஆம் தேதி எடாவாவில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டான். ஹரியானாவில் வைத்து கைதுசெய்யப்பட்டு, உ.பி.க்குக் கொண்டு வரப்பட்ட கார்த்தி என்ற பிரபாத் மிஸ்ராவும், தப்பிச்செல்ல முயன்றதாகச் சொல்லி சுட்டுக்கொல்லப் பட்டான்.

அடுத்தடுத்து தனது முக்கிய சகாக்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மத்தியப்பிரதேசத்திலுள்ள உஜ்ஜையினியின் பிரபலமான கோவிலான மகா காலபைரேஸ்வரர் கோவிலில் தானே முன்வந்து விகாஸ் துபே சரணடைந்தார். தனது வழக்கறிஞர் களிடம் ஆலோசித்த பிறகே சரண்டர் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

மகா காலபைரேஸ்வரர் கோவிலில் விகாஸ் துபே தன் சொந்தப் பெயரில் அர்ச்சனை சீட்டு வாங்கியதும், நான்தான் விகாஸ் துபே என்னைக் கைது செய்யுங்கள் என சத்தமாகக் கூறியபடியே கோவிலின் காவலரிடம் சரணடைந்ததும் இதற்கு ஆதாரமாகக் கூறப்படுகிறது. உ.பி. அரசு மற்றும் போலீஸ் துணையுடன்தான் பாதுகாப் பாக ம.பி.க்கு சென்றிருக்கிறான் துபே என சந்தேகங்கள் எழுந்தன.

Advertisment

துபே கைதான இரவு, அவர் சுட்டுக்கொல்லப்படமாட்டார் என உ.பி. காவல்துறையும், உ.பி. அரசும் உறுதி யளிக்கக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உஜ்ஜைனியில் இருந்து கான்பூர் கொண்டுசெல்வதற்கு உ.பி. காவல்துறை தயாரானது. இதையடுத்து சில செய்தி ஊடகங்கள் துபே சென்ற காவல்துறை வாகனத்தைப் பின்தொடர ஆரம்பித்தன. ஆனால், சுங்கச்சாவடி ஒன்றில் தொடர்ந்துவந்த ஊடக வாகனங்களும், பொதுவாகனங்களும் 20 நிமிடத்துக்கு மேலாக தடுத்து அனுப்பப்பட்டன. அவை மீண்டும் உ.பி. காவல்துறையின் வாகனங்களை எட்டுவதற்குள் விகாஷ் துபேயின் ஆயுள் முடிவுக்கு வந்திருந்தது.

வழியில் தொடர் மழைகாரணமாக விகாஷ் வந்த வாகனம் கவிழ்ந்துவிட்டதாகவும், அவனை வேறு வாகனத்துக்கு மாற்ற முயலும்போது, காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்து சுடமுயன்றதாகவும், போலீஸ் தற்காப்புக்காகச் சுட்டதில் துபே உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் மத்தியப்பிரதேசத்திலிருந்து உ.பி.க்கு விகாஷ் துபேயைக் கொண்டு செல்ல ட்ரான்ஸிட் ரிமாண்ட் ஏன் வாங்கவில்லை?

பத்திரிகையாளர் தொடர்ந்து வந்தபோது விகாஷ் துபே காணப்பட்ட வாகனமும், என்கவுண்டருக்குப் பின் கவிழ்ந்து கிடந்த வாகனமும் வேறு வேறாக இருந்தன. எப்போது விகாஷ் வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டார்?

விபத்துக்குப் பின் போலீஸிடமிருந்து துப்பாக்கியை பறிக்கும் நிலையில் துபே காணப்பட்டாரா…? தானாகவே சரணடைந்தவர் ஏன் பிறகு தப்பிக்க எண்ணவேண்டும்? என்ற கேள்விகளுக்கு உ.பி. போலீசிடம் பதில் இல்லை.

விகாஸ் துபே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால், அரசியல் காரணங்களுக்காக அவனால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் வெளியில் வரக்கூடும் என்ற காரணத்தால்தான் அவன் என்கவுண்டரில் தீர்த்துக்கட்டப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தியாவில் உள்ள எல்லா மாநில போலீஸ்துறையும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

-க.சுப்பிரமணி

_________________

அதிரடி காட்டிய தமிழக ஐ.பி.எஸ்.

vdவிகாஸ் துபேயின் சாம்ராஜ்யத்தை தேடி அழித்த உத்தரபிரதேச காவல் படைக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ்குமார்தான் தலைமை வகித்தார் என்ற செய்தி பெருமிதத்தைத் தந்திருக்கிறது.

தினேஷ்குமார், ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற 2009ஆம் வருடத்திலே நக்கீரன் குழும இதழான பொது அறிவு உலகத்தில் இவரது பேட்டி இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேலம் மாவட்டம் சின்னதண்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு, சுமித்ரா தம்பதியின் ஒரே மகனான தினேஷ்குமார், கோவை வேளாண் பல்கலையில் பி.எஸ்.சி. அக்ரி முடித்தவர். பின், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி 2009-ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் ஏ.எஸ்.பி. பொறுப்பில் நியமிக்கப்பட்டார். செகன்பூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்ட இவர் கடந்த மாதம்தான் கான்பூர் எஸ்.பி.யாக பொறுப்பேற்றார். ரவுடிகளுக்கு உளவு சொல்லும் போலீசாரை இடமாற்றம் செய்து, தனக்கு தோதான காவல்படையை உருவாக்கி இதனை சாதித்திருக்கிறார்.